அம்மா...

கருவாய் சுமந்து
கண்ணாய் காத்து
சிறுவயதில் சிங்காரித்து
இளவயதில் பொறுத்து
உன் வாழ்வை தொலைத்து
என் வாழ்வையே
உன் வாழ்வாய் வாழ்ந்தவளே! ...

என் மகளை சுமக்கும் - இந்த
என் தாய்மையில் தான்
உணர்கிறேன் அம்மா...
என் மீதான...
உன் அக்கறையை...
உன் மகிழ்வுகளை...
உன் பதற்றத்தை...
உன் பாசத்தை...

 

தமிழாய் நிமிர்ந்திடு!..

முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட்   என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்
நம்மை சுற்றி நடக்கும் எந்த பிரச்சனையிலும்
கவலையின்றி - தன்னைப்பற்றி மட்டுமே
முன்னிறுத்தி தனிமனித வாழ்வுக்கு
பழக்கப்பட்டு போன -
இந்திய தேசத்தின் இதயங்களே!..
தேசபக்தியின் மொத்த உருவங்களே!..
என் தமிழர்களே!
உங்கள் தமிழகத்தின் நலன்
ஒவ்வொன்றாய் நசுக்கப்பட
ஒவ்வொரு உரிமையாய் பறிக்கப்பட
ஒரு நாள் உன் தனிமனித வாழ்வு
கேள்வியாக்கப்படும் போது... - நீ
தோள்  சாய கூட ஆளில்லாமல்
ஒத்தைமரமாய் நிற்க்கப்படும் சூழல் வரும்
எனவே - இன்றே
தமிழாய் நிமிர்ந்திடு!..
தமிழனாய் வாழ்ந்திடு !..