அம்மா...

கருவாய் சுமந்து
கண்ணாய் காத்து
சிறுவயதில் சிங்காரித்து
இளவயதில் பொறுத்து
உன் வாழ்வை தொலைத்து
என் வாழ்வையே
உன் வாழ்வாய் வாழ்ந்தவளே! ...

என் மகளை சுமக்கும் - இந்த
என் தாய்மையில் தான்
உணர்கிறேன் அம்மா...
என் மீதான...
உன் அக்கறையை...
உன் மகிழ்வுகளை...
உன் பதற்றத்தை...
உன் பாசத்தை...

 

தமிழாய் நிமிர்ந்திடு!..

முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட்   என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்
நம்மை சுற்றி நடக்கும் எந்த பிரச்சனையிலும்
கவலையின்றி - தன்னைப்பற்றி மட்டுமே
முன்னிறுத்தி தனிமனித வாழ்வுக்கு
பழக்கப்பட்டு போன -
இந்திய தேசத்தின் இதயங்களே!..
தேசபக்தியின் மொத்த உருவங்களே!..
என் தமிழர்களே!
உங்கள் தமிழகத்தின் நலன்
ஒவ்வொன்றாய் நசுக்கப்பட
ஒவ்வொரு உரிமையாய் பறிக்கப்பட
ஒரு நாள் உன் தனிமனித வாழ்வு
கேள்வியாக்கப்படும் போது... - நீ
தோள்  சாய கூட ஆளில்லாமல்
ஒத்தைமரமாய் நிற்க்கப்படும் சூழல் வரும்
எனவே - இன்றே
தமிழாய் நிமிர்ந்திடு!..
தமிழனாய் வாழ்ந்திடு !..

வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் என் தோழிக்கு...

சுற்றமும் நலமாய் இருக்க
பாசத்துடன் நேசம் கொள்ளும்
சிநேகிதியே - வரவிருக்கும் ஆண்டுகளில்..
நின் கனவுகளும் மெய்ப்பட
சுற்றும் இந்த உலகினை
பாவை நீயும் உன் நேசத்தோடு
சிட்டுகுருவி போல சுற்றிட
நிறைவான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடனும்! நலமுடனும்!
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!...

பிரிந்ததேனடி...

இமயமே இதயமே என்னை பிரிந்ததேனடி
இருவரும் இணைந்தே எங்கும் சென்றதேனடி
பரிதவித்த எனக்கு பாசம் காட்டியதேனடி
பிரிவெனும்   துயரினில் என்னை தள்ளியதேனடி
ஊரெல்லாம் உன்பெயர் சொல்லி நான்
உன்மீது பைத்தியம் ஆனேனடி
உயிர் வரை உன் காதல் சொல்லி - என்
உதிரம் சிந்த செய்தது ஏனடி
பிரிவென்பது  உன் முடிவென்ற பின்னால்
பாதையில்ல பயண மொன்றில் 
பரிதவிக்கும் பயணியாகி போவேனோ? 

நம்வாழ்வு...

காற்றினில் கரையும்
கண்ணீரை போல
கனவுகளுடனே போனதடி
கண்ணே - நம்வாழ்வு!..

நினைவு

என் எண்ணத்தில் உள்ளதை
எளிதில் எழுத முடிந்தது
என்னவளாக நீ இருந்தபோது!... 

மனதினில் எழும் அலைகளை 
மடலாக கூட மாற்றமுடியவில்லை - நீ   
மாற்றானின் மனைவியான பின்பு!...   


பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

என்னுள் பாதியாக வந்தவளே!..
என் எண்ணமாகவே வாழ்பவளே!...
எனக்காக பிறந்தவளே!.. - நீ 
தமிழ் போல வாழ்க!...
தலைவர் போல வளர்க!...
என நம் உறவுகளோடும் 
நட்புகளோடும் சுற்றத்தோடும் 
வாழ்த்துகிறேனடி!.. 
வாழிய பல்லாண்டு!...     
வளமுடனும்! நலமுடனும்! 

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஒட்டு மொத்த குடுபத்தினரும்
ஒருசேர குழுமும் ஒருநாள்
புத்தாடை உடுத்தி - தம்வயலில்
புதிதாய் விளைந்த  அரிசியினால்
தித்திக்கும் கரும்பு துணையிருக்க
திகட்டாத வெல்லத்துடன் - கொத்து
மஞ்சளும் முந்திரியும் திராட்சையும்  
மனம் பரப்ப - விவசாயியின்
அனைத்து விளை பொருளும்
அடுப்படிக்கு வந்து சேர
குடிசை தொழிலை ஊக்குவிக்க
குழைத்த மண்கொண்டு செய்த
புதிய மண்பானையில்- மனமகிழ்ச்சியோடு
புதிதாய் பொங்கும் பொங்கல்...
சூரியனுக்கும் கால்நடைகளுக்கும்
ஊருணிக்கும் ஊருக்கும் - என
எம்தொழிலுக்கு உதவும்
எல்லாருக்கும் நன்றி சொல்லி
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட - இனியும்
ஏமாறாமல் நம் உரிமை காத்திட
தமிழனாய் ஒன்றுபட்டு சபதமேற்று
தமிழர் திருநாளை  கொண்டாடிட
அனைவருக்கும் வாழ்த்துகள்.. 

உறவுகளின் நினைவுகள்...

எல்லா  இழப்புகளும்
எப்படியாவது நம்மை
அதன் தாக்கத்திலிருந்தும்
அந்த  நினைவுகளிலிருந்தும்
மீட்டு விடுகிறது!..

வாழ்வின் போராட்டத்தால்..
வாழவேண்டிய நிர்பந்தத்தால்..
நண்பர்களின் நேசத்தால்..
நல்லவர்களின் பாசத்தால்..
மீண்டோ; மறந்தோ போகிறோம்

எல்லோரும் ஒருமித்து
எதிர்காலத்தை நோக்கி  
நிகழ்காலத்தில் ஓடுகையில்
இறந்தகாலம் தந்த எல்லா
இழப்புகளும் மறந்துவிடுகிறது..

வாழ்வுதந்த தந்தை..
வழிநடத்திய அண்ணன்..
அரவணைத்த தாத்தாபாட்டி - என
அனைத்து உறவுகளின்
நினைவுகள் கூட
நிழல்படத்துடனே நின்றுவிடுகின்றன..

எங்கள் தேசம்...

பல அடுக்கு மாடி
கட்டிடங்கள்...
பறந்து விரிந்த பசுமையான
தரைத்தளங்கள்....
குப்பை இல்லா தூய்மையான
சாலைகள்...
சாக்கடை இல்லாத சுத்தமான
வீதிகள்...
குளு குளு வசதியுடன்
பேருந்துகள்...
குறித்த நேரத்தில் வரும்
ரயில்கள்...
நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும்
நடைபாதைகள்...
விளையாட குறிப்பிட்ட தூரங்களில்
இடவசதி...
வீதிக்கு ஒரு  பூங்கா...
வீட்டுக்கு அனுப்ப பணம்...
என எல்லா வசதிகளும்
இந்த அந்நிய தேசத்தில்
இருந்தாலும்....
அன்பாய் நேசம் விசாரிக்க
அண்டை வீட்டில் ஆளில்லை!...
அக்கறையாய் திட்ட  எந்த
பெரியவர்களும் இல்லை!...
உறவுகளை வீட்டுக்கு கூப்பிட
உரிமை இல்லை!...
தடுமாறும்போது தூக்கி  நிறுத்தும்
நண்பர்கள் இல்லை!...
அரவணைக்கும் சுற்றம் இல்லை!..
அன்பு கொள்ள பெற்றோர் இல்லை!...
குப்பையாய் இருந்தாலும்...
சாக்கடையில் நடந்தாலும்
எங்கள் தேசத்துக்கு நிகராகுமா
இந்த அந்நிய தேசம்!...  

தலைவன்...

மன்னராட்சியில் அன்று
மன்னன்  என்பவன்
தன்னலம் கருதாமல்
தன் மக்கள் நலம்
பேணியவன்!...

குடியாட்சியில் இன்று
தலைவன் என
முன்னிருத்த படுபவர்கள்
தன் குடும்ப நலமே
முக்கியமென நினைப்பவர்கள்!...

 அத்தி பூத்தார்ப்போல
அவதரிக்கும் உண்மை தலைவனை..
மக்களுக்குக்காக தன் கட்சி
மரியாதைகளை உதறித்தள்ளும்
மனிதனை  - இக்காலம்
நமக்கு தருகிறது - அவர்களை
நாம் தான் இனம் கண்டு
நாளைய நாயகனாய்
நம் இனம் வளர வாழ
நாம் போற்றி வரவேற்க வேண்டும்!..  

என் கிராமம்...

( இது எனது வலைதளத்தில் 150 வது படைப்பு)


ஊருக்கு மத்தியில் தவழும்
ராஜாமட கால்வாயின் உதவியால்
முப்போகம் விளையும் விவசாயம்
ஊரின் முகப்பிலிருந்து முடிவுவரை
பச்சை தரை விரிப்பாக
செழித்து விரியும் இயற்கை!..
ஊருக்கு நடுவில் ஒய்யாரமாய்
மேனிலை பள்ளி - அடுத்து
கூட்டுறவு வங்கியும்,
நுகர் பொருள் வங்கியும்..
கபடி, வாலி பால், கிரிக்கெட் என
எல்லா விளையாட்டிலும் பரிசினை
பெற்று வரும் மாணவ, வாலிபர்கள்..
மாவட்ட ஆட்சியர் முதல் கொண்டு
கடை நிலை ஊழியர் வரை
எல்லா அரசு பதவிகளிலும்...
கிளை செயலரில்  ஆரம்பித்து
மாவட்ட செயலர், சட்ட மன்ற உறுப்பினர் என
அரசியலின் அனைத்து பதவிகளிலும்...
திருப்பூரில் தொழிலாளி முதல்
அமெரிக்காவில் விஞ்ஞானி வரை...
என எல்லா நிலைகளில் எம்மை
வளர்த்து விட்ட
எம் மண்ணை,
நம் கிராமத்தை,
நாமெல்லாம் மறந்தது சரியா
என் கிராமத்து உறவுகளே!...     

வாகை சூடும் தமிழன்

கர்நாடகாவில் காங்கிரஸ் வருமெனில்
காவேரி வற்றவும் செய்வோம்..
ஆந்திராவில்  காங்கிரஸ் ஆட்சிஎனில்
ஆத்திரப்பட்டாலும் பாலாறு வராது..
ஒருதொகுதி கிடைத்தாலும் கேரளாவில் -
ஒருசொட்டு  வராது முல்லைபெரியாரில்..
மக்களின் எழுச்சியில் வேண்டாம்  என்றாலும் எங்கள்
ம(ப)னம் கு(து)ளிர அனல்மின் நிலையம் தருவோம்..
தமிழன் எது கேட்டாலும் இல்லை என்போம்
தமிழ்மண்ணை  பாதுகாப்பில்லா  பரிசோதனைக்கு உட்படுத்துவோம்..
போராடும் தலைவர்களை உள்ளே போடுவோம்
பேட்டி தரும் தறுதலைகளுக்கு பெட்டி தருவோம்..
ஓட்டு போட்ட மக்களின் வாய்களுக்கு
பூட்டு போடுவோம்!.. மீறி  போராடினால்
கொலவெறி பாடும் நடிகருக்கு
கொத்துபரோட்டா விருந்து வைப்போம்..
இன்னும் போராடினால் ஒரு நடிகையின்
இடுப்பை காட்டி கலாச்சாரம் காணமல் போனதென்போம்..
மானத்தோடு போராடும் தலைவன் கிடைக்கபெற்றால்
மறைந்திருந்து அந்த தலைவனை கொல்ல பார்போம்..
என்றெல்லாம் கொக்கரிக்கும் காங்கிரசின் தலைமைக்கு
எங்கிருந்தோ வந்தவர்  தலைவியாம்...
மானமுள்ள மனிதர்களே இன்னும் நீங்கள்
மங்கி கொண்டிருக்கும் காங்கிரசில்
இருந்தால் குறித்துகொள்ளுங்கள்
இங்கிருந்து தான் உங்களின்
அழிவு ஆரம்பமாகிறது...
ஆண்ட தமிழன் தான் உங்களை
அடிச்சுவடு காணமல் விரட்ட போகிறான்
புறப்பட்ட மக்கள்படை புதிய
புலிப்படையாய் வெற்றி வாகை சூடும்
புதிய ஆண்டில், புது வெற்றியோடு!...

வாழ்வோடு நீ

உன்னை பார்க்க பார்க்க
உள்மனதில் ஒரு குதுகலம்  
உன்னோடு பேச பேச
உயிரினில் ஒரு பரவசம்
உன்னோடு வாழ்தலை நினைக்கையில்
உயிரோடு ஒரு சொர்க்கம்!..

ஏனடி சென்றாய்...

அர்ச்சுனனின் வில்லை 
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்  
உன் இதழ்களில் பார்க்கவைத்து
ஏதும் அறியாதவனாக
ஏதோவென்று வாழ்ந்தவனை
எல்லாராலும் அறியபட்டவனாக்கி
என் வாழ்வினில்  வந்து
ஏதும் அறியாதவள்  போல
ஏனடி சென்றாய்? 

அழகின் ஊற்றே...

ஊட்டி மலர்தோட்டத்தில்
உள்ள பூக்களெல்லாம்
உன் முகம் பார்த்த நொடியில்
தன் தலை தாழ்த்தி கொள்கிறது

நாணல் செடி கூட நாணத்தால்
நன்னிலம் நோக்கி தலைசாய்க்கிறது
உன் நாணத்தின் நளினம் கண்டும் 
உன் கொடியிடை அழகில் மயங்கியும்

இயற்கையே உன்னை பார்த்து
இறக்கையில் ஒண்ணுமே இல்லாத
இந்த இளைஞன் எம்மாத்திரம்....  

தரிசனம்...

ஆயிரமாயிரம் கவிதைகள்
அடுத்தடுத்து வருகின்றது
அமைதியான உன் கண்களை 
அருகினில் தரிசிக்கும் போது....

கேள்வி?...

ஆயிரமாயிரம் மைல்களுக்கு
அப்பால்  இருந்தபோது
உன்னில் நான்கண்ட
உள்ளமுருகிய காதல்
உன்னருகினில்
வாழ்ந்திடும்போது
வாய்க்காதது ஏனோ? 

பிரிவு..


அழும் குழந்தை கூட
அழகாய் சிரிக்கும்;
உன் உதட்டோர
உயிர் புன்னைகையால்...
கருணை நிரந்த
காந்த கன்னழகியே...
புதிதாய் பூத்த பூப்போல
புத்துணர்ச்சியுடன் எப்போதும்
வலம் வர தெரிந்தவளே!...
வாழும் நாள் வரை 
வலிதரும் பிரிவு தந்ததேனடி?  

வேறுபாடு..

உன்னை சிந்திக்கும் தருணங்களில்
உச்சம் தொடுகிறேன் - சாதனைகளால்!...
உன்னை சந்திக்கும் நேரங்களில்
அச்சம் அடைகிறேன் - சோதனைகளால்!...