புரியாத புதிராய்...

மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?

பறித்தல் தகுமோ?

மின்னலை பார்த்தால்
கண் பார்வை பறிபோகும் என்றார்கள்
நான் - உன்
புன்னகையை மட்டும் தானே
கண்டேன் - பிறகு ஏன்
என்னையே பரிதவிக்க பறித்துசென்றாய்?

பிரியமானவளே!...

சாதி எனும் சம்பிரதாய சடங்குகளில் - என்
பிரியமானவளின் பிரிய காதலை
சமாதியாக்கிய என் அவல சமுதாயமே!...
பிரியமானவளின் கரங்களுக்குள்
பிரியமுடன் ஒருநொடி வாழ்ந்ததுண்டா?
பிரியமானவளின் மூச்சு காற்றை
பிரியத்துடன் சுவாசித்ததுண்டா?
பிரியமானவளின் நெருக்கத்தின் சூடு
பிரியத்துடன் அனுபவித்ததுண்டா?
பிரியமானவளின் நினைப்பே மகிழ்ச்சியடைய வைக்குமே
பிரியத்துடன் மனதில் அதை உணர்ந்ததுண்டா?
பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும் - இதோ என்
பிரியமானவளிடம் நான் பிரியமுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!..
வரும் தலைமுறையாவது தழைத்திட
சாதி மதமற்ற சமத்துவ காதலை
பிரியமுடன் வாழ வைப்போம்

மறத்தல் தகுமோ

உன்னை நீ மறக்க சொன்னாய் என்பதற்காக
உன்னை மறக்க நினைத்து; யதார்த்த
வாழ்வில் கால் பதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் - நீ
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பாக
பள்ளிமாணவியின் பயமில்லா செயலில்
கல்லூரிமாணவியின் செல்ல சில்மிசங்களில்
இளமங்கைகளின் வெட்க நாணத்தில்
தாயின் பாசத்தில் பரிதவிப்பில்
தந்தையின் அன்பில் அக்கரையில்
ஆசானின் கண்டிப்பிலும் வழிகாட்டுதலிலும்
இப்படி என் எதிர்படும் எல்லோரின்
ஏதோ ஒரு செயலில் உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறாயேடி - பிறகு
எப்படியடி உன்னை நான் மறக்க இயலும்?

கரைசேர்ப்பாயா

என் எண்ணங்களில் நீந்தி
என்னுயிரை எடுத்து சென்றவளே!
என் நரம்புகளில் நடனமாடி
என்னின் ஒவ்வொரு நாழிகையிலும்
என்னையே தின்றவளே!
என்னின் இரத்தநாளங்களின் ஊற்றாக
என்றும் இருந்தவளே! - இதோ
இன்று நீயில்லாமல்
என்னுடல் ஜீவனில்லாமல் வாழ்கிறதடி!
எல்லோருக்கும் பிரியமானவளே
என்னை கரைசேர்ப்பாயா - இல்லை
கல்லறையில் தான் காண்பாயா?

பிரிவு

தித்திக்கும் உன் பேச்சால் திரும்பிய
திசையெங்கும் நட்பினை நீ பெற்றாய்!
எந்த சூழலிலும் உன் சிரிப்பால்
எல்லாரையும் கலகலப்பாக்குவாய்! - ஆம்
மலர்ந்த உன் முகத்துக்கு
மகுடமாய் உன் சிரிப்பு!
உன் சுற்றத்தை எப்போதும்
மகிழ்வுடன் இருக்க செய்தவளே!..
அனைவரின் முகத்திலும் எந்நேரமும்
புன்னகையை பொன்னகையாக்கியவளே!
என் புன்னகையை மட்டும்
உன்னுடனே எடுத்து சென்று
என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியதேனடி?
எனக்கானவளாய் நீ இருந்தும்
என்னவளாக நீ மாறாமல் போனதேனடி?

பூண்டி அய்யா...


(26-11-09 அன்று எனது நண்பர் சரவணன் திருமணத்தை நடத்தி வைக்க ஒரத்தநாடு வந்த பூண்டி அய்யாவை வரவேற்று எழுதிய கவிதை)

ஏழை பணக்காரன்
ஏதும் உனக்கு தெரியாது
படிக்கணும் என வந்தால்
பல்லக்கில் வைக்க தயங்கியதில்லை நீ
காந்தியத்தை கற்று தர
கற்கும் மாணவனின் நலமறிய
கால்வலிக்க நம்மின்
கல்லூரியை சுற்றிவர தயங்கியதில்லை நீ
சில நேரம் தகப்பனாக,
பல நேரம் தாயாக,
எப்போதும் எங்கள் குருவாக
இப்போதும் வழிகாட்டியாக
என்றென்றும் நல்ல தோழனாக
எம்மை செழுமை படுத்தும்
எங்கள் அய்யாவே - இன்று
உங்கள் மாணவனின்
திருமணத்தை நடத்தி
வைக்க வருகைதரும்
உங்களை வரவேற்பதில்
உங்களால் வளம் காணும்
உங்கள் மாணவர்கள்
நாங்கள் பெருமையடைகிறோம்

தாய்மை...

கண்ணே!..
நம் அன்பின்
அடையாளத்தை ஈன்றெடுக்க
பத்து மாதம் - நீ
பட்ட அவஸ்தைகளை
பக்கத்திலிருந்து
பார்க்க மட்டும்தானே
முடிந்தது - உன்
கஷ்டங்களில் பங்கெடுக்கும்
பாக்கியமில்லாமல் போனதேனடி!

பூண்டி அய்யா


(பழைய தஞ்சை மாவட்டத்துக்கு கல்வியை இன்றும் இலவசமாய் தரும் எங்கள் கல்வி தந்தை பூண்டி அய்யா  (தாளாளர், பூண்டி திரு புஷ்பம் கல்லூரி))


எளிமையின் திருஉருவே!..
எங்களின் குருவே!..
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு - ஆனால்
உம்மால் வளர்ந்ததே
எம் சிறப்பு!...
காந்தி நம் தேசப்பிதா
நீங்கள் எங்களின் பிதா!...
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
ஆனால் - நீங்கள்
அணிந்ததால் அது
காவியமாகிறது!..
உங்கள் பேச்சாற்றல்
எங்களை சிந்தனைவாதியாக்கியது!..
உங்களின் வாழ்வுமுறை
எம்மை சாதிக்கதூண்டியது!...
எவ்வளவோ எமக்கு
கற்றுதந்தீர்...
இவ்வளவும் உம்மிடம்
பயின்ற பின்பு
நாங்கள்
தலைநிமிரா விட்டால்
தவறில்லையா அய்யா?...
உங்கள் மாணவர்கள்
நாங்கள் - தலைநிமிர்ந்தே
நடப்போம் - உம்மின்
ஆசியோடும்...
வழிகாட்டுதலோடும்....

நான் பிறந்த மண்...

காலை பனியில் கால்தடம் பதித்து

கவலையின்றி வயல்வரப்புகளில்

நெல்மனமும் மண்மணமும் நுகர்ந்து

நெருங்கிய தோழனோடு பகிர்ந்துண்டு

பள்ளி சென்ற காலங்களும் - விடுமுறையின்

பாதிபொழுதை குளத்திலும் மீதி நேரத்தை

விளையாட்டுமாய் வாழ்ந்த நாம்

வீரம்விளைந்த மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா..?

அதனால் தான்

உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு...,

உள்ளத்தில் ஒரு மகிழ்வு...,

என் மண்ணை நினைத்ததும்!


(இக்கவிதைக்கான விதையை தந்த மலர்விழி அக்காவுக்கு நன்றி)

இலக்கு

எவ்வளவோ முயற்சித்தும்
எட்டிப்பிடிக்க இயலாத
நிலவாகவே உள்ளாயே!....
என்ன செய்து
உன்னை அடைவேன்
என் கண்ணம்மா?....

வெற்றிடம்...

என் கனவுகளின் தேவதையே!..
உன்னால் ஏற்ப்பட்ட வெற்றிடம்
ஒரு கோடி பேரின் ஒட்டுமொத்த
அன்பால் கூட நிரப்ப முடியாதடி!...

கனவுகளின் தேவதையே!...

நாழிரண்டு வருடங்களாய் - நீ
நடத்திய கனவு கண்ணாம்பூச்சியில்
நீண்ட உன் கரிய கூந்தலுடன்
கண்மையிட்ட காந்த கண்களுடன்
ஆப்பிள் பழ கன்னத்துடன்
முத்தரிசி பல்வரிசையுடன்
செர்ரிபழ உதடுகளால்
உன் சின்ன சிரிப்பில்
என் செல்ல மனசை
கொள்ளை கொண்டவளே!...
நேரில்!..
என்னருகில் நீயிருந்த
இந்த இருநாட்களும்
இரண்டு ஆயுள் வாழ்ந்த
இன்பம் இருக்குதடி!...

உன்னருகில் நான்...

எந்நேரமும் புன்னைகையுடன்
எல்லோரையும் அரவணைத்து - நீ
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை
இருக்க செய்பவளே!... - ஒரு
நாழிகை உன்னருகில்
நானிருந்தால்...
ஒரு யுகம் வாழ்ந்த
அர்த்தம் கிடைக்குதடி!...

மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..

ஏழுமுறை எம்தலைவனை
ஏற்கனவே கொன்ற
எமகாதகர்களே!...
எம்மின அடையாளம்
எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது!...
விடுதலை போராட்டத்துக்கு
விடிவு ஒன்றே தீர்வு!...
தமிழர்களின் தாகத்திற்கு
தமிழீழம் மட்டுமே முடிவு!...
வீழ்ச்சி எமக்கு புதிதல்ல
வீழ்வதும் மீண்டு எழுவதும்
விடுதலை புலிகளின் இயல்பு!...
இழந்த எம் தாய் மண்ணை மீட்டெடுக்க
இறந்ததாய் நீவிர் சொல்லும்
தமிழீழ நாயகன்
மீண்டு(ம்) வருவான்!...

வாய்ப்பு...

குங்கும நிறத்தவளே
உன் பொற்பாதங்களில்
தவழும் முத்தழகு கொலுசாக
வாழ்வின் இறுதிவரை
வந்திடும் வாய்ப்புதனை
தந்திடுவாயா

கோபம்..

பாசமிருக்கும் இடத்தில தான்
கோபம் இருக்கும் - என
கேள்வி பட்டதுண்டு!.. - ஆனால்
உன் மீது நான் வைத்த பாசத்தால்
கோபம் என்னவென்பது கூட
மறந்தேன் என் அன்பே!...

வெல்வோம் தமிழீழம்...

ஒன்றாய் இரண்டாய்
ஒவ்வொருவரும் ஓரனியில்
எம்மின அடையாளமே!...
எங்களின்தலைவனே!...
உன் அடி பற்றி
உன் தலைமையில்
மாவீரர் தின சபதமேற்று
நம்மின தாகம் தீர்க்க
நம் மண்ணை மீட்டெடுக்க
மீண்டும் அணிதிரள்வோம்
பகைவர் படை அகற்றி
வஞ்சகர் முகம் கிழிக்க
தலைவனின் வழிகாட்டுதலில்
புலியாய் புறப்படுவோம்.....
தமிழீழம் வெல்வோம்....
தரணியில் தலை நிமிர்வோம்!...

உன்னால் மட்டும்..

என்
செல்ல சகியே....
சின்ன சிலையே....
எடையில்லா இடையே...
நாலு பேரால் நான்
சுமக்கப்படும் நாள் வரை
வற்றாத உன் அன்பால் - இந்த
வையகத்தில் வானுயரம்
தொட செய்!...

என் சுவாசம்...

காதல் காற்றை போல
அதனால் தான் நேசிக்கிறேன்...
நீ என் உயிராய் போனாய்
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....

நீ ...

முக்கனிகளின் மொத்த சுவை
எக்கணமும் என்னின் துணை

என் எண்ணங்களாய் அமைந்தவள்...

சுண்டி இழுக்கும்
காந்த கண்கள்
சுகமாக வருடவரும்
கருமேக கூந்தல் - என
என் எண்ணங்களாக
எனக்கமைந்த
என்னவள் தன்
விருப்பமென சொன்னவை
எல்லாமே என்
விருப்பமாய் இருந்தது
இதை விட வேறென்ன
வேண்டுமெனக்கு!...

முதல் அறிமுகம்...

ஊதா நிற வானத்தில் தென்படும்
வெண்ணிற மேகங்கள் போல
பால் நிறத்தவளே!...
வெளிர்நீல புடவையில்
சங்கரன் குடியிருக்கும் ஊரினில்
செட்டிநாட்டு காரை வீட்டினுள்
கரைபுரண்ட சந்தோசத்துடன்
காளையிவனின் மனம் கவர்ந்த
காரிகையே - நீ
சின்ன சின்ன தேவதைகளுக்கு நடுவே
பேரழகியாக இன்முகத்துடன் - என்
குடும்பத்தினை வரவேற்று - உன்
குடும்பத்தினருக்கு அறிமுகபடுத்திய
நொடியினில் உன் கண்களில்
கண்ட ஆனந்தத்தில் - என் தாய்
அடைந்த பரவசத்தில் - நீ
என் தேவதைகளின் தேவதையாக
மாறிப்போனாய்!....

எனக்கானவள்....

என் வலைபக்கத்தின்
வசந்தங்களே!...
என் தோழர்களே!....
காதலை மட்டுமே
காதலித்து வந்த
என்னை
காதலியையும்
காதலிக்கும்
காதலனாக மாற்றிய
என் காதலியும்
வருங்கால மனைவியுமான
என் மோகனாவை
உங்களுக்கு
அறிமுகபடுத்துவதில்
ஆனந்தமடைகிறேன்!...

ஏமாற்றம்...

என் எண்ணங்களிலும்
சிந்தனைகளிலும் - நீ
இருந்ததினால் - என்
வாழ்வாய் வருவாய் என
எண்ணி இறுமாப்பு
கொண்டிருந்தேன்!...

என் எதிர்படும்
நேரங்களில் எல்லாம்
உன் உதட்டோர
புன்னகையால்
என்னுள் ஒரு
மாற்றத்தை ஏற்படுதி
என் வாழ்வின்
பரிணாமத்திற்கு வித்திட்டாய்
என் மார்தட்டி
மகிழ்ந்திருந்தேன்!...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
ஏதோ ஒரு பொழுதினில்
ஏழிரண்டு மாதங்களாய்
என்னில் வசந்தத்தை
வரசெய்தவளே!...
உன் வாசல் வந்து
என் காதல்தனை சொல்ல
எத்தனித்த வேளையில்
அருகினில் இருந்தவனை
அழைத்து - என் காதலன் என
அறிமுகபடுத்திய நொடியினில்
கல் பட்ட கண்ணாடி
போலானதடி - உன்னை
சுமந்திருக்கும் என இதயம்!.....

என்னவள்...


புதிதாய் தண்ணீர்
நிரம்பிய குளத்தினில்
தாமரை இதழ்களுடன்
மலர்ந்திருக்கும்
ஒற்றை அல்லி போல
என் மனதினில்
மோகனமாய் - நீ
மட்டும்!.....

எல்லாமும் நீயாய்....

என் தாயிடம் கண்ட

பாசமும் அரவனைப்பும்

என் தந்தையிடம் கண்ட

வழிகாட்டுதலும் கண்டிப்பும்

என் சகோதரனிடம் கண்ட

அன்பும் அக்கறையும்

என் நண்பர்களிடம் கண்ட

ஒற்றுமையும் உதவிகளும்

உன் ஒருத்தியால்

எனக்கு தர இயலுகிறதே

என்பதை என்னும் போது

என்னின் எல்லாமுமாக

நீயே தோன்றுகிறாய்!....

என் மோகனமே!....

உன்னால்.......

உன்னின் எழுத்துக்களை

பார்க்கும் பொழுதுகளில்

என்னில் எழும் உற்சாகம் …..

உன்னின் குரல்

கேட்கும் நொடிகளில்

என்னில் பரவும் சந்தோசம் …..

உன்னின் சின்ன சின்ன

செல்ல சீண்டல்களில்

என்னில் ஏற்படும் பரவசம்….

நாலெட்டு வருடங்களாய்

தவமிருந்து நறுமுகையே

உன்னை கண்டெடுத்ததன்

அர்த்தம் விளங்குதடி……

கைபிடித்து வருவாயா

கடந்து சென்ற பெண்களில்
கண் கொண்டு பாராமல்
காரணம் யாதுமில்லாமல்
காற்றினில் மிதக்க விட்டாய் – என் மனதினை.....
காலமெல்லாம் இந்த சந்தோசம்
கிடைக்க கண்மணியே - என்
கைபிடித்து வருவாயா
காற்றில் என் இறுதி
மூச்சு இருக்கும் மட்டும் …….

என் கவிதைகளின் நாயகி

வெற்று பக்கங்களாய்
இருந்த என்
வாழ்வு புத்தகத்தின்
மொத்த பக்கங்களையும் – தன்
அன்பாலும் பாசத்தாலும்
காதலாலும் வாசமுள்ள
வசந்தமான வாசிக்க
இயன்ற புத்தகமாக
மாற்றி அமைத்தவள் இனி வரும் என்

கவிதைகளின் கர்ப்பக விருச்சம்!...

வராமல் போனாயோ...

மாறத்தான் நினைக்கிறேன்
லயிக்கவைக்கும் அழகில்
தினமும் வந்து என்னை
மானசிகமாக வாழ்த்தி
லாவகமான வார்த்தைகளால்
தினமும் என் இதயம்
வருடியவளே - என் வாழ்வின் வழித்தடம்
முழுமையாய் காட்டியவளே
இறுதி வரை என்னுடன் வராமல் போனதேன்?

என்னவளே....

உன்னை
என் தோழி என்பதா - இல்லை
என் காதலி என்பதா - இல்லை
என் மனைவி என்பதா - இல்லை
என் தாயாக வந்தவள் என்பதா -
எதுவாயினும் -
என்னில் புது மாற்றத்தை
ஏற்படுத்தியவள் - நீ...
என்னில் புது வசந்தத்தை
வர செய்தவள் நீ...
கால சூழலுக்கு
பருவ மாற்றம்
எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியமானவள்
நீ எனக்கு!....


இரவெல்லாம் நீ....

நினைவுகளில் நீந்தி - ஒவ்வொரு
நித்திரையும் தின்று - என்
எண்ணங்களில் வாழ்கிறாய்!....
என் கண்ணம்மா!....

வரம்....

என் இறைவனின் சந்நிதானத்தில்
பூஜைக்கு வந்த அர்ச்சனை பூவே!...
நூறுமுறை உன்னை பிரிந்தாலும்
ஒருமுறை நம் மண்ணில் மறைந்தாலும்
மறுமுறை பிறக்கும் போது - உன்
அன்பும், நேசமும்; இதே காதலும்
வேண்டுமென்று -என்
இறைவன் முருகனிடம்
வரம் கேட்பேன்....

என்னவளின் தேடுதல்...

எனக்கே எனக்கானவளாக
என் சுவாசத்துக்குரியவளாக
என் இதயத்திலிருந்து
உயிர் கசியும் கவிதை
வரசெய்தவள் - இன்னும்
என் பார்வையின் தேடுதலில்......
புதிய புதிய
எழுத்துக்களை பொங்கும்
என் அழகு தமிழில் பிரசவிக்க....
அவள் என் எழுத்துகளின் தேடுதலில்.....

நான்...

இவன் காதலை மட்டுமே
காதலிக்க தெரிந்தவன்
காதலியை அல்ல!....
வீ. இளவழுதி

உன் வாழ்வில் நான்...

வழிப்போக்கனாய் உன்
வாழ்வினில் சென்றுவிடவா
இல்லை - உன்
மனக்காயங்களுக்கு மருந்திடும்
மனாளனாக வந்துவிடவா?

காதல்....

உலகத்து கவிகள் எல்லாம்

உன்னை பற்றி

ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்

பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட

அந்த கவிகளிடம் ஒவ்வொரு

எழுத்து இரவல் வாங்கி

உன்னை பற்றி ஒரு

வரி எழுதுகிறேன் - காதலே

நீ காற்றை போல !....

உன் நினைவுகள்….

விட்டு விட்டு
துடிக்கும்
இதயம் கூட
விடாமல்
துடிக்கும் - உன்னை
நினைத்து விட்டால்!....

உன் புன்னகை...

உனக்கென்ன
ஒரு பார்வை
பார்த்து
உதட்டோரம்
சிறு புன்னகை
சிந்தி சென்று
விடுகிறாய் - நீ!...
அம்மாவின்
கைபிடித்து செல்லும்
குழந்தை போல
உன்னையே
தொடர்ந்து வருகிறது
என் மனது!....

செவ்விதழாளே!...

செவ்விதழாளே!...
அடிக்கடி
நீ கொள்ளும் கோபத்தை
அன்றும் என் மீது
காட்டினாய் நீ!..
உன் பொய் கோபத்தை
ரசித்தபடி,
என் விரல்களுடன்
விளையாட...
அலை போன்ற
வளைந்து நெளிந்து
செல்லும் உன்
கூந்தலுக்கு
குடுப்பினை இல்லையோ
என கூறியதும் -
என்னை தவிர
வேறு ஒரு கேசத்தை
தொட்டுவிடுமா
உன் விரல்கள்
என செல்லமாக
என்னை அடிக்க
வரும் என் தேவதையைய்
அப்படியே அள்ளி
அணைத்துக்கொள்கிறேன் நான்!

கோபம்....

அவசர அலுவல்
நேரங்களில்
என்னிடம்
சொல்ல மறந்து நீ
அலுவலகம் விட்டு
செல்லும் சில
நாட்களில்
என்னில் எழும்
கோபம் - உன்
திருமுகமதனை
பார்த்த நொடியில்....
காலை பொழுதினில்...
கடற்கரை மணல்வெளியில்....
காற்றோடு களைந்து...
கவிதை பாடும் - உன்
கூந்தலை போல
கலைந்து விடுகிறது!...

சிந்திக்க வைத்தவளே...

நான் சிகரம்
தொட்டுவிட்டதாக
பாராட்டுபவர்களுக்கு
தெரியுமா...
என்னை -
சிந்திக்க
வைத்தவளே
நீ தான்
என்று!....

நீ.....

பொம்மை வாங்க
கடைக்கு சென்றபோது
உனக்கு என்ன
வேணும் என
கேட்ட
என் அப்பாவிடன்
உன்னை நோக்கி
கை காட்ட
நாணத்தால் சிவந்து
பொம்மைகளுடன்
பொம்மையாக
மாறிப்போனாய் - நீ!...

உன் கொளுசுகளின் ஓசை....


என்னை பெரிய
இசை கலைஞன்
என்பவர்களுக்கு
தெரியுமா?
நான்
ஏழு ஸ்வரங்களும்
கற்றது
உனது
கொளுசுகளிடம் தான்
என்பது!...

நட்சத்திரமே...

உலகத்து நட்சத்திரங்களை
எல்லாம் உனக்குள்
வைத்துக்கொண்டாயோ?....
நீ
சிரிக்கும் போது
அத்தனை
நட்சத்திரங்களும்
ஒளி(உதி)ர்கின்றனவே!...