தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஒட்டு மொத்த குடுபத்தினரும்
ஒருசேர குழுமும் ஒருநாள்
புத்தாடை உடுத்தி - தம்வயலில்
புதிதாய் விளைந்த  அரிசியினால்
தித்திக்கும் கரும்பு துணையிருக்க
திகட்டாத வெல்லத்துடன் - கொத்து
மஞ்சளும் முந்திரியும் திராட்சையும்  
மனம் பரப்ப - விவசாயியின்
அனைத்து விளை பொருளும்
அடுப்படிக்கு வந்து சேர
குடிசை தொழிலை ஊக்குவிக்க
குழைத்த மண்கொண்டு செய்த
புதிய மண்பானையில்- மனமகிழ்ச்சியோடு
புதிதாய் பொங்கும் பொங்கல்...
சூரியனுக்கும் கால்நடைகளுக்கும்
ஊருணிக்கும் ஊருக்கும் - என
எம்தொழிலுக்கு உதவும்
எல்லாருக்கும் நன்றி சொல்லி
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட - இனியும்
ஏமாறாமல் நம் உரிமை காத்திட
தமிழனாய் ஒன்றுபட்டு சபதமேற்று
தமிழர் திருநாளை  கொண்டாடிட
அனைவருக்கும் வாழ்த்துகள்.. 

உறவுகளின் நினைவுகள்...

எல்லா  இழப்புகளும்
எப்படியாவது நம்மை
அதன் தாக்கத்திலிருந்தும்
அந்த  நினைவுகளிலிருந்தும்
மீட்டு விடுகிறது!..

வாழ்வின் போராட்டத்தால்..
வாழவேண்டிய நிர்பந்தத்தால்..
நண்பர்களின் நேசத்தால்..
நல்லவர்களின் பாசத்தால்..
மீண்டோ; மறந்தோ போகிறோம்

எல்லோரும் ஒருமித்து
எதிர்காலத்தை நோக்கி  
நிகழ்காலத்தில் ஓடுகையில்
இறந்தகாலம் தந்த எல்லா
இழப்புகளும் மறந்துவிடுகிறது..

வாழ்வுதந்த தந்தை..
வழிநடத்திய அண்ணன்..
அரவணைத்த தாத்தாபாட்டி - என
அனைத்து உறவுகளின்
நினைவுகள் கூட
நிழல்படத்துடனே நின்றுவிடுகின்றன..

எங்கள் தேசம்...

பல அடுக்கு மாடி
கட்டிடங்கள்...
பறந்து விரிந்த பசுமையான
தரைத்தளங்கள்....
குப்பை இல்லா தூய்மையான
சாலைகள்...
சாக்கடை இல்லாத சுத்தமான
வீதிகள்...
குளு குளு வசதியுடன்
பேருந்துகள்...
குறித்த நேரத்தில் வரும்
ரயில்கள்...
நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும்
நடைபாதைகள்...
விளையாட குறிப்பிட்ட தூரங்களில்
இடவசதி...
வீதிக்கு ஒரு  பூங்கா...
வீட்டுக்கு அனுப்ப பணம்...
என எல்லா வசதிகளும்
இந்த அந்நிய தேசத்தில்
இருந்தாலும்....
அன்பாய் நேசம் விசாரிக்க
அண்டை வீட்டில் ஆளில்லை!...
அக்கறையாய் திட்ட  எந்த
பெரியவர்களும் இல்லை!...
உறவுகளை வீட்டுக்கு கூப்பிட
உரிமை இல்லை!...
தடுமாறும்போது தூக்கி  நிறுத்தும்
நண்பர்கள் இல்லை!...
அரவணைக்கும் சுற்றம் இல்லை!..
அன்பு கொள்ள பெற்றோர் இல்லை!...
குப்பையாய் இருந்தாலும்...
சாக்கடையில் நடந்தாலும்
எங்கள் தேசத்துக்கு நிகராகுமா
இந்த அந்நிய தேசம்!...  

தலைவன்...

மன்னராட்சியில் அன்று
மன்னன்  என்பவன்
தன்னலம் கருதாமல்
தன் மக்கள் நலம்
பேணியவன்!...

குடியாட்சியில் இன்று
தலைவன் என
முன்னிருத்த படுபவர்கள்
தன் குடும்ப நலமே
முக்கியமென நினைப்பவர்கள்!...

 அத்தி பூத்தார்ப்போல
அவதரிக்கும் உண்மை தலைவனை..
மக்களுக்குக்காக தன் கட்சி
மரியாதைகளை உதறித்தள்ளும்
மனிதனை  - இக்காலம்
நமக்கு தருகிறது - அவர்களை
நாம் தான் இனம் கண்டு
நாளைய நாயகனாய்
நம் இனம் வளர வாழ
நாம் போற்றி வரவேற்க வேண்டும்!..