விளையாட்டுகள்

நீ விரும்பும் பொம்மை அருகில் இல்லாத போது அதையே தேடுகிறாய்... உன்னருகில் இருந்தால் உதாசினப்படுத்துகிறாய்.... கற்றுத்தருகிறது மகனின் விளையாட்டுகள்...

நாம்

நானும் நீயும் அழகான கவிதைகள் நாமாகும் போது குழந்தை கிறுக்கிய ஓவியமாகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே!

தம்பியாக செய்ய இயலாததை
தந்தையாக செய்திட
முருகனிடம் வரம் கேட்டு
மூதாதயர்கள் ஆசியோடு
அமுதாக  வந்த தவமே
ஆண்டு இரண்டு இன்று உனக்கு!..

அன்பை வளர்த்து
ஆல விழுதாக
இன் முகத்துடன்
ஈகை செய்து
உரிமையை நிலைநாட்டி
ஊரின் பெருமையை
எட்டுத்திக்கும் பறைசாற்றி
ஏற்றமுடன் வாழ்ந்து
ஐயமின்றி வழிநடத்தி
ஒட்டுமொத்த இனத்தின்
ஓங்கி ஒலிக்கும் குரலாக
ஓளவையின் தமிழாக

வள்ளுவனின் வழி நின்று
நல்லன தீயென பகுத்தாராய்ந்து
அகிலம் போற்றிட
மீண்டுமொரு சிலப்பதிகாரம்
படைத்திடும் இளங்கோவாக
நலமுடன் வளமுடன்
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட
ஆண்டவனின் அருளாசியை வேண்டி
அன்னையும் தந்தையும் வாழ்த்துகிறோம்
சுற்றத்தோடும் நட்புகளோடும்
வாழிய  நீ பல்லாண்டு பல்லாண்டு
நலமோடு! வளமோடு!!


ஜானு..

உன்னைப்போல
உருகிட -
உன்னைப்போல
நெகிழ்ந்திட - ஒரு
உறவும் இல்லா
உலகில் நான்...

மூச்சுக்காற்று

தேகந்தனை மோகத்தில் மூழ்கிட
காதோரம் உரசும் உன்
மூச்சுக்காற்றே போதுமடி

விடியல்கள்

விரைவாக வந்து
நிறைவாக தா
நீயில்லா
நீண்ட இரவுகளால்
விடியல்கள்
குறைவாகி போனது

அருகாமை

எந்த கற்பனையும்
தேவையில்லை நீ
மட்டும் அருகிலிரு
கவிதைகள் அருவியாகும்

படைப்பு

அவசரத்தில் அள்ளி நான்
அணைக்க அச்சத்தில் நீ  தவிக்க!..
சாம வேளையில
சமயலறையில
முத்தங்களால் எச்சமானோமே!!..
விடிந்த சூரியனும்
உறங்க மறுத்த
இரவுமாக நாம
இன்னமொரு உலக
படைக்கும் பிரமனானோமே!!!

அம்மா

என் ஒரு வார்த்தை கேட்டிட
எந்நாளும் காத்திருந்தாய்
எனக்கு புரியவைக்க
எள்ளளவும் அலுப்பின்றி
எளிமையாக கற்றுத்தந்தாய்
என் சின்ன சின்ன வெற்றிகளில் - நீ
எத்தனை மகிழ்வு கொண்டாய்
என்னை முழு மனிதனாக்க
எவ்வளவு பொறுமை கொண்டிருப்பாய்
எண்ணிலடங்கா உன் செயல்களை
எப்படி அறிவேன் நான்
என்று தானோ என் முருகன்
எனக்கொரு மகன் தந்தானோ
எங்கும் சொல்வேன் - நீயும்
எனக்கொரு மகள் தானம்மா
எக்கணமும் உன்னை போற்றிடுவேனம்மா

தேவதை

என்னை மீண்டு(ம்)
எழுத வைக்கும்
தேவதையோ நீ

என்கனா

கண்மணி உன்னோடு உலகம் சுற்றிட
பாசபறவைகளாக எங்கும் பறந்து திரிந்திடவே
அல்லல்படும் மனம் அலைந்திடுதே நித்தமும்
என்கனாவும் நிறைவேறும் நாள் வந்திடுமோ

மழலை

ஒவ்வொரு மாலைப்பொழுதும்
ஒருவித மகிழ்ச்சியைத்தருகிறது
உன் பொக்கைவயால் நீ தரும்
உன்னத ஒலிகளால்

குழந்தை

உன் சின்ன சின்ன
     சில்மிசங்களில்
உன் சின்ன சின்ன
      வார்த்தைகளில்
உன் சின்ன சின்ன
      கொஞ்சல்களில்
உன் சின்ன சின்ன
       நடனங்களில்
என்னை மகிழ்வித்து
       பெறுமைப்படுத்துகிறாய்

கவிஞர்

ஒன்றாகி எழுத
ஓராயிரம் இருக்க
ஒத்தை கவிதையில்
ஒதுங்கி விடாதே
ஓய்வெடுத்து வா
ஒரு சரித்திரம் படைத்திட

தேனீ

தேகமெல்லாம்
தேனூரும்
தேவதையோ - நீ
தேடித்தேடியலையும்
தேனீயோ - நான்

தமிழினமே

வாழ்வின் நெறி கற்றுத்தந்த
வழுவாத என் தமிழினமே...
வரலாறு தெரியாத இனம்
வற்றி போன நதிபோல....
கரைபுரண்ட காவேரி போல
காவியம் படைத்திட மீண்டு வா...

எம். ராமசந்திரன் Ex. MLA

அரசியல் புதிர் அல்ல என 
அறிய வைத்தாய் நீ... 
உழைப்பின் மகத்துவமும் 
உண்மையான மனிதநேயமும்
உண்டென இன்றும் 
உணர்த்துகிறாய் நீ!...
பதவியும் பணமும் முன்னிற்கும்
பகட்டு அரசியலில்
பல்லாயிரம் இதயங்களில்
பதவியின்றியும்....
பசுமையாக வாழ்கிறாய் - நீ
என்றும் எங்களில் வழிகாட்டி
என்றும் எங்களின் முதல்வன் நீ..

வருகிறேன்....

ஆண்டுகள் பல கடந்தும்
ஆவலோடு காத்திருக்கிறேன்
வருகிறேன் என்ற..  உன் ஒற்றை
வார்த்தைக்காக - ஆம்
அன்று வாழ்க்கை பயணத்துக்காக..
இன்று வழி பயணத்துக்காக…
                    -- வீ. இளவழுதி

காத்திருப்பு

சம்மதிப்பாய் என்ற நம்பிக்கையில்... 
சாகும் வரை காத்திருக்க செய்வாயே?
                                  -- வீ. இளவழுதி

வாழ்தல் இனிது

கண்ணே!... - நாம்
கண்ட கனவுகளும்
வாழ்ந்த வாழ்வும் - இனிமேல்
இவ்வுலகில் எவரும்
வாழ்ந்திட முடியுமா?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
என் நித்திரை தொலைக்கிறேன்!...  

கவிதை காதலி

கவிதைகளை காதலித்தவளே - உன்
கடைக்கண் பார்வை
கடைசி வரை கிடைக்காதது ஏனோ?

உலகம்...

புருவம் உயர்த்தி உன்
புன்னகை சிந்தி பார்த்த
அந்த ஒரு பார்வையால்
உணர்ந்தேனடி - நீயின்றி
இல்லையென் உலகமென!!!

மனம்...

செல்லும் திசையெங்கும் நீ
செல்லும் முன்னரே  உன்
மனமறிந்து என் மனம்
பாதை அமைத்து
வைத்திருப்பது அறிவாயா
என் அன்பே!!

நடனம்....

மயிலின் நடனம் கூட
மலிவாய் போனது -உன்
மையலிட்ட அன்னநடையின் முன்..

ஈர்ப்பு....

புவி ஈர்ப்பு விசையின்
புரிதல் உணரக்கண்டேன் - உன்
மையிட்ட  கண்களின்
காந்த சக்தி கண்டபிறகு... 

உள்மனது

பாராமுகமாய் - நீ
என் முன் சென்றாலும்...
பலாப்பழம் போல
உன் மனம்..
பாவியிவனை எந்நாளும்
மற்றவர்களிடம்
பாராட்டிக்கொண்டே
இருப்பதை அறிவேனடி!!!

தமிழர் வாழ்வு...

எனது 250 வது படைப்பு....

மீதமுள்ள வாழ்வு
தேனாய் இனிக்க
மீத்தேனை எதிர்ப்போம்!...

தமிழர் வாழ்வு
தலைநிமிர வைகோவின்
தலைமை ஏற்ப்போம்!!   

நாசி!!!

பிதாகரஸ்  தேற்றத்தை
ஞாபகப்படுத்துகிறது
கூர்மையான  உன் நாசி 

மலர்ச்சி....

கலையான உன் 
கருப்பு முகத்தில் 
ஏழைகளின் வாழ்வில் 
ஏற்படும் மலர்ச்சியை போல 
சிவந்த உன் செவ்விதழ்கள்!!!

நாணம்....

பௌர்ணமி நிலவும்
சற்றே தயங்குகிறது - நீ
வெளிவரும் நாளில்
தானும் தலை காட்ட...

சிந்தனை...

அலட்சியப் படுத்துவதால் தானோ
அன்பே உன்னையே எக்கணமும்
சிந்திக்க  வைக்கிறது!!! 

செல்ல முனகல்...

பைந்தமிழும் தேனமுதும்
சற்றே பின்வாங்குகிறது
உன் சின்ன இடை
பற்றிய நொடியில் நின்
செல்ல முனகலில்...

அமைதி

கடல் அலை போல
எந்நேரமும்
ஓடி வருகிறேன்
கடலில் இட்ட
கல்லாக எப்போதும்
அமைதியாய்
இருப்பதேனோ

மனது...

மகரந்த தூளை 
நோக்கியே செல்லும்
வண்டு போல 
உன்னை நோக்கியே 
செல்கிறது - எனது  மனது 

விழிகள்...

 விரிந்த தாமரையை 
 ஞாபகப்படுத்துகிறது 
அகண்ட  உன் விழிகள் 

இதம்...

தென்றல் கூட
இதமாயில்லை - உன்
செவ்விதழ் வருடிய பிறகு !!! 

குளிர்..

உறைய வைக்கும் 
குளிரைப்பற்றி பயமில்லை 
உடன் நீயிருப்பதால்!...  
 

சுகமே!

காத்திருப்பதும்
கணக்கிடுவதும்
காலத்துக்கும் சுகமே!!
உனக்காக மட்டும்
எனும்போது!!!!     

பார்வை....

நெருப்பின்றி பற்றுகிறதே...
ஓ..! - நீ
நெருங்கி பார்ப்பதாலா....  

அந்நிய தேசமும் ... அவளும்...

உறைய வைக்கும் குளிரில்
உன் மண்ணில் கால் பதித்தேன்
உயிரில் கலந்தவள் நேசித்த பூமி என
உன்னில் கலந்திட்டேன் நொடி பொழுதில்...

நாட்கள் மெல்ல நகர்ந்தன
நரகமாய் என் பொழுதுகள் சென்றன
நரம்புக்குள் ஊடுருவிய குளிரில்
நகர மறுத்தன கால்கள்..

என்னோடு கலந்தவள்
தன் உறவுகளுக்காக  
என்னை தூக்கிஎறிந்தது போல
உன்னை என்னால் உதறிவிட
இயலாமல் பரிதவித்து நிற்கின்றேன்...

வசந்த காலம் என் வாழ்வினில்
வராமல் போகலாம் - ஆனால்
வந்தே தீரும் உன் மண்ணில்...
வாசலில் நின்று காத்திருக்கிறேன்
வருகைக்காக... 

கேள்வி

மனதின் வலி மற்றவர்களுக்கு
தெரியாமல் வாழ்வதே
வாழ்வாய் மாறி போனதேன்?...

நினைவுகள்....

நீ வேண்டாமென ஒதுங்கி வாழ்ந்தாலும்...
நெடுந்தூரம் ஓடி தொலைதூரத்தில் இருந்தாலும்....
ஆயிளுக்கும் உன் முகம் காணமுடியா சாபமிருந்தாலும்....
அடிமனசில் இன்னும் சிம்மாசனமிட்டு என்னை
அவஸ்தை பட வைப்பதேனோ கண்மணி?....

சேரா உறவு..

ஒருமுறை உந்தன் குரலொலி ஒலித்திருந்தால்
ஓயாத அலையாய் உன் வாழ்வில் கலந்து
ஒன்றாகியிருபோம் ....


முன்னரே என் கண்ணில் விழுந்திருந்தால்
மூவுலகுக்கும் என் முதலாய் நீ
முன்னிருந்திருப்பாய்...


கண்ணிலிருந்து வரும் காந்த சக்தி
காண கிடைத்திருந்தால் நமக்கான வாழ்வு
கானல்நீராகியிருக்காதோ....


அழகான சிரிப்பில் அடிமனசை வருடுபவளே
அன்றே என் முன்னால் வராமல் - என்றும் என்னை
அனாதையாக்கியதேன்...



அலைபேசி உரையாடல்....

குறிஞ்சி மலர் மலரும் போது
குதித்து கும்மாளமிட  துடிக்கும் மனது...
பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூப்பதால் ...
பரவசப்பட்டு பனிப்புயலில் குதிக்கும் அணிலாய் - என்
மனம் கூதுகளிக்கிறது - உன்னோடு மீண்டும்
மனம்விட்டு பேசியது - பன்னிரண்டு  ஆண்டுகள்  கடந்து....

எம். ராமசந்திரன் (MR)


மாசில்லா மாணிக்கம்
பெற்றெடுத்த எங்கள்
ஈடில்லா ராமனே!...
எம் மண்ணின் மைந்தனே!...
பின்னையின் முதல்வனே!...
வாழிய நீவிர் பல்லாண்டு!..

எம்மார் (எ) எம். ராமசந்திரன் Ex. MLA

பதவிக்கு வந்து பத்துநாளில் பகட்டாக
பவனி வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்...
கால் நூற்றாண்டு அரசியலில் - இன்றும்
கறைபடியா கரங்களுடன் வலம் வருகிறாய்!...
இருமுறை சட்டமன்ற உறுப்பினராய் இருந்தும்
இன்றும் எங்களுக்காக புல்லட்டில் பயணிக்கிறா...ய்!....
கட்சி பேதங்களை கடந்து தொகுதியின்
கடைசி நிலை மனிதன் வரை
சாதி மதம் பார்க்காமல் - உன்னில்
சரிபாதியாய் எண்ணி...
சடங்கு சம்பிரதாயங்களை ...
துக்க சந்தோசங்களை ...
உமதாக நினைத்து முதல்வனாய் - நீ முன்னின்று
உரிமையுடன் இன்றும் செய்து வருகின்றாய்!.....
அரசியலை எமக்கு கற்றுத்தந்த - எங்கள்
ஆசானே!... உன் அரிசுவடி பற்றி என்றும்
உங்கள் வழியில் பயணிப்போம்!...

திருமண நாள் 12-02-2014

எனக்கான எல்லா கஷ்டங்களையும்
உனக்கானது என ஏற்று கொண்டு
என் ஆயுளாக வந்தவளே!..
என் தாயாக மாறியவளே!...
உன்னோடு சேர்ந்து வாழ்ந்ததை  விட
இந்த  ஐடி அடிமை வாழ்வினால்
பிரிந்து வாழ்ந்த நாள்களே அதிகம்!...
இதோ வழக்கம் போல - இன்று நம்
திருமண நாளிலும் பிரிந்தே வாழ்கின்றோம்
என் வாழ்வில் மறுமலர்ச்சியை தந்தவளே!...
என் தலைவனை போல பம்பரமாய்
என்றும் நமது குடும்பத்துக்காக உழைப்பவளே!... 
இனியும் நமக்கு   இந்த இன்னல்  வாழ்வு
இருக்காது அன்பே!.. இதோ....
இன்னல் மறைந்து நமக்கான வாழ்வில் 
இளஞ்சூரியனாய் புது உதயம் பிறக்கிறது...
இந்த மணநாள் முதல்....
என் வாழ்வின் மகாராணியே...
எனது வாழ்வில் நீ வந்த  இந்த நாளுக்கும்
என் வாழ்வாய் அமைந்த உனக்கும்
எனது நன்றிகள்.... 

கவனிப்பு...

உன்னை பிரிந்து வாழும் நிர்ப்பந்தம்
உலகில் எனக்கு வாய்க்க பெற்றாலும்
உன்னிப்பாக என்னை கவனிக்கிறாய் - நம்
உறவை வளர்த்த என் கவிதைகளால்.....  

இதயத்தில் நான்!...

இருவார இடைவெளியில்
இருவரி என்னிடம் பேசினாய்
இறுமாப்பு கொண்டேன்
இந்த உலகில் -  ஆம்
இன்னும் என்னவளின்
இதயத்தில் நான்!...  

உணர்கிறேன்....

உன்னோடு பயணித்த போது உணராதது...
உன்னோடு வாழ்ந்த போது உணராதது ....
உன்னை பிரிந்த இந்த ஒரு வாரத்தில்
உயிர் போகும் என் வலியில் உணர்கிறேன்!... 

மரணிக்கும்....

உன்னோடு வாழும் வாய்ப்பு
இருக்குமா தெரியவில்லை - ஆனால்
உன்னோடு மரணிக்கும் வாய்ப்பு
இருக்கிறது என் காதலுக்கு!... 

என் காதல்...

உன்னோடு பேசுவது ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயுள் வாழ்ந்தது போன்ற நிம்மதி தந்தவளே
ஒரேயடியாக என்னை வஞ்சித்து என் காதலை
உன்னோடு எடுத்து சென்றவளே !... -பத்திரமாக  பார்த்துகொள்
உன்னோடு வரும் என் காதலை மட்டுமாவது !... 

விட்டு விடுகிறேன்

உன்னை விட்டு  விடுகிறேன் - அன்பே...
உன்னோடு என் காதலையும் - அது
உன் வாழ்கையில் தடுமாறும் போது
உன்னை பத்திரமாக வழி நடத்தும்....
 

சுயநலவாதி...

சுயநலவாதி என நீ கூறியபோது
சுடவில்லையடி என் மனது - உனக்காகவே
சுடர்விடும் என் வாழ்வு - உன்னையே
சுற்றி வருவதால் கண்ணே!... 

பாவம்...

நீ நலம் வாழ நித்தம் தவமிருந்தேன்
    காலம்  செலுத்திய வழியில் - நானே
நின் வாழ்வின் பெரும் பாவமாய்
    காட்சி பொருளாய் மாறிப்போனதேன்?

முதல் முத்தம்!...

அவசரத்தில் அள்ளி நான் அணைக்க
அச்சத்தில் நீ  தவிக்க!.. - உன்
முந்தானை என் தோளில் துண்டு ஆக
முத்தங்களால் நாம் எச்சமானோம்!!...
முதல் முறையாய்  மொத்தமாய்
முழு உலகை ஒன்றாய் ரசிக்கிறோம்!!!...  

அலங்காரம்!...


சின்ன சின்னதாய்
சிக்கனமாய் உன்னை
அலங்கரித்து கொள்கிறாய் - நீ!..
சின்னா பின்னமாய்
சிதறிப்போகிறேன் நான்!...  

உயிர்!...

ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்து
உயிர் பெற்று வந்தவளோ நீ!...

மெழுகு!...

உனக்காக நான் உருக 
எதற்க்காக - நீ
மெழுகாய் உருகுகிறாய்
என் தேவதையே!

சமர்ப்பணம்!...

என்னின் ஒவ்வொரு சாதனையையும்
எவருக்காவது சமர்ப்பணம் செய்ததுண்டு!..
என் சாதனைகளின் மொத்தமே
என்னின் வாழ்வை உனக்கு சமர்ப்பிக்கிறேன்!!..

என்னவளோ!...


எனக்காகவே பிறந்தவள் என்ற
என்னத்தை வரவைத்தாய் - நீ
முதன் முதலில் சேலைகட்டி -  என்
முன்னால் வந்த போது !.. 

உலக மாற்றம்!...

உன்னால் உலக மாற்றம்
என்னுள் ஏற்ப்பட்டது பற்றி
ஏதும் அறியாதவள் போல
எத்தனை காலம் நடிப்பாயடி?
என் ஆயுள் உள்ளவரையா
உன் ஆயுள் உள்ளவரையா ?
இரண்டும் ஒன்றென அறியும்வரையா?

பலி!....

போர் களத்தில்
முதல் பலி  நீ !...
 
உன் களத்தில்
முதல் பலி நான்!...

இதயமே!...

உன்னோடு வாழும்
வாழ்வினை இழந்தாலும்
உயிரோடு இருக்கும்
நாளெல்லாம் - உன்னின்
வாசனை என்னோடு
பயணித்து கொண்டே
இருக்கும் என் இதயமே!...

என் தோழா!..

உன்னோடு பயணித்த
ஒவ்வொரு பொழுதும்
உற்சாகம் ஊற்றாக
ஓடியதே என் நெஞ்சில்!....
ஒரு முறை கூடவா
உன்னால் அதை
கண்டு பிடிக்க இயலவில்லை
என் தோழா!...

சுவாசமே!

உன்னை பார்த்த போது
என்னில் ஏற்ப்பட்ட உணர்வு
உன்னில் வராது போனதில்
ஆச்சர்யமில்லை - தோழி!...

என்னோடு பழகிய பிறகும்
உன்னால் என்னை நேசிக்க
எந்நாளும் முடியாது எனும்போது 
என்னால் சுவாசிக்க கூட
முடியவில்லையடி  தோழி!..  
 
 

தடுமாற்றம்...

தேனின் சுவையைவிட
தென்மதுர தமிழின் சுவை
பெரிதென்று  நினைத்திருந்தேன்!..
ஆனால்  - இன்று சற்றே தடுமாறுகிறேன்...
உன் செவ்விதழின் சொல்லிலடங்கா சுவையா?
சந்தங்களின் சந்துகளில் வெளிப்படும்
என் தமிழ் சுவையா? -  என்று!... 
 

உன் பரிசம்

அறத்துப்பாலின் அற்புதமும்
வள்ளுவனின் காமத்துப்பாலின் காவியமும்
உணரத்துவங்கினேன் - அன்பே
உன் பரிசம் முதன் முதலாய் கிடைத்தபோது!... 

ஓவியங்கள்

ரவிவர்மனின் கண்களில் - நீ
காண  பட்ட பிறகு தான்
அவனது ஓவியங்கள்
உயிர் பெற்றதோ?
 

வாழ்வு!,,,

உன்னோடு வாழ்வதென்பது
இறைவனால் மறுக்கப்பட்டாலும்
உன்னோடு பயணிப்பதென்பது
இவன்  முடிவெடுத்தது!...

என் வாழ்வே

நேராக சென்று
இரு கோடுகளாக திரும்பும்
உன் தலை வகிடினை போல
இரு புறம் பிரிந்து இருக்கும்
என் வாழ்க்கை பாதையில்
எந்த புறம் செல்ல
என வழி காட்ட வா என் வாழ்வே!

குழப்பங்களும்!... தீர்வுகளும்!...

அம்மாவாசையும் பௌர்ணமியும் 
மாறி மாறி வருவது போல
உன்னை பற்றிய
குழப்பங்களும் தீர்வுகளும்

மாறி மாறி என்னை வாட்டுகிறது!

குழப்பங்கள்...

சூரியனை பார்த்ததும்
விலகி செல்லும்

புல்லின் பனித்துளி போல
உன்னை பார்த்த

பின்னால் எனது
குழப்பங்களும் விலகி 

செல்கிறது கண்ணம்மா!
 

வாழ்வு...

முடித்து முடித்து
அவிழ்த்து விடும் 
உன் கூந்தலை போல
என் வாழ்வு சிக்கலையும் 
அவிழ்த்து விட
வருவாயா வண்ண மயிலே!

தேவதையே!

செவ்விதழை சுற்றி 
வண்ணம் தீட்டியதை  போன்ற
இயற்கையான கருநிற
வெளிவட்டம் - உன்
முத்தரிசி பல்லடுக்குக்கு 
மேலும் அழகூட்டுகிறது தேவதையே!

வாழ்வு...

துடுப்பில்லாமல் காற்றின்
வேகத்துக்கு பயணிக்கும்
படகினில் செல்லும் பயணி போல...
பயணிக்கிறது என் வாழ்வும்....

சுகம்.....

நீண்ட நெடிய கடுமையான
பயணத்துக்கு பிறகு
கிடைத்த நிழலில்

இளைப்பாறும் போது 
கிடைக்கும் சுகம்.....
கிடைக்க பெற்றேன்
உன் திருமுகம் தனை
பார்த்த நொடியில்...

வழி காட்டி...

மின்சாரம் இல்லா அறைக்கு
உன் புன்னகையால் வெளிச்சம் தந்தது போல....
எண்ணங்களிலும் மனதிலும்
எராளமான குழப்பங்களுடன்
திசை தெரியாமல் பயணிக்கும்
எனக்கு வழி காட்டியாக
வாழ்க்கை துணையாக வருவாயா?

நினைவு....

என்னை பற்றிய நினைவு உன்னில்
என்றாவது எழுகின்றதா  என தெரியவில்லை
ஆனால்
உன்னை பற்றிய சிந்தைகளுடன்
உதயமாகின்ற என் பொழுது
உன்னை பற்றிய கனவுகளுடனே
முடிகின்றது என்பது உனக்கு தெரியுமா?
 

நாள்(ன்)...

ஆண்டின் இறுதி நாள்...
ஆயுளுக்கும் முதல் நாள்...
ஆசையுடன் ஒரு நாள் - உன்
ஆத்மாவுடன் கலந்த நாள்!....

 

முதல் தரிசனம்!...

முதன் முதல் உன் கண்ணை
முழுதாய் பார்த்த நொடியில்
ஒரு கோடி மின்னல்கள்
ஒன்றாக உயிருக்குள் பாய்ந்தது போல
ஒரு உணர்வு - ஆனால்
ஏதும் அறியாதவளாக என்னை - நீ
கடந்து சென்ற வினாடியில்
ஏற்பட்ட வெறுமை
அதை விட மேலானது!...

வீரவணக்கம் மாவீரர்களே!..

புறநானூரில் படித்ததை
புவியில் உள்ளோருக்கு
புரியும்படி போராடி காட்டி
புனித தலைவனின் போராட்டத்துக்கு
புத்துயிர் தந்த மாவீரர்களே!...

நீங்கள் விதைத்த வீரம்
நீங்காத கனலாக - எம்முடன்
நித்தம் கலந்திருக்கும்!...
நின் தியாகம் போற்றி
நீங்கள் விட்டு சென்ற
சுதந்திர தாகம் மீட்டெடுப்போம்!...

வீரத்தின் விளைநிலமே!...

உன் பெயர் சொன்னாலே
உலகம் சற்று உன்னிப்பாக
உற்று நோக்குமாறு செய்து
உன் இனத்தின் மதிப்பு
உயர செய்த - வீரமே!...
உன்னால் நாங்கள் பெருமையடந்தோம்!..
உன் அரசால் நாங்கள் ஒழுக்கமடைதோம்!..
உன்னால் நாங்கள் உயர்வடைந்தோம்!..
உன் அரசால் மீண்டு(ம்) வருவோம்!..
உலக அரங்கில் முதன்மை நாடாக!...
உன் 58 வது பிறந்த தினத்தில்
உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!..

அதிகாரத்தை கைப்பற்றுவோம்!...

தமிழனுக்கு பிரச்சனை எனில்
தலையில் கட்டிய முண்டாசோடு
தரணி எங்கும் போரடுபவனே!...

முல்லைபெரியாறின் நம் உரிமை
முனைத்து நீ நின்றதாலே
முக்குதிக்கும் மக்களை சென்றடைந்தது!..

வாழ்வின் ஆதாரங்கள்
அழிக்கப்படும் ஸ்டேர்லைட்டின்
வழக்கு வாதத்துக்கு செல்லும்
வல்லமையுடைய வான்புகழ் தலைவா!...

மனிதாபிமானமே பெரிதென
மாற்று கட்சிகாரர்களையும்
மதிக்கும் மாசற்ற மாணிக்கமே!...

நாடாண்ட இனம் - இன்று
நாதியற்று கிடக்கிறது
நாளையை பற்றி கவலையின்றி
நாங்கள் வாழ உழைக்கும் உழைப்பாளி நீ!..

மக்கள் வாழ மாற்றமே தீர்வு
மறுமலர்ச்சி தோன்றிட - எங்கள்
மன்னவா நீயே கதி!..

சாஞ்சி போராட்டத்தில்
சரித்திரம் படைத்தவனே
சாகும் வரை உன்னை தொடர்வோம்!...

ஆணையிட்டு விட்டாய்
அண்ணன் உன் வழி நின்று
அதிகாரத்தை கைப்பற்றுவோம்!..
ஆளும் இனமாய் மாற்றி காட்டுவோம்!..

நேசம் கொண்டவளே!..

கண்டும் காணாமல்
கண்ணால் செய்தி சொன்ன
கல்லூரி காலங்களில்...
உன் தோழிகளிடம்
என் நண்பனென
அறிமுகப்படுத்திய நேரங்கள்...
வெளிப்படையாக சொல்லாமல்
என் காதல் கவிதைகளை
என்னைவிட அதிகமாய் நேசித்து
எல்லாரிடமும் அதன்
பொருளை விவரித்த
பொன்னான தருணங்கள்...
யாரும் அறியாமல்
உன்னோடு
கால் வலிக்க நடந்து
கடையில் வாங்கிய பொருட்களின்
ரசிதில் நம்மிருவரது பெயரையும்
ஒரு சேர பார்த்து
ரசித்த வினாடிகள்....
உன்னோடு அருந்தும் போது
மேலும் சுவைத்திட்ட
பழ ரசங்கள், உணவு வகைகள்...
நேரம் தெரியாமல்
சமூகம் பற்றியும்
காதல் பற்றியும்
உன்னோடு பேசிய
உன்னதமான மணித்துளிகள்....
உன்னோடு முதன் முதலாக
என் இருசக்கர வாகனத்தில்
பயணித்த போது காற்றினை விட
லேசாக உணர்ந்த நிமிடங்கள்..
இருவரும் சேர்ந்து
இரு கால்களையும்
ஒரு சேர வைத்து
ஒன்றாக சென்ற கோவில்கள்....
பிரியும் நேரம் வந்தும்
உன்னை விட்டு
வீடு செல்ல மனமின்றி
உன்னருகில் நின்று
அடம்பிடித்த நாழிகைகள்...
அவ்வப்போது நமக்குள் வந்த
அர்த்தமில்லாத ஊடல்கள்...
என அத்தனை
மறக்க இயலா சம்பவங்களையும்...
மற்றவர்களும் அறிந்து கொள்ள...
மற்றற்ற மகிழ்ச்சியான முடிவெடுத்திட
நீ நேசித்த கவிதையில்
தொகுப்பாக வெளியிடுகிறேன்...
நேசம் கொண்டவளே!.. புது
சுவாசம் தந்தவளே!....
படித்தவுடன் சொல்லி அனுப்பு
ஏதேனும் விடுபட்டிருந்தால் -
நம் வாழ்வை தவிர!...

பிரிகிறேன் சிங்கையே!...

எம் தாய்மொழிக்கு மட்டுமின்றி
எனக்கும் அங்கீகாரம் தந்த சிங்கையே!...
வாழ்வின் பல பரிணாமங்களை
வாழ கற்று தந்தாய்!...
எண்ணற்ற அனுபவங்களும் - வாழ்வில்
எதிர்நீச்சல் போடும் பக்குவமும்
எனக்கு பயிற்று வித்து...
என் எதிர்காலத்தை பிரகாசமாக்கினாய்!...
உன்னில் கற்ற பல நல்ல குணங்களோடு
உன்னை விட்டு தற்போது பிரிகிறேன்
எதிர் வரும் காலங்களில் - வாய்ப்பிருந்தால்
ஏற்றுக்கொள் என்னை மீண்டுமொரு முறை!... 

என் காதலும்!... வெற்றியும்!...

இரண்டு வார இடைவெளியில்
இருவரும் சேர்ந்தோம் - ஒரே அலுவலகத்தில்...
முதல் வேலை ஒதுக்கப்பட்ட போது
முகத்தில் தோன்றிய கலவரத்தை பார்த்து
அன்பாய் ஒரு பார்வை பார்த்து
அருகினில் வந்து கனிவாக நீ பேசிய
அந்த முதல் வார்த்தையில்
ஆரம்பித்தது - உன் மீதான
ஆழமான என் காதலும்!...
அதன் மீதான என் வெற்றியும்!...

வாழ்வின் தொகுப்பு...

கண்டும் காணாமல்
கண்ணால் செய்தி சொன்ன
கல்லூரி காலங்களில்...
உன் தோழிகளிடம்
என் நண்பனென
அறிமுகப்படுத்திய நேரங்கள்...
வெளிப்படையாக சொல்லாமல்
என் காதல் கவிதைகளை
என்னைவிட அதிகமாய் நேசித்து
எல்லாரிடமும் அதன்
பொருளை விவரித்த
பொன்னான தருணங்கள்...
யாரும் அறியாமல்
உன்னோடு
கால் வலிக்க நடந்து
கடையில் வாங்கிய பொருட்களின்
ரசிதில் நம்மிருவரது பெயரையும்
ஒரு சேர பார்த்து
ரசித்த வினாடிகள்....
உன்னோடு அருந்தும் போது
மேலும் சுவைத்திட்ட
பழ ரசங்கள், உணவு வகைகள்...
நேரம் தெரியாமல்
சமூகம் பற்றியும்
காதல் பற்றியும்
உன்னோடு பேசிய
உன்னதமான மணித்துளிகள்....
உன்னோடு முதன் முதலாக
என் இருசக்கர வாகனத்தில்
பயணித்த போது காற்றினை விட
லேசாக உணர்ந்த நிமிடங்கள்..
இருவரும் சேர்ந்து
இரு கால்களையும்
ஒரு சேர வைத்து
ஒன்றாக சென்ற கோவில்கள்....
பிரியும் நேரம் வந்தும்
உன்னை விட்டு
வீடு செல்ல மனமின்றி
உன்னருகில் நின்று
அடம்பிடித்த நாழிகைகள்...
அவ்வப்போது நமக்குள் வந்த
அர்த்தமில்லாத ஊடல்கள்...
என அத்தனை
மறக்க இயலா சம்பவங்களையும்...
மற்றவர்களும் அறிந்து கொள்ள...
மற்றற்ற மகிழ்ச்சியான முடிவெடுத்திட
நீ நேசித்த கவிதையில்
தொகுப்பாக வெளியிடுகிறேன்...
நேசம் கொண்டவளே!.. புது
சுவாசம் தந்தவளே!....
படித்தவுடன் சொல்லி அனுப்பு
ஏதேனும் விடுபட்டிருந்தால் -
நம் வாழ்வை தவிர!...

அலை மனசு....

உனெக்கென்ன
என்னை பற்றிய
எந்த சலனமுமின்றி
கிணற்று தண்ணீரை போல
அமைதியாக உள்ளாய்.....
ஆனால்....
நீ குடிகொண்ட
இந்த மனசு மட்டும்
ஆழ்கடல் அலையை போல
எந்நேரமும் உன்னின்
நினைவுகளை சுமந்து
நித்திரையை கலைத்து
கொண்டிருக்கிறது.....

நினைவலை...

தண்ணீரில் எவ்வளவு
அழுத்தினாலும் மேல்வரும்
தக்கையை போல...
என்னதான் உன்னை
மறக்க முயற்சித்தாலும்
நினைவலைகளில் நீந்தி
மனதுக்குள் வந்து விடுகிறாய்

நம்பிக்கை வார்த்தை....

என் எண்ணங்களில் நிரம்பி
என்னாலும் சாதிக்க முடியுமென்று
எனக்கு நம்பிக்கை தந்து
என்னை சேராமலே சென்றவளே...

உன்னை சந்திக்காத ஒவ்வொரு கணமும்
உன்னை அடையாத வாழ்வின் நொடிகளும்
உனது நம்பிக்கை தந்த வார்த்தைகளால்
உருண்டோடி செல்கிறதென தெரியுமா கண்ணே!...

காதலுக்கு நன்றி.....

வற்புறுத்தி வருவதில்லை காதல்.
கட்டாயபடுத்தி வாழ்வதில்லை வாழ்கை.
அது -
ஒரு புரிந்துணர்தல்.
ஒரு அழகான கவிதை.
நேசிக்க சுவாசிக்க நம்பிக்கையளிக்கும்,
நம்மை வாழ்வின் வேறு ஒரு
பரினாமத்தை கானச்செய்யும்
உருவமில்லா குழந்தை.
சொல்லி புரிய வைப்பதில்லை,
உணர்ந்து தெரிந்து கொள்ளுதல்.

நன்றி கண்ணம்மா!...

உன்னால் நான் உணர்ந்த
அந்த விவரிக்க இயலாத உணர்வுகள்……
என்னை எரித்தாலும் மிஞ்சும்
என் சாம்பலிலும் எஞ்சி இருக்கும்.
எனக்கான….,
என் கவிதைக்கான….
களமாக நீ இருந்ததற்கு….,
மறந்து போன என் எழுத்துக்களை
எனக்கு மீட்டு தந்ததற்கு...
வாழ்வின் வெளிச்சம் குடுத்ததற்கு....
வாழ வேண்டும் என்ற வேகம் தந்தற்கு.....
நன்றிகள் பல..  பல!...

சிங்கை நாடே!...

என் தாய் மொழியை
தமிழ் மொழியை - உன்
ஆட்சி மொழியாய் கொண்ட
சிங்கை நாடே!...
பணியாற்ற வந்த இடத்தில்
பாசமிக்க நண்பர்களை தந்து
பலவித மொழி பேசும்
பல்லாயிரம் பேர்களை
சந்திக்க வைத்து - என்னை
சிந்திக்க வைத்து!...
சிறந்ததொரு வாழ்வுக்கு
அடித்தளமிட்டு!... அடியவன்
எளியவன் என்னையும்
அரவணைத்த எங்கள்
அன்பின் முகவரியே!...
எங்கள் தமிழர்களை
எப்போதும் உன்
மகுடத்தில் வைத்துள்ளாய்..
எங்கள் சிகரத்தில்
என்றென்றும் உனக்கு
மணிமகுடம் உண்டு!...

உணர்வு!...



செந்தூர தமிழில் - உன்
தேன் குரல் கேட்கும்
வாய்ப்பு கிடைக்க பெற்றது போது
ஏற்பட்ட உணர்வு தான்....
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ?  

வருகிறேன்!..

மண்வாசனை நுகர்ந்து
மண்வெட்டி பிடித்து
வரப்புகளில் நடந்து
வானத்து பறவைகளை
ரசிக்க வருகிறேன்!...
என்னை தாலாட்டிய
என் மண்ணே!..
என்னை ஆளாக்கிய
என் உறவுகளே!...
உங்களை கான
உவகையோடு வருகிறேன்!.
ஆறு - குளம்
அன்பு நண்பர்களென
உங்களை பார்க்க
உறக்கமின்றி தவித்து
ஓடி வருகிறேன்!..

சந்திப்பு

அள்ளி அனைத்து
அன்பாய் ஒரு
முத்தம் தர...
முழு நிலவே
உன்னை கட்டியணைத்து
உலகின் மிச்சம் ரசிக்க...
மனதை மயக்கிய உன்
மாமன் பறந்து
வருகிறேன் முதல்
வாரம் நவம்பரில்!.. 

வாழ்வு...

உங்களுக்கு தோன்றும்
உணர்வுகள் எங்களுக்கும்
ஏற்படும்!...
நீங்கள் செய்ய நினைப்பதில்
நாங்கள் சிலவற்றை செயல்படுத்த
முற்படலாம்!...
சத்தமாய் பேசுவது சரியெனில்
சுத்தமாய் சத்தமாய் பேச
நிலைப்படும்!...
வாழ்கை எனும் வண்டியை
வழிமாறாமல் இழுக்கும்
இரு மாடுகளை போல
இருவரையும் எண்ணிடுங்கள்!..
இங்கே ஆண்வேறல்ல பெண்வேறல்ல
இன்முகத்தோடு வாழ்ந்திடுங்கள்!..

என் அண்ணனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

06-09-2012
தாயோ தந்தையோ
தரணியில் நண்பனாக
சகோதரனாக வழிகாட்டியாக
சகமனிதனாக இருந்ததுண்டு!..
என்ன தவம் நான் செய்தேன்
என் அண்ணா!.. நீ எனக்கு
தாயாக தந்தையாக ஆசானாக
தடம் மாறாமல் வாழ ஒரு
நண்பனாக, அண்ணனாக கிடைத்திட!...
உன் பெயர் சொன்னால்
ஊரே புகழும் செல்வம் நீ!..
கருணை நிறைந்த காந்த
கண்ணழகன் என அறியப்பட்டவன் நீ!..
வீரத்தின் இனத்தில் பிறந்த
வீரராசனின் மகனே!.. அழியாத
புகழ் கொண்ட இளங்கோவடிகள் போல
பெயர் பெற்ற எங்கள் இளங்கோவன் நீ!..
உன்னை போல பலர் உருவாகினாலும்
உன்னிடத்தை நிரப்பிட முடியாது என
உன்னை  அறிந்தவர்களால்
ஆராதிக்கபடுபவன் நீ!..

நீ எம்மை விட்டு சென்று
ஒரு குறிஞ்சி மலர் பூத்துவிட்டது!..
எப்போதும் தோற்காத
என் அண்ணனே!.. உனது
வார்ப்பு தோற்காமல் இருக்க  என்
வாரிசாக மீண்டும் பிறந்து விடு!.. 

எங்கள் தந்தையின் 16 ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

07-08-2012

அய்ந்து  கல் தொலைவுக்கு
அப்பால் கல்வி கற்க
அனுப்ப யோசித்த காலத்தில்
அய்யேழு  கிலோமீட்டர் தள்ளி
அற்ப்புதமான தொரு புனித
ஆரோக்கிய அன்னை பள்ளியில்
அக்கறையாய் எம்மை சேர்த்து
அறிவினைபெற வழிவகுத்த
அய்யனே!...

அரசியலில் பணபலமும்
அதிகார பலமும்
அங்கங்கே பரவிகிடந்த
அந்த காலத்தில்
அத்தனையையும் மீறி
அனைவரும் அறியும்படி
வீரமாய் வீரராசனாய்
அல்லும்பகலும் உழைத்தாய்
முதல்வனாய் நம் ஒன்றியத்தில்
மொழிப்போர் தியாகியான
எங்கள்  தந்தையே!...

செல்லும் திசையெங்கும்
சிறப்பாக செயல்பட்டு - உமது
சிந்தை வியக்கும்
சிறந்த அனுபவங்களை எமக்கு
அன்பாக எடுத்துரைத்து
அழகான ஒரு வாழ்வுக்கு
அடித்தளமிட்ட எங்கள்
ஆசானே!....

எல்லா வகையிலும் நீவிர்
எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமாய்
எங்களோடு வாழ்ந்தீர்கள்
ஆனால் -
எப்படி இறக்க வேண்டும்
என்பதற்கும் எடுத்துக்காட்டாக
எங்களை விட்டு சென்றதேனப்பா?

எதிர்படும் ஒவ்வொரு அனுபவமும்
எதிர்கொள்ளும் சில சாதனைகளும்
என்றென்றும் நீங்கள்
எங்களுடனே வாழ்கின்றீர்கள்
என்ற நம்பிக்கையில்
வாழும் நாள் வரை
வையகத்தில் உம்மை
போற்றிடுவோம் அப்பா!...       

ஏமாற்றம்...

மூவிரண்டு வருடங்களாக - இவனின்
மூச்சு காற்றினில் கலந்தவள்
மூவாரயிரம் கல்களையும் கடலையும்
முழுநிலவாய் தாண்டி வந்து தன்
முகமதனை காட்டிட மாட்டாளா?

வந்து சேரும் நாள் - என்
வாழ்வில் வசந்தம் வீசும் காலமென
வையகத்தில் வாழ்ந்திருந்தேன்
வாசம் வீசும் பாவையவள்
வாஞ்சையுடன் பார்வையால்
வருடிட மாட்டாளா? என

நெஞ் செல்லாம் காற்றால்
நிரப்ப பட்டதை போல
நின் வருகையால் ஒரு
நித்திய பரவசமடைந் திருந்தேன்
ஆனால் - என்னை புறந்தள்ளி
அமைதியாய் சென்றதேனடி?

முரண்பாடு...

உன் தோள்களில்
என் மாலையினை
நீ தாங்காததால்
நான் உனக்கு
தோழனானேன்!..

யுத்தம்

உன்னை நினைக்க நினைக்க
உயிருக்குள் ஒரு புது இன்பம்
உன்னை என்னில் எழுத எழுத
உயிரோடு ஒரு புது யுத்தம்

தமிழே!..

(எனது 175 வது படைப்பு )

தமிழே!.. என் உயிரே!...
மனதில் தோன்றி
எண்ணங்களில் உருமாறி
வார்த்தைகளில் நீ வெளிப்படும்
அழகு!.. அமுது!...

உன்னை சிந்திக்கும் நொடிதனில்
வார்த்தையாக வெளிப்பட்டு
எதிரில் இருப்பவரின்
மனம் கவரும் நீ
கம்பீரம்!.. கலை!...


நதியின் நளினம்  போல
உன் சொல்லின்
வளைவும் நெளிவும்
பேசுபவரையும் மயக்கும்
புவிஈர்ப்பு  விசையாய்  நீ
இனிமை!.. இளமை!...

சாகும் நாள் வரை
உன்னை நேசித்து
சுவாசித்திட வரம் தா
என் தாயே!.. 
என் தமிழே!... 

பெரும்பாக்கியம்....

உன்னின் ஒவ்வொரு செயலையும்
உள்ளத்தின் பெருஉவகையுடன்...
உடனிருந்த பார்த்து
உன்னை ரசித்த
அந்த தருணங்களும்...
உன் செல்ல சண்டைகளின்
உளமான அன்பையும்...
மீண்டுமொரு முறை
அனுபவித்திடும் பாக்கியம்
கிடைத்திடுமா - என் அன்பே? 

அன்பே.....

அருகினில் இருந்த
அற்புத தருணங்களில்
அவை நாகரிகம் கருதி
அமைதியாக நாம் பிரிந்தாலும்
அல்லல்படும் மனம்
அனுதினமும் நினைத்திடுதே!..
அன்பே உன்னையே
அணுவணுவாய் ரசித்திடுதே!...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் வாழ்வுக்காக
உன் வாழ்வையே அர்பணித்து
உலகின் ஒவ்வொன்றையும் கற்றுத்தந்து
அன்பையும் அறனையும்
அடிமனதில் பதியவைத்து
அமுதென்னும் தமிழையும்
அழகாய் நேசிக்க வைத்து
சுற்றத்தும் நட்பையும்
சுவாசமாக சுவாசிக்க வைத்தவளே!
உலகின் இணையற்ற என்
உயிரினும் மேலான
என் அம்மாவே!...
நன்றி என்ற
ஒற்றை வார்த்தையில்
உனக்கு நான்பட்ட கடனை
அடைக்க முடியாது
ஏழேழு தலைமுறையிலும்
உன் மகனாகவே
பிறந்திட வேண்டும் அம்மா!..
ஈன்ற தாயோடு - என்னை
போற்றி வளர்த்த அன்னைகளுக்கும்
அனைத்து அம்மாக்களுக்கும் - இந்த
அன்னையர் தினத்தில்
வாழ்த்துகளோடு நன்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!..

சிவாஜி கணேசன்

உலகின் ஒப்பற்ற நடிகனே
உன்னை முழுமையாய்
ஒருவரும் பயன்படுத்த வில்லை
என்பதில் சிறு வருத்தம் இருந்தாலும்
உன்னை பெற்றதால் தமிழோடு
இந்த இனத்தோடு
இவனும் பெருமைபடுகிறான்
 
 
 

ஹைக்கூ

திருவிழாவில் இருக்கும்
ஆயிரம்  பேருக்கு
மத்தியிலும் - நீ
தனித்து தெரிவாய் - உன்
மந்திரப் புன்னகையால்!...

=================================


ஹைக்கூ எனும்
இரு வரி புலம்பல் போல
இரவெல்லாம் உன்னை
பற்றிய புலம்பலாக
இதமான கனவு

===================================

ஒரு முறை

என் எண்ணங்களின் 
எழுச்சியாய்!...
என் சிந்தனைகளின் 
சிற்பமாய்!...
என் நம்பிக்கையின் 
விழுதாய்!..
என் கற்பனைகளின் 
காவியமாய்...
என் வாழ்வின் 
வெளிச்சமாய்...
என் கண்ணெதிரில் 
இருந்த உன்னை 
கவனிக்க தவறியவனின்   
கடைசி நிமிடங்களில் - அந்த 
வெட்கத்தின் நளினத்தோடு 
உன் ஒத்தை புன்னைகையோடு 
ஒரு முறை என்னை பார்த்துவிடு
முழு நிறைவோடு 
மூர்சையடைவேன்!...

இசைத்தாயே!...

மார்கழி திங்களில் வரும் 
       சங்கீத சாரலாய் என்
மனதினுள் ஒய்யாரமாக  
      சம்மணமிட்ட இசைத் தாயே!...

சங்கீத அறிவு சற்றே  
     இல்லாவனின் பாசம் 
சாகும்வரை வேண்டாமென்று 
      இரக்கமில்லாமல் போனதேன்?




தரிசிக்க வேண்டுமடி!...

வாழும் நாளெல்லாம்
வலி தருபவளே!... 
நான் 
வையகத்தை விட்டு
செல்லும் முன்... 
வாடாமலரே!.. என்
வாழ்வே!... ஒரு முறை 
எந்தன் உயிர் 
உந்தன் முகம்தனை  
தரிசிக்க வேண்டுமடி!...

வாழ்வே!...

வாழ்கையை கற்றுத்தந்தாய்! - என்
வாழ்வாக நீயே இருந்தாய்!
வாழ்வின் வேகம்  தந்தாய்! - என் 
வாழ்வின் தாரமாய் உன்னை நினைத்தால்
வரலாற்று பிழை செய்தது போல - என்னை
வழியிலேயே விட்டு சென்றதேனடி?  

வெற்றிடம்!...

நடந்து கொண்டிருக்கும் 
நிகழ் காலத்தில் 
கடந்து செல்லும் 
உன்சாயல் ஒத்த பெண்களை 
பார்க்கும் போதெல்லாம் 
என் வாழ்வில் நீ தந்த 
வெற்(றி)றிடம் - மனசுக்குள் 
வந்து செல்கிறதடி!...

வலி!...

காதலின் வலி 
காலத்தின் கட்டாயம் 
எனில் 
மொத்த ஆயுளின் நிமிடங்கள் 
அந்த வலியின் மிச்சங்கள் 


வாழ்வு

ஒவ்வொருவரும் ஏதோ
ஒரு தருணத்தில்
ஒவ்வொருவரையும் ஏமாற்றி
ஒவ்வாத ஒரு வாழ்வு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம்!...

காதலிலும் - ஒவ்வொரு
கணத்தையும்  - இதயத்தின்
காயத்தையும் -  வலியையும்
கண்ணுக்குள் வைத்து
காலத்தை கழிக்கிறோம்!...

என் காதலே!

காதலே என்றதும்  - என்
கைகளில் புகுந்து - எழுத்தாய்
வெளிப்படுவாய் - முன்னொரு காலத்தில்!...
இன்றோ - பரிதவிக்கிறேன்; காதலே!
உன்னை மட்டும் நேசித்து
என்னை நேசித்தவளை புறம்தள்ளியபோது
அவள் பட்ட வேதனை - இன்று
நான் படவேண்டுமென
என்னை விட்டு காத தூரம்
ஓடுகிறாயோ?
காதலின் வலி அதன் தோல்வியில் அல்ல
அதன் புறக்கணிப்பில் என உணர்த்துகிறாயோ
காதலே உன்னை மட்டுமே நேசித்தவன்
உன்னை மட்டுமே நேசிப்பவன்
உன்னிடம் வேண்டுகிறேன் -
வெறுத்துவிடாதே  என்னை
நீயின்றி யார் எனக்கு மருந்தாவார்?  

அம்மா...

கருவாய் சுமந்து
கண்ணாய் காத்து
சிறுவயதில் சிங்காரித்து
இளவயதில் பொறுத்து
உன் வாழ்வை தொலைத்து
என் வாழ்வையே
உன் வாழ்வாய் வாழ்ந்தவளே! ...

என் மகளை சுமக்கும் - இந்த
என் தாய்மையில் தான்
உணர்கிறேன் அம்மா...
என் மீதான...
உன் அக்கறையை...
உன் மகிழ்வுகளை...
உன் பதற்றத்தை...
உன் பாசத்தை...

 

தமிழாய் நிமிர்ந்திடு!..

முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட்   என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்
நம்மை சுற்றி நடக்கும் எந்த பிரச்சனையிலும்
கவலையின்றி - தன்னைப்பற்றி மட்டுமே
முன்னிறுத்தி தனிமனித வாழ்வுக்கு
பழக்கப்பட்டு போன -
இந்திய தேசத்தின் இதயங்களே!..
தேசபக்தியின் மொத்த உருவங்களே!..
என் தமிழர்களே!
உங்கள் தமிழகத்தின் நலன்
ஒவ்வொன்றாய் நசுக்கப்பட
ஒவ்வொரு உரிமையாய் பறிக்கப்பட
ஒரு நாள் உன் தனிமனித வாழ்வு
கேள்வியாக்கப்படும் போது... - நீ
தோள்  சாய கூட ஆளில்லாமல்
ஒத்தைமரமாய் நிற்க்கப்படும் சூழல் வரும்
எனவே - இன்றே
தமிழாய் நிமிர்ந்திடு!..
தமிழனாய் வாழ்ந்திடு !..

வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் என் தோழிக்கு...

சுற்றமும் நலமாய் இருக்க
பாசத்துடன் நேசம் கொள்ளும்
சிநேகிதியே - வரவிருக்கும் ஆண்டுகளில்..
நின் கனவுகளும் மெய்ப்பட
சுற்றும் இந்த உலகினை
பாவை நீயும் உன் நேசத்தோடு
சிட்டுகுருவி போல சுற்றிட
நிறைவான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடனும்! நலமுடனும்!
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!...

பிரிந்ததேனடி...

இமயமே இதயமே என்னை பிரிந்ததேனடி
இருவரும் இணைந்தே எங்கும் சென்றதேனடி
பரிதவித்த எனக்கு பாசம் காட்டியதேனடி
பிரிவெனும்   துயரினில் என்னை தள்ளியதேனடி
ஊரெல்லாம் உன்பெயர் சொல்லி நான்
உன்மீது பைத்தியம் ஆனேனடி
உயிர் வரை உன் காதல் சொல்லி - என்
உதிரம் சிந்த செய்தது ஏனடி
பிரிவென்பது  உன் முடிவென்ற பின்னால்
பாதையில்ல பயண மொன்றில் 
பரிதவிக்கும் பயணியாகி போவேனோ? 

நம்வாழ்வு...

காற்றினில் கரையும்
கண்ணீரை போல
கனவுகளுடனே போனதடி
கண்ணே - நம்வாழ்வு!..

நினைவு

என் எண்ணத்தில் உள்ளதை
எளிதில் எழுத முடிந்தது
என்னவளாக நீ இருந்தபோது!... 

மனதினில் எழும் அலைகளை 
மடலாக கூட மாற்றமுடியவில்லை - நீ   
மாற்றானின் மனைவியான பின்பு!...   


பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

என்னுள் பாதியாக வந்தவளே!..
என் எண்ணமாகவே வாழ்பவளே!...
எனக்காக பிறந்தவளே!.. - நீ 
தமிழ் போல வாழ்க!...
தலைவர் போல வளர்க!...
என நம் உறவுகளோடும் 
நட்புகளோடும் சுற்றத்தோடும் 
வாழ்த்துகிறேனடி!.. 
வாழிய பல்லாண்டு!...     
வளமுடனும்! நலமுடனும்! 

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஒட்டு மொத்த குடுபத்தினரும்
ஒருசேர குழுமும் ஒருநாள்
புத்தாடை உடுத்தி - தம்வயலில்
புதிதாய் விளைந்த  அரிசியினால்
தித்திக்கும் கரும்பு துணையிருக்க
திகட்டாத வெல்லத்துடன் - கொத்து
மஞ்சளும் முந்திரியும் திராட்சையும்  
மனம் பரப்ப - விவசாயியின்
அனைத்து விளை பொருளும்
அடுப்படிக்கு வந்து சேர
குடிசை தொழிலை ஊக்குவிக்க
குழைத்த மண்கொண்டு செய்த
புதிய மண்பானையில்- மனமகிழ்ச்சியோடு
புதிதாய் பொங்கும் பொங்கல்...
சூரியனுக்கும் கால்நடைகளுக்கும்
ஊருணிக்கும் ஊருக்கும் - என
எம்தொழிலுக்கு உதவும்
எல்லாருக்கும் நன்றி சொல்லி
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட - இனியும்
ஏமாறாமல் நம் உரிமை காத்திட
தமிழனாய் ஒன்றுபட்டு சபதமேற்று
தமிழர் திருநாளை  கொண்டாடிட
அனைவருக்கும் வாழ்த்துகள்.. 

உறவுகளின் நினைவுகள்...

எல்லா  இழப்புகளும்
எப்படியாவது நம்மை
அதன் தாக்கத்திலிருந்தும்
அந்த  நினைவுகளிலிருந்தும்
மீட்டு விடுகிறது!..

வாழ்வின் போராட்டத்தால்..
வாழவேண்டிய நிர்பந்தத்தால்..
நண்பர்களின் நேசத்தால்..
நல்லவர்களின் பாசத்தால்..
மீண்டோ; மறந்தோ போகிறோம்

எல்லோரும் ஒருமித்து
எதிர்காலத்தை நோக்கி  
நிகழ்காலத்தில் ஓடுகையில்
இறந்தகாலம் தந்த எல்லா
இழப்புகளும் மறந்துவிடுகிறது..

வாழ்வுதந்த தந்தை..
வழிநடத்திய அண்ணன்..
அரவணைத்த தாத்தாபாட்டி - என
அனைத்து உறவுகளின்
நினைவுகள் கூட
நிழல்படத்துடனே நின்றுவிடுகின்றன..

எங்கள் தேசம்...

பல அடுக்கு மாடி
கட்டிடங்கள்...
பறந்து விரிந்த பசுமையான
தரைத்தளங்கள்....
குப்பை இல்லா தூய்மையான
சாலைகள்...
சாக்கடை இல்லாத சுத்தமான
வீதிகள்...
குளு குளு வசதியுடன்
பேருந்துகள்...
குறித்த நேரத்தில் வரும்
ரயில்கள்...
நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும்
நடைபாதைகள்...
விளையாட குறிப்பிட்ட தூரங்களில்
இடவசதி...
வீதிக்கு ஒரு  பூங்கா...
வீட்டுக்கு அனுப்ப பணம்...
என எல்லா வசதிகளும்
இந்த அந்நிய தேசத்தில்
இருந்தாலும்....
அன்பாய் நேசம் விசாரிக்க
அண்டை வீட்டில் ஆளில்லை!...
அக்கறையாய் திட்ட  எந்த
பெரியவர்களும் இல்லை!...
உறவுகளை வீட்டுக்கு கூப்பிட
உரிமை இல்லை!...
தடுமாறும்போது தூக்கி  நிறுத்தும்
நண்பர்கள் இல்லை!...
அரவணைக்கும் சுற்றம் இல்லை!..
அன்பு கொள்ள பெற்றோர் இல்லை!...
குப்பையாய் இருந்தாலும்...
சாக்கடையில் நடந்தாலும்
எங்கள் தேசத்துக்கு நிகராகுமா
இந்த அந்நிய தேசம்!...  

தலைவன்...

மன்னராட்சியில் அன்று
மன்னன்  என்பவன்
தன்னலம் கருதாமல்
தன் மக்கள் நலம்
பேணியவன்!...

குடியாட்சியில் இன்று
தலைவன் என
முன்னிருத்த படுபவர்கள்
தன் குடும்ப நலமே
முக்கியமென நினைப்பவர்கள்!...

 அத்தி பூத்தார்ப்போல
அவதரிக்கும் உண்மை தலைவனை..
மக்களுக்குக்காக தன் கட்சி
மரியாதைகளை உதறித்தள்ளும்
மனிதனை  - இக்காலம்
நமக்கு தருகிறது - அவர்களை
நாம் தான் இனம் கண்டு
நாளைய நாயகனாய்
நம் இனம் வளர வாழ
நாம் போற்றி வரவேற்க வேண்டும்!..  

என் கிராமம்...

( இது எனது வலைதளத்தில் 150 வது படைப்பு)


ஊருக்கு மத்தியில் தவழும்
ராஜாமட கால்வாயின் உதவியால்
முப்போகம் விளையும் விவசாயம்
ஊரின் முகப்பிலிருந்து முடிவுவரை
பச்சை தரை விரிப்பாக
செழித்து விரியும் இயற்கை!..
ஊருக்கு நடுவில் ஒய்யாரமாய்
மேனிலை பள்ளி - அடுத்து
கூட்டுறவு வங்கியும்,
நுகர் பொருள் வங்கியும்..
கபடி, வாலி பால், கிரிக்கெட் என
எல்லா விளையாட்டிலும் பரிசினை
பெற்று வரும் மாணவ, வாலிபர்கள்..
மாவட்ட ஆட்சியர் முதல் கொண்டு
கடை நிலை ஊழியர் வரை
எல்லா அரசு பதவிகளிலும்...
கிளை செயலரில்  ஆரம்பித்து
மாவட்ட செயலர், சட்ட மன்ற உறுப்பினர் என
அரசியலின் அனைத்து பதவிகளிலும்...
திருப்பூரில் தொழிலாளி முதல்
அமெரிக்காவில் விஞ்ஞானி வரை...
என எல்லா நிலைகளில் எம்மை
வளர்த்து விட்ட
எம் மண்ணை,
நம் கிராமத்தை,
நாமெல்லாம் மறந்தது சரியா
என் கிராமத்து உறவுகளே!...     

வாகை சூடும் தமிழன்

கர்நாடகாவில் காங்கிரஸ் வருமெனில்
காவேரி வற்றவும் செய்வோம்..
ஆந்திராவில்  காங்கிரஸ் ஆட்சிஎனில்
ஆத்திரப்பட்டாலும் பாலாறு வராது..
ஒருதொகுதி கிடைத்தாலும் கேரளாவில் -
ஒருசொட்டு  வராது முல்லைபெரியாரில்..
மக்களின் எழுச்சியில் வேண்டாம்  என்றாலும் எங்கள்
ம(ப)னம் கு(து)ளிர அனல்மின் நிலையம் தருவோம்..
தமிழன் எது கேட்டாலும் இல்லை என்போம்
தமிழ்மண்ணை  பாதுகாப்பில்லா  பரிசோதனைக்கு உட்படுத்துவோம்..
போராடும் தலைவர்களை உள்ளே போடுவோம்
பேட்டி தரும் தறுதலைகளுக்கு பெட்டி தருவோம்..
ஓட்டு போட்ட மக்களின் வாய்களுக்கு
பூட்டு போடுவோம்!.. மீறி  போராடினால்
கொலவெறி பாடும் நடிகருக்கு
கொத்துபரோட்டா விருந்து வைப்போம்..
இன்னும் போராடினால் ஒரு நடிகையின்
இடுப்பை காட்டி கலாச்சாரம் காணமல் போனதென்போம்..
மானத்தோடு போராடும் தலைவன் கிடைக்கபெற்றால்
மறைந்திருந்து அந்த தலைவனை கொல்ல பார்போம்..
என்றெல்லாம் கொக்கரிக்கும் காங்கிரசின் தலைமைக்கு
எங்கிருந்தோ வந்தவர்  தலைவியாம்...
மானமுள்ள மனிதர்களே இன்னும் நீங்கள்
மங்கி கொண்டிருக்கும் காங்கிரசில்
இருந்தால் குறித்துகொள்ளுங்கள்
இங்கிருந்து தான் உங்களின்
அழிவு ஆரம்பமாகிறது...
ஆண்ட தமிழன் தான் உங்களை
அடிச்சுவடு காணமல் விரட்ட போகிறான்
புறப்பட்ட மக்கள்படை புதிய
புலிப்படையாய் வெற்றி வாகை சூடும்
புதிய ஆண்டில், புது வெற்றியோடு!...

வாழ்வோடு நீ

உன்னை பார்க்க பார்க்க
உள்மனதில் ஒரு குதுகலம்  
உன்னோடு பேச பேச
உயிரினில் ஒரு பரவசம்
உன்னோடு வாழ்தலை நினைக்கையில்
உயிரோடு ஒரு சொர்க்கம்!..

ஏனடி சென்றாய்...

அர்ச்சுனனின் வில்லை 
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்  
உன் இதழ்களில் பார்க்கவைத்து
ஏதும் அறியாதவனாக
ஏதோவென்று வாழ்ந்தவனை
எல்லாராலும் அறியபட்டவனாக்கி
என் வாழ்வினில்  வந்து
ஏதும் அறியாதவள்  போல
ஏனடி சென்றாய்? 

அழகின் ஊற்றே...

ஊட்டி மலர்தோட்டத்தில்
உள்ள பூக்களெல்லாம்
உன் முகம் பார்த்த நொடியில்
தன் தலை தாழ்த்தி கொள்கிறது

நாணல் செடி கூட நாணத்தால்
நன்னிலம் நோக்கி தலைசாய்க்கிறது
உன் நாணத்தின் நளினம் கண்டும் 
உன் கொடியிடை அழகில் மயங்கியும்

இயற்கையே உன்னை பார்த்து
இறக்கையில் ஒண்ணுமே இல்லாத
இந்த இளைஞன் எம்மாத்திரம்....  

தரிசனம்...

ஆயிரமாயிரம் கவிதைகள்
அடுத்தடுத்து வருகின்றது
அமைதியான உன் கண்களை 
அருகினில் தரிசிக்கும் போது....

கேள்வி?...

ஆயிரமாயிரம் மைல்களுக்கு
அப்பால்  இருந்தபோது
உன்னில் நான்கண்ட
உள்ளமுருகிய காதல்
உன்னருகினில்
வாழ்ந்திடும்போது
வாய்க்காதது ஏனோ? 

பிரிவு..


அழும் குழந்தை கூட
அழகாய் சிரிக்கும்;
உன் உதட்டோர
உயிர் புன்னைகையால்...
கருணை நிரந்த
காந்த கன்னழகியே...
புதிதாய் பூத்த பூப்போல
புத்துணர்ச்சியுடன் எப்போதும்
வலம் வர தெரிந்தவளே!...
வாழும் நாள் வரை 
வலிதரும் பிரிவு தந்ததேனடி?  

வேறுபாடு..

உன்னை சிந்திக்கும் தருணங்களில்
உச்சம் தொடுகிறேன் - சாதனைகளால்!...
உன்னை சந்திக்கும் நேரங்களில்
அச்சம் அடைகிறேன் - சோதனைகளால்!...  

வலி..

நெருங்கி வரும்
ஒவ்வொரு வேளையிலும்
நெருஞ்சி முள்ளால்
நெஞ்சினில் குத்தும்
வலி தந்து
விலகுவதேனடி கண்ணே!...

எம் தலைவா!...

உலகில் அதர்மம்
தலையெடுக்கும் போது
கடவுள் அவதரிப்பார்
என்கிறது இதிகாசங்கள்
இது உண்மையா என
தெரியாது - ஆனால்
தமிழர்கள் தாக்கப்பட்டாலும்
தன்மானம் கேள்வியாக்கப்பட்டலும்
நீ அவதரிப்பாய்
என்பது உண்மை
எம் தலைவா!...