வாகை சூடும் தமிழன்

கர்நாடகாவில் காங்கிரஸ் வருமெனில்
காவேரி வற்றவும் செய்வோம்..
ஆந்திராவில்  காங்கிரஸ் ஆட்சிஎனில்
ஆத்திரப்பட்டாலும் பாலாறு வராது..
ஒருதொகுதி கிடைத்தாலும் கேரளாவில் -
ஒருசொட்டு  வராது முல்லைபெரியாரில்..
மக்களின் எழுச்சியில் வேண்டாம்  என்றாலும் எங்கள்
ம(ப)னம் கு(து)ளிர அனல்மின் நிலையம் தருவோம்..
தமிழன் எது கேட்டாலும் இல்லை என்போம்
தமிழ்மண்ணை  பாதுகாப்பில்லா  பரிசோதனைக்கு உட்படுத்துவோம்..
போராடும் தலைவர்களை உள்ளே போடுவோம்
பேட்டி தரும் தறுதலைகளுக்கு பெட்டி தருவோம்..
ஓட்டு போட்ட மக்களின் வாய்களுக்கு
பூட்டு போடுவோம்!.. மீறி  போராடினால்
கொலவெறி பாடும் நடிகருக்கு
கொத்துபரோட்டா விருந்து வைப்போம்..
இன்னும் போராடினால் ஒரு நடிகையின்
இடுப்பை காட்டி கலாச்சாரம் காணமல் போனதென்போம்..
மானத்தோடு போராடும் தலைவன் கிடைக்கபெற்றால்
மறைந்திருந்து அந்த தலைவனை கொல்ல பார்போம்..
என்றெல்லாம் கொக்கரிக்கும் காங்கிரசின் தலைமைக்கு
எங்கிருந்தோ வந்தவர்  தலைவியாம்...
மானமுள்ள மனிதர்களே இன்னும் நீங்கள்
மங்கி கொண்டிருக்கும் காங்கிரசில்
இருந்தால் குறித்துகொள்ளுங்கள்
இங்கிருந்து தான் உங்களின்
அழிவு ஆரம்பமாகிறது...
ஆண்ட தமிழன் தான் உங்களை
அடிச்சுவடு காணமல் விரட்ட போகிறான்
புறப்பட்ட மக்கள்படை புதிய
புலிப்படையாய் வெற்றி வாகை சூடும்
புதிய ஆண்டில், புது வெற்றியோடு!...

வாழ்வோடு நீ

உன்னை பார்க்க பார்க்க
உள்மனதில் ஒரு குதுகலம்  
உன்னோடு பேச பேச
உயிரினில் ஒரு பரவசம்
உன்னோடு வாழ்தலை நினைக்கையில்
உயிரோடு ஒரு சொர்க்கம்!..

ஏனடி சென்றாய்...

அர்ச்சுனனின் வில்லை 
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்  
உன் இதழ்களில் பார்க்கவைத்து
ஏதும் அறியாதவனாக
ஏதோவென்று வாழ்ந்தவனை
எல்லாராலும் அறியபட்டவனாக்கி
என் வாழ்வினில்  வந்து
ஏதும் அறியாதவள்  போல
ஏனடி சென்றாய்? 

அழகின் ஊற்றே...

ஊட்டி மலர்தோட்டத்தில்
உள்ள பூக்களெல்லாம்
உன் முகம் பார்த்த நொடியில்
தன் தலை தாழ்த்தி கொள்கிறது

நாணல் செடி கூட நாணத்தால்
நன்னிலம் நோக்கி தலைசாய்க்கிறது
உன் நாணத்தின் நளினம் கண்டும் 
உன் கொடியிடை அழகில் மயங்கியும்

இயற்கையே உன்னை பார்த்து
இறக்கையில் ஒண்ணுமே இல்லாத
இந்த இளைஞன் எம்மாத்திரம்....  

தரிசனம்...

ஆயிரமாயிரம் கவிதைகள்
அடுத்தடுத்து வருகின்றது
அமைதியான உன் கண்களை 
அருகினில் தரிசிக்கும் போது....

கேள்வி?...

ஆயிரமாயிரம் மைல்களுக்கு
அப்பால்  இருந்தபோது
உன்னில் நான்கண்ட
உள்ளமுருகிய காதல்
உன்னருகினில்
வாழ்ந்திடும்போது
வாய்க்காதது ஏனோ? 

பிரிவு..


அழும் குழந்தை கூட
அழகாய் சிரிக்கும்;
உன் உதட்டோர
உயிர் புன்னைகையால்...
கருணை நிரந்த
காந்த கன்னழகியே...
புதிதாய் பூத்த பூப்போல
புத்துணர்ச்சியுடன் எப்போதும்
வலம் வர தெரிந்தவளே!...
வாழும் நாள் வரை 
வலிதரும் பிரிவு தந்ததேனடி?  

வேறுபாடு..

உன்னை சிந்திக்கும் தருணங்களில்
உச்சம் தொடுகிறேன் - சாதனைகளால்!...
உன்னை சந்திக்கும் நேரங்களில்
அச்சம் அடைகிறேன் - சோதனைகளால்!...  

வலி..

நெருங்கி வரும்
ஒவ்வொரு வேளையிலும்
நெருஞ்சி முள்ளால்
நெஞ்சினில் குத்தும்
வலி தந்து
விலகுவதேனடி கண்ணே!...

எம் தலைவா!...

உலகில் அதர்மம்
தலையெடுக்கும் போது
கடவுள் அவதரிப்பார்
என்கிறது இதிகாசங்கள்
இது உண்மையா என
தெரியாது - ஆனால்
தமிழர்கள் தாக்கப்பட்டாலும்
தன்மானம் கேள்வியாக்கப்பட்டலும்
நீ அவதரிப்பாய்
என்பது உண்மை
எம் தலைவா!...



வருவாய் - என் தலைவா!..

எப்போது வருமென தெரியாது
தென்றலும் மழையும் - ஆனால்
அதில் மனம் நனையாதவர்
இருக்க முடியாது...
அதுபோல
எப்போது நீ வருவாய் என
எவருக்கும் தெரியாது
ஆனால் வருவாய்  -
எம் இ(ம)னம் து(கு)ளிர - நீ
வருவாய் - என் தலைவா!..

தலைவனின் பிறந்தநாள்

ஆளப்பிறந்த இனத்தின்
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின்  தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...

தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும்  அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...

தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...

உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்

உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,..  வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...

சகோதரி

சுகம்தானா என
ப்ரியமுடன் முகபுத்தகத்தில்
ரிதமாய் வினாவி
யாம் நலமென
ராஜ்ஜியத்தில் உள்ள
ஜனங்களுக்கு தெரியப்படுத்தி
என் கவிதைகளை இன்றும்
நினைவு கூர்ந்து
என் ரசிகையாய்  என்றும்...
என் தோழமைகளையும்
நேசம் பாராட்டியதில்
என் தோழியாய் இன்றும்...
என் நேசத்தையும் சுவாசத்தையும்
நீயும் சுவாசிப்பதில்
என் சகோதரியாய் என்றென்றும்...

மாவீரர் நாள்

தறிகெட்ட எம் வாழ்வு
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள்   மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய  தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...

நாம்...

வெற்று பக்கங்களாய்
இருந்த - இவனின்
வாழ்க்கை புத்தகத்தை
வண்ணத்துபூச்சியாக வந்து
வசந்தத்தை வரசெய்து 
விதவிதமான பூக்களால்
வண்ணமயமான பக்கங்களாய்
மாற்றியவளே!..
உனக்கான வாழ்வில்
உயிராக நான்
உறவாடாதது ஏனோ?

நான்...

ஏதும் எழுதப்படாத
ஏடுகளாக இருக்கும்
என் டைரியை போல
எந்த சலனமும் இல்லாமல்
என்னவளின் வருகைக்காக நான்!...

என்னவள்

நீயில்லா வாழ்வு
நீரில்லா தாமரையாக.... 

11-11-11 அரிதொரு நாளும்.. அரிதொரு தலைவனும்...

நூறாண்டுக்கு ஒரு முறை
வரும் நாளாய் இன்று...
நூறு தலைமுறைக்கும்  ஒரு
தலைவனாய் நீ என்றும்...

மீண்டும் இந்த நாள்
வருமா தெரியாது - ஆனால்
மீண்டு வருவாய் நீ - முள்ளி
வாய்க்காலில் புலி கொடி  ஏத்திட...

தலைவனாய் நீ கிடைத்தது
தமிழினத்துக்கு பெருமை
தாயகத்தை மீட்டு தருவதே
தமிழுக்கு நீ தரும் காணிக்கை...


  

வாழ்வு..

வாழ்வின் வழிகாட்டியாக வந்து
வசந்தத்தை வரசெய்த பெற்றோருக்கு...
சாதிக்க ஊக்கம்தந்து வாழ்வில்
உயர வைத்த சகோதரர்களுக்கு....
தனிமையை ரசிக்க பழகிய என்னை 
தன்னை ரசிக்க வைத்த மனைவிக்கு....
துவண்டு வீழ்ந்த  பொழுதெல்லாம் 
தோள் தந்த   நண்பர்களுக்கு...
நேசம் தந்து என்னை 
நேசித்த சுற்றமும் உறவுகளும்...
என என் எண்ணங்களும் செயல்களும் 
என்றென்றும் உங்களையே சுற்றி வந்தாலும்
விதி வசத்தால் - என் தாய்மண் தந்த 
மதியை அந்நியனுக்கு அடகு வைக்கும் 
அடிமை வாழ்வுக்கு பழகி - உங்களிலிருந்து 
அந்நியப்பட்டு போகிறேன் ... 

நிராகரிப்பு..

ஒரு முறை உன்னுடன்
      உரையாடிட மாட்டேனா என
ஒவ்வொரு நாளும் தவித்து
      உறக்கம் மறந்திருந்தேன் - உயிரே!...

ஒரு முறை உந்தன்
      திருமுகம் கண்டிட மாட்டேனா என
ஒவ்வொரு கணமும் நான்
      தீயாக உருகியிருந்தேன் - அன்பே!...

நேசங்களை சுவாசித்தவளே  - உன்னையே
       சுவாசமாக சுவாசித்தவனை - உன்
நேச கரங்கொண்டு அரவணைக்காமல் 
       சுடும் மண்ணில் நிற்ப்பது போல
நெஞ்சம் வலிக்க என்னை
       நிராகரித்தது ஏனடி - கண்ணே!...  

அடிமை வாழ்வு

கடந்து கொண்டிருக்கும்
காலத்தில் துன்பப்பட்ட
எங்களின் குடும்பத்தையும்
உறவுகளையும் - ஒரு
கௌரவமான சூழலுக்கு
ஆட்படுத்த எங்களையே
நாங்கள் உணர்சிகளற்றவர்களாக
மாற்றி கொண்டாலும்...

படபடக்கும் டாலர் நோட்டுகளை
பார்க்கும் மாத இறுதிநாளில் - அதை
பார்க்கும் எங்களின் கண்களில் தென்படும்
பரவசத்தையும் தாண்டிய வெறுமையை
உங்களால் உணரமுடிகிறதா?

இந்த டாலர் தேசத்தில் நாங்கள்
இழந்து கொண்டிருப்பது என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?

ஐந்து வயதில்
அஆ  என  ஆசான் கற்றுதந்த
அறிவினை!...

ஐயிரண்டு வயதினில்
ஆசையோடு கற்க ஆரம்பித்த
அறுபத்துநான்கு கலைகளை!...

மூவாறு வயதில்
முகம் அறிந்த
மொத்த சுற்றமும் உறவுகளும்!...

மூவேழு வயதில் - எங்களின்
முகவரி காட்டி
துவண்டு போன நேரங்களில்
தோள் தூக்கிவிட்ட நட்பினை!...


நெருங்கி வந்து தடவி பார்த்து
பாசம் காட்டும் தாத்தா பாட்டி!...
பார்த்த நொடியில்
பரவசம் கொள்ளும் அன்னை!...
பார்வையிலே பெருமிதப்படும் தந்தை!...

அள்ளி அணைத்து
அன்பு காட்டும் அண்ணன்...
கால்களை கட்டி கொள்ளும்
அண்ணனின் கடைக்குட்டி...

எல்லாருக்கும் முன்னாள்
யாருக்கும் தெரியாமல்
ஒரு அன்பு பார்வையில் எங்களின்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
பாசத்துக்குரிய மனைவியின் நேசம்

பசியாற்ற தன் குழந்தைக்கு
பலகதை சொல்லி -
நிலா சோறு ஊட்டும்
பக்கத்து வீட்டு அக்கா...

தயிர் சாதம், மிளகாய் வத்தல்,
தாமரை  பூத்திருக்கும் குளக்கரை...
அந்தி அரட்டைக்கு ஆத்தங்கரை...
அரசியல் பேசும் பெரியவர்கள்...
அவர்களை சீண்டும் இளைஞர்கள்...
சித்திரையில் வரும் திருவிழாவா  - அல்லது  
சிட்டாக வரும் தாவணிகளின் விழாவா என
சிந்தை மயக்கும் ஒரு மாதகால விழா...

    
மழையின் மண்வாசனை;  மனதை
மயக்கும் நெல்லின் வாசனை..
பச்சை வயல்வெளிகள்... 
பறவைகளின் கூடுகள்...  


இப்படி நாங்கள்
சின்னதாகவும், பெரிதாகவும்
கிடைக்கவேண்டிய எவ்வளவோ
சந்தோசங்களை
எங்களின் வாழ்க்கையை
எங்களை வளர்த்த கலாச்சாரத்தை
நாங்கள் இழந்துகொண்டிருப்பது
வெறும் உயில்லாத ஒரு டாலர்
நோட்டுக்காக மட்டுமே!...



போராட்டம்....

நின்னோடு வாழ்தலே வரமென்று
வேண்டுதலோடு என் முருகனிடம்
தாரமாய் உன்னை கேட்டு
நித்தமும் தவமிருந்தேன் - என்
வேதமும் நீயென களிப்புற்றிருந்தேன்
தாமரையே!..
வழக்கம்போல விதி சதிசெய்ய உன்னை
முழுமையாக புரிந்த நான்
இறுதிவரை போராடியும் பயனற்று போனதேனம்மா?

அந்நிய தேச வாழ்வு...

அந்நிய தேசத்தில் ஒரு
அரைநாள் உன்னோடு வாழ்தலே
ஆயுளுக்கும் இன்பமென
நினைத்திருந்தேன் !...
ஆறு திங்கள் உன்னருகினில் வாழ
ஆண்டவன் தந்த வாய்ப்பினில்
அரை நாழிகை கூட
நீ - என்னை
அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல்
ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...

கானல் நீர்!...

வார்த்தைகளில் விளையாடி- என்
எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த
தெரிந்த எனக்கு - உன்னிடம்
நேரில் பேச வார்த்தைகளின்றி
தவிக்கும் போது - நான்
வெயில் காலத்தில் தோன்றும்
கானல் நீரை போலவே
உன் வாழ்விலும் தோற்றமளித்தேனோ!....


முடிவுகள்...

இப்போதெல்லாம் அவன் தன்
இயல்பை மீறி முடிவெடுக்கிறான்....
திடிரென எடுக்கப்படும் முடிவுகள்
தீங்கிழைக்கும் என தெரியாமலேயே
எடுக்க படுகின்றன - இங்கு
எல்லோராலும் - அவன் மட்டும்
விதிவிலக்கல்லவே !...

நாழிரண்டு வருடமாய்
நகமும் சதையுமாய் இருந்தவன்
நாகரிகம் கருதி எடுத்த முடிவென
நாலுபேரிடம் சொல்லி பிரிந்தபோது
எத்தனை வலி தந்தது
என்பதை அறிவானா?

ஆறெட்டு மாதமாய் - அவனின்
ஆண்மையை அசைத்து பார்த்தவள்
அங்குலமங்குலமாய் அவனை ரசித்தவள்
அவளோடு வாழ்தலே சொர்க்கமென
அவனுக்கு உணர்த்தியவள்...
அவசரகதியில் எடுத்த முடிவு
ஆயுளுக்கும் வலிதந்ததை அறிவாளா?

எண்ணற்றவர்கள் இப்படி தான்
ஏதோ ஒரு காரணத்துக்காக
எதேச்சையாக எடுக்கும் முடிவுகள்
ஏதோ ஒரு எதிர்வினையை
ஏற்ப்படுத்தி சென்று விடுகின்றன
ஆனால்,
அது தரும் வலியும் வேதனையும் - நம்
ஆயுளின் உச்சமாய் இருப்பதை
அனுபவிக்க துவங்கும் நேரத்தில்
ஆளில்லா ஒரு தேசத்தில்
அன்னியப்பட்டு போனதை போல - உன்னையே
ஆச்சர்யமாய் நீ பார்க்க நேரிடும்
அப்போது நீ தோள் சாயகூட
ஆளில்லாமல் போக கூடும்!....

பருவம்...

கைகெட்டா நிலவை காட்டி
உணவருந்த வைத்தது
குழந்தை பருவம்
கைக்கெட்டும் உன்னை காட்டி
சாதிக்க வைத்தது - என்
இளமை பருவம் !..

என் கவிதைகள்....

துணை இல்லா சிட்டு குருவி போல
விடை தெரியா ஏக்கத்துடன்
என் கவிதைகள்!...

என் மனது

எதை தேடி
இந்த அலைகள்
ஒவ்வொரு முறையும்
கரைக்கு வருகிறதோ
அதே போல
விடை அறியாமல்
உன்னை தேடியே
வருகிறது - என் மனது

வாழும் வரம்

ஊருக்கு வெளியில்
ஒருவரும் இல்லா தேசத்தில்
உன் மடியில் தலை வைத்து
இந்த உலகை ரசிக்காமல் போவேனா
இல்லை - செல்லமே ...
உன்னோடு வாழும் வரம்
வாழ்வெல்லாம் கிடைக்குமா?

காதல்..

நீ என்னருகில் இல்லா நேரங்களில்
நினைவுகளில் நீந்தி மெல்ல கொள்கிறாய்
நேரில் பார்க்கும் போது - ஏனோ
நெஞ்சில் இருப்பதை சொல்ல மறுக்கிறாய்
கனவுகளில் தினம் கண்ணாமூச்சி
காட்டுகிறாய் - என் காதலை சொன்னால்
காதுகளை மூடி கொள்கிறாய் -
என் காதலியே!...
நம் காதலை கரை சேர்ப்பாயா?

பூஜை...

இறைவனின் பூஜைக்கு வந்த
அர்ச்சனை பூவே
காலையில் - நீ
கலையாய் - கவியாய்;
மாலையில் - நீ
தீயாய் - தீபமாய்;
சங்கீதம் ஒலிக்க
மத்தளம் இசைக்க
மோகனமாய் நாட்டியம்
அரங்கேற...
வேதமாய் - நிவேதமாய்
புதினமாய் - புவனமாய்
மங்கைகள் குலவையிட
ஆண்டாள் அருள்வேண்டி
லாவகமாக ஊர்கூடி இழுக்க
சத்தியமாய் சொல்கிறேன்
ரம்பையும் ஊர்வசியும் போல
அசைந்தாடி வருகிறது
ஐயாறு அடி
அய்யனாரு தேரு....

காதலே உன்னை ஆராதிக்கிறேன்....

அன்பே!.. அழகோவியமே!..
ஆராதிக்க வேண்டியவள் அல்லவா நீ!...
அழகு பதுமையே
ஆர்பரிக்கும் அழகுடையவளே
ஆண்டவன் உன்னை எனக்கு
ஆண்டு சில கடந்த பின்
அறிமுகப்படுத்தியதின் நோக்கம் என்னடி?
வளைந்த வில்போன்ற புருவமும்
கருணை நிறைந்த கண்களும்
செதுக்கிய அளவான மூக்கும்
ரவிவர்மனின் தூரிகையில்
வரையப்பட்ட தோற்றத்தை உடைய
உன் செவ்விதழ்களும்...
காதணிக்கு அழகு சேர்க்கும் காது மடல்களும்
பிஞ்சு வெண்டைக்காய் விரல்களும்
சங்கு கழுத்தும்..........
என எல்லா
எண்ணமுமாக இருந்தும் - நீ
என்னவளாக மாறாமல்
போனதேனடி?.....

என்னவளின் பிறந்த நாள்

24-Jan அன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அன்பு மனைவி மோகனாவிற்கு..... ..

ஏமாற்றமே வாழ்வு என்றிந்தவனை
என்னவளாக நீ வந்து
எல்லாரையும் அன்பால் அனுசரித்து
ஏற்றமிகு வாழ்வு வாழவைத்தாய்
ஆனாலும்
ஏமாற்றம் இன்னும் நம்மை
ஏமாற்றவே செய்கிறது செல்லமே
என் பிறந்த நாள்
உன் பிறந்த நாள்
நம் திருமண நாள்
புத்தாண்டின் முதல் நாள்
என நமக்கான
முதல் ஆண்டின்
முக்கிய நாட்களில் - உன்
முகம் காண இயலாமல்
முன்னாளில் வாழ்ந்தது போல
இந்நாளிலும் வாழவேண்டிய நிர்பந்தம்
வலிகளை தாங்கி
வாழ பழகியவளே - உன்
வாழ்வின் துணைவனின்றி
வர இருக்கும்
இந்த பிறந்த நாளில்
நமது முருகனின் அருளோடு
வசந்தத்துடன் வாழ்ந்திட
பாசத்துடன் வாழ்த்துகிறேனடி