புரியாத புதிராய்...

மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?

பறித்தல் தகுமோ?

மின்னலை பார்த்தால்
கண் பார்வை பறிபோகும் என்றார்கள்
நான் - உன்
புன்னகையை மட்டும் தானே
கண்டேன் - பிறகு ஏன்
என்னையே பரிதவிக்க பறித்துசென்றாய்?

பிரியமானவளே!...

சாதி எனும் சம்பிரதாய சடங்குகளில் - என்
பிரியமானவளின் பிரிய காதலை
சமாதியாக்கிய என் அவல சமுதாயமே!...
பிரியமானவளின் கரங்களுக்குள்
பிரியமுடன் ஒருநொடி வாழ்ந்ததுண்டா?
பிரியமானவளின் மூச்சு காற்றை
பிரியத்துடன் சுவாசித்ததுண்டா?
பிரியமானவளின் நெருக்கத்தின் சூடு
பிரியத்துடன் அனுபவித்ததுண்டா?
பிரியமானவளின் நினைப்பே மகிழ்ச்சியடைய வைக்குமே
பிரியத்துடன் மனதில் அதை உணர்ந்ததுண்டா?
பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும் - இதோ என்
பிரியமானவளிடம் நான் பிரியமுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!..
வரும் தலைமுறையாவது தழைத்திட
சாதி மதமற்ற சமத்துவ காதலை
பிரியமுடன் வாழ வைப்போம்

மறத்தல் தகுமோ

உன்னை நீ மறக்க சொன்னாய் என்பதற்காக
உன்னை மறக்க நினைத்து; யதார்த்த
வாழ்வில் கால் பதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் - நீ
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பாக
பள்ளிமாணவியின் பயமில்லா செயலில்
கல்லூரிமாணவியின் செல்ல சில்மிசங்களில்
இளமங்கைகளின் வெட்க நாணத்தில்
தாயின் பாசத்தில் பரிதவிப்பில்
தந்தையின் அன்பில் அக்கரையில்
ஆசானின் கண்டிப்பிலும் வழிகாட்டுதலிலும்
இப்படி என் எதிர்படும் எல்லோரின்
ஏதோ ஒரு செயலில் உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறாயேடி - பிறகு
எப்படியடி உன்னை நான் மறக்க இயலும்?

கரைசேர்ப்பாயா

என் எண்ணங்களில் நீந்தி
என்னுயிரை எடுத்து சென்றவளே!
என் நரம்புகளில் நடனமாடி
என்னின் ஒவ்வொரு நாழிகையிலும்
என்னையே தின்றவளே!
என்னின் இரத்தநாளங்களின் ஊற்றாக
என்றும் இருந்தவளே! - இதோ
இன்று நீயில்லாமல்
என்னுடல் ஜீவனில்லாமல் வாழ்கிறதடி!
எல்லோருக்கும் பிரியமானவளே
என்னை கரைசேர்ப்பாயா - இல்லை
கல்லறையில் தான் காண்பாயா?

பிரிவு

தித்திக்கும் உன் பேச்சால் திரும்பிய
திசையெங்கும் நட்பினை நீ பெற்றாய்!
எந்த சூழலிலும் உன் சிரிப்பால்
எல்லாரையும் கலகலப்பாக்குவாய்! - ஆம்
மலர்ந்த உன் முகத்துக்கு
மகுடமாய் உன் சிரிப்பு!
உன் சுற்றத்தை எப்போதும்
மகிழ்வுடன் இருக்க செய்தவளே!..
அனைவரின் முகத்திலும் எந்நேரமும்
புன்னகையை பொன்னகையாக்கியவளே!
என் புன்னகையை மட்டும்
உன்னுடனே எடுத்து சென்று
என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியதேனடி?
எனக்கானவளாய் நீ இருந்தும்
என்னவளாக நீ மாறாமல் போனதேனடி?