அடிமை வாழ்வு

கடந்து கொண்டிருக்கும்
காலத்தில் துன்பப்பட்ட
எங்களின் குடும்பத்தையும்
உறவுகளையும் - ஒரு
கௌரவமான சூழலுக்கு
ஆட்படுத்த எங்களையே
நாங்கள் உணர்சிகளற்றவர்களாக
மாற்றி கொண்டாலும்...

படபடக்கும் டாலர் நோட்டுகளை
பார்க்கும் மாத இறுதிநாளில் - அதை
பார்க்கும் எங்களின் கண்களில் தென்படும்
பரவசத்தையும் தாண்டிய வெறுமையை
உங்களால் உணரமுடிகிறதா?

இந்த டாலர் தேசத்தில் நாங்கள்
இழந்து கொண்டிருப்பது என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?

ஐந்து வயதில்
அஆ  என  ஆசான் கற்றுதந்த
அறிவினை!...

ஐயிரண்டு வயதினில்
ஆசையோடு கற்க ஆரம்பித்த
அறுபத்துநான்கு கலைகளை!...

மூவாறு வயதில்
முகம் அறிந்த
மொத்த சுற்றமும் உறவுகளும்!...

மூவேழு வயதில் - எங்களின்
முகவரி காட்டி
துவண்டு போன நேரங்களில்
தோள் தூக்கிவிட்ட நட்பினை!...


நெருங்கி வந்து தடவி பார்த்து
பாசம் காட்டும் தாத்தா பாட்டி!...
பார்த்த நொடியில்
பரவசம் கொள்ளும் அன்னை!...
பார்வையிலே பெருமிதப்படும் தந்தை!...

அள்ளி அணைத்து
அன்பு காட்டும் அண்ணன்...
கால்களை கட்டி கொள்ளும்
அண்ணனின் கடைக்குட்டி...

எல்லாருக்கும் முன்னாள்
யாருக்கும் தெரியாமல்
ஒரு அன்பு பார்வையில் எங்களின்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
பாசத்துக்குரிய மனைவியின் நேசம்

பசியாற்ற தன் குழந்தைக்கு
பலகதை சொல்லி -
நிலா சோறு ஊட்டும்
பக்கத்து வீட்டு அக்கா...

தயிர் சாதம், மிளகாய் வத்தல்,
தாமரை  பூத்திருக்கும் குளக்கரை...
அந்தி அரட்டைக்கு ஆத்தங்கரை...
அரசியல் பேசும் பெரியவர்கள்...
அவர்களை சீண்டும் இளைஞர்கள்...
சித்திரையில் வரும் திருவிழாவா  - அல்லது  
சிட்டாக வரும் தாவணிகளின் விழாவா என
சிந்தை மயக்கும் ஒரு மாதகால விழா...

    
மழையின் மண்வாசனை;  மனதை
மயக்கும் நெல்லின் வாசனை..
பச்சை வயல்வெளிகள்... 
பறவைகளின் கூடுகள்...  


இப்படி நாங்கள்
சின்னதாகவும், பெரிதாகவும்
கிடைக்கவேண்டிய எவ்வளவோ
சந்தோசங்களை
எங்களின் வாழ்க்கையை
எங்களை வளர்த்த கலாச்சாரத்தை
நாங்கள் இழந்துகொண்டிருப்பது
வெறும் உயில்லாத ஒரு டாலர்
நோட்டுக்காக மட்டுமே!...