விளையாட்டுகள்

நீ விரும்பும் பொம்மை அருகில் இல்லாத போது அதையே தேடுகிறாய்... உன்னருகில் இருந்தால் உதாசினப்படுத்துகிறாய்.... கற்றுத்தருகிறது மகனின் விளையாட்டுகள்...

நாம்

நானும் நீயும் அழகான கவிதைகள் நாமாகும் போது குழந்தை கிறுக்கிய ஓவியமாகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே!

தம்பியாக செய்ய இயலாததை
தந்தையாக செய்திட
முருகனிடம் வரம் கேட்டு
மூதாதயர்கள் ஆசியோடு
அமுதாக  வந்த தவமே
ஆண்டு இரண்டு இன்று உனக்கு!..

அன்பை வளர்த்து
ஆல விழுதாக
இன் முகத்துடன்
ஈகை செய்து
உரிமையை நிலைநாட்டி
ஊரின் பெருமையை
எட்டுத்திக்கும் பறைசாற்றி
ஏற்றமுடன் வாழ்ந்து
ஐயமின்றி வழிநடத்தி
ஒட்டுமொத்த இனத்தின்
ஓங்கி ஒலிக்கும் குரலாக
ஓளவையின் தமிழாக

வள்ளுவனின் வழி நின்று
நல்லன தீயென பகுத்தாராய்ந்து
அகிலம் போற்றிட
மீண்டுமொரு சிலப்பதிகாரம்
படைத்திடும் இளங்கோவாக
நலமுடன் வளமுடன்
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட
ஆண்டவனின் அருளாசியை வேண்டி
அன்னையும் தந்தையும் வாழ்த்துகிறோம்
சுற்றத்தோடும் நட்புகளோடும்
வாழிய  நீ பல்லாண்டு பல்லாண்டு
நலமோடு! வளமோடு!!


ஜானு..

உன்னைப்போல
உருகிட -
உன்னைப்போல
நெகிழ்ந்திட - ஒரு
உறவும் இல்லா
உலகில் நான்...

மூச்சுக்காற்று

தேகந்தனை மோகத்தில் மூழ்கிட
காதோரம் உரசும் உன்
மூச்சுக்காற்றே போதுமடி

விடியல்கள்

விரைவாக வந்து
நிறைவாக தா
நீயில்லா
நீண்ட இரவுகளால்
விடியல்கள்
குறைவாகி போனது

அருகாமை

எந்த கற்பனையும்
தேவையில்லை நீ
மட்டும் அருகிலிரு
கவிதைகள் அருவியாகும்

படைப்பு

அவசரத்தில் அள்ளி நான்
அணைக்க அச்சத்தில் நீ  தவிக்க!..
சாம வேளையில
சமயலறையில
முத்தங்களால் எச்சமானோமே!!..
விடிந்த சூரியனும்
உறங்க மறுத்த
இரவுமாக நாம
இன்னமொரு உலக
படைக்கும் பிரமனானோமே!!!

அம்மா

என் ஒரு வார்த்தை கேட்டிட
எந்நாளும் காத்திருந்தாய்
எனக்கு புரியவைக்க
எள்ளளவும் அலுப்பின்றி
எளிமையாக கற்றுத்தந்தாய்
என் சின்ன சின்ன வெற்றிகளில் - நீ
எத்தனை மகிழ்வு கொண்டாய்
என்னை முழு மனிதனாக்க
எவ்வளவு பொறுமை கொண்டிருப்பாய்
எண்ணிலடங்கா உன் செயல்களை
எப்படி அறிவேன் நான்
என்று தானோ என் முருகன்
எனக்கொரு மகன் தந்தானோ
எங்கும் சொல்வேன் - நீயும்
எனக்கொரு மகள் தானம்மா
எக்கணமும் உன்னை போற்றிடுவேனம்மா

தேவதை

என்னை மீண்டு(ம்)
எழுத வைக்கும்
தேவதையோ நீ

என்கனா

கண்மணி உன்னோடு உலகம் சுற்றிட
பாசபறவைகளாக எங்கும் பறந்து திரிந்திடவே
அல்லல்படும் மனம் அலைந்திடுதே நித்தமும்
என்கனாவும் நிறைவேறும் நாள் வந்திடுமோ

மழலை

ஒவ்வொரு மாலைப்பொழுதும்
ஒருவித மகிழ்ச்சியைத்தருகிறது
உன் பொக்கைவயால் நீ தரும்
உன்னத ஒலிகளால்

குழந்தை

உன் சின்ன சின்ன
     சில்மிசங்களில்
உன் சின்ன சின்ன
      வார்த்தைகளில்
உன் சின்ன சின்ன
      கொஞ்சல்களில்
உன் சின்ன சின்ன
       நடனங்களில்
என்னை மகிழ்வித்து
       பெறுமைப்படுத்துகிறாய்

கவிஞர்

ஒன்றாகி எழுத
ஓராயிரம் இருக்க
ஒத்தை கவிதையில்
ஒதுங்கி விடாதே
ஓய்வெடுத்து வா
ஒரு சரித்திரம் படைத்திட

தேனீ

தேகமெல்லாம்
தேனூரும்
தேவதையோ - நீ
தேடித்தேடியலையும்
தேனீயோ - நான்

தமிழினமே

வாழ்வின் நெறி கற்றுத்தந்த
வழுவாத என் தமிழினமே...
வரலாறு தெரியாத இனம்
வற்றி போன நதிபோல....
கரைபுரண்ட காவேரி போல
காவியம் படைத்திட மீண்டு வா...

எம். ராமசந்திரன் Ex. MLA

அரசியல் புதிர் அல்ல என 
அறிய வைத்தாய் நீ... 
உழைப்பின் மகத்துவமும் 
உண்மையான மனிதநேயமும்
உண்டென இன்றும் 
உணர்த்துகிறாய் நீ!...
பதவியும் பணமும் முன்னிற்கும்
பகட்டு அரசியலில்
பல்லாயிரம் இதயங்களில்
பதவியின்றியும்....
பசுமையாக வாழ்கிறாய் - நீ
என்றும் எங்களில் வழிகாட்டி
என்றும் எங்களின் முதல்வன் நீ..

வருகிறேன்....

ஆண்டுகள் பல கடந்தும்
ஆவலோடு காத்திருக்கிறேன்
வருகிறேன் என்ற..  உன் ஒற்றை
வார்த்தைக்காக - ஆம்
அன்று வாழ்க்கை பயணத்துக்காக..
இன்று வழி பயணத்துக்காக…
                    -- வீ. இளவழுதி

காத்திருப்பு

சம்மதிப்பாய் என்ற நம்பிக்கையில்... 
சாகும் வரை காத்திருக்க செய்வாயே?
                                  -- வீ. இளவழுதி

வாழ்தல் இனிது

கண்ணே!... - நாம்
கண்ட கனவுகளும்
வாழ்ந்த வாழ்வும் - இனிமேல்
இவ்வுலகில் எவரும்
வாழ்ந்திட முடியுமா?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
என் நித்திரை தொலைக்கிறேன்!...