அலை மனசு....

உனெக்கென்ன
என்னை பற்றிய
எந்த சலனமுமின்றி
கிணற்று தண்ணீரை போல
அமைதியாக உள்ளாய்.....
ஆனால்....
நீ குடிகொண்ட
இந்த மனசு மட்டும்
ஆழ்கடல் அலையை போல
எந்நேரமும் உன்னின்
நினைவுகளை சுமந்து
நித்திரையை கலைத்து
கொண்டிருக்கிறது.....

நினைவலை...

தண்ணீரில் எவ்வளவு
அழுத்தினாலும் மேல்வரும்
தக்கையை போல...
என்னதான் உன்னை
மறக்க முயற்சித்தாலும்
நினைவலைகளில் நீந்தி
மனதுக்குள் வந்து விடுகிறாய்

நம்பிக்கை வார்த்தை....

என் எண்ணங்களில் நிரம்பி
என்னாலும் சாதிக்க முடியுமென்று
எனக்கு நம்பிக்கை தந்து
என்னை சேராமலே சென்றவளே...

உன்னை சந்திக்காத ஒவ்வொரு கணமும்
உன்னை அடையாத வாழ்வின் நொடிகளும்
உனது நம்பிக்கை தந்த வார்த்தைகளால்
உருண்டோடி செல்கிறதென தெரியுமா கண்ணே!...

காதலுக்கு நன்றி.....

வற்புறுத்தி வருவதில்லை காதல்.
கட்டாயபடுத்தி வாழ்வதில்லை வாழ்கை.
அது -
ஒரு புரிந்துணர்தல்.
ஒரு அழகான கவிதை.
நேசிக்க சுவாசிக்க நம்பிக்கையளிக்கும்,
நம்மை வாழ்வின் வேறு ஒரு
பரினாமத்தை கானச்செய்யும்
உருவமில்லா குழந்தை.
சொல்லி புரிய வைப்பதில்லை,
உணர்ந்து தெரிந்து கொள்ளுதல்.

நன்றி கண்ணம்மா!...

உன்னால் நான் உணர்ந்த
அந்த விவரிக்க இயலாத உணர்வுகள்……
என்னை எரித்தாலும் மிஞ்சும்
என் சாம்பலிலும் எஞ்சி இருக்கும்.
எனக்கான….,
என் கவிதைக்கான….
களமாக நீ இருந்ததற்கு….,
மறந்து போன என் எழுத்துக்களை
எனக்கு மீட்டு தந்ததற்கு...
வாழ்வின் வெளிச்சம் குடுத்ததற்கு....
வாழ வேண்டும் என்ற வேகம் தந்தற்கு.....
நன்றிகள் பல..  பல!...

சிங்கை நாடே!...

என் தாய் மொழியை
தமிழ் மொழியை - உன்
ஆட்சி மொழியாய் கொண்ட
சிங்கை நாடே!...
பணியாற்ற வந்த இடத்தில்
பாசமிக்க நண்பர்களை தந்து
பலவித மொழி பேசும்
பல்லாயிரம் பேர்களை
சந்திக்க வைத்து - என்னை
சிந்திக்க வைத்து!...
சிறந்ததொரு வாழ்வுக்கு
அடித்தளமிட்டு!... அடியவன்
எளியவன் என்னையும்
அரவணைத்த எங்கள்
அன்பின் முகவரியே!...
எங்கள் தமிழர்களை
எப்போதும் உன்
மகுடத்தில் வைத்துள்ளாய்..
எங்கள் சிகரத்தில்
என்றென்றும் உனக்கு
மணிமகுடம் உண்டு!...

உணர்வு!...



செந்தூர தமிழில் - உன்
தேன் குரல் கேட்கும்
வாய்ப்பு கிடைக்க பெற்றது போது
ஏற்பட்ட உணர்வு தான்....
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ?  

வருகிறேன்!..

மண்வாசனை நுகர்ந்து
மண்வெட்டி பிடித்து
வரப்புகளில் நடந்து
வானத்து பறவைகளை
ரசிக்க வருகிறேன்!...
என்னை தாலாட்டிய
என் மண்ணே!..
என்னை ஆளாக்கிய
என் உறவுகளே!...
உங்களை கான
உவகையோடு வருகிறேன்!.
ஆறு - குளம்
அன்பு நண்பர்களென
உங்களை பார்க்க
உறக்கமின்றி தவித்து
ஓடி வருகிறேன்!..

சந்திப்பு

அள்ளி அனைத்து
அன்பாய் ஒரு
முத்தம் தர...
முழு நிலவே
உன்னை கட்டியணைத்து
உலகின் மிச்சம் ரசிக்க...
மனதை மயக்கிய உன்
மாமன் பறந்து
வருகிறேன் முதல்
வாரம் நவம்பரில்!.. 

வாழ்வு...

உங்களுக்கு தோன்றும்
உணர்வுகள் எங்களுக்கும்
ஏற்படும்!...
நீங்கள் செய்ய நினைப்பதில்
நாங்கள் சிலவற்றை செயல்படுத்த
முற்படலாம்!...
சத்தமாய் பேசுவது சரியெனில்
சுத்தமாய் சத்தமாய் பேச
நிலைப்படும்!...
வாழ்கை எனும் வண்டியை
வழிமாறாமல் இழுக்கும்
இரு மாடுகளை போல
இருவரையும் எண்ணிடுங்கள்!..
இங்கே ஆண்வேறல்ல பெண்வேறல்ல
இன்முகத்தோடு வாழ்ந்திடுங்கள்!..

என் அண்ணனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

06-09-2012
தாயோ தந்தையோ
தரணியில் நண்பனாக
சகோதரனாக வழிகாட்டியாக
சகமனிதனாக இருந்ததுண்டு!..
என்ன தவம் நான் செய்தேன்
என் அண்ணா!.. நீ எனக்கு
தாயாக தந்தையாக ஆசானாக
தடம் மாறாமல் வாழ ஒரு
நண்பனாக, அண்ணனாக கிடைத்திட!...
உன் பெயர் சொன்னால்
ஊரே புகழும் செல்வம் நீ!..
கருணை நிறைந்த காந்த
கண்ணழகன் என அறியப்பட்டவன் நீ!..
வீரத்தின் இனத்தில் பிறந்த
வீரராசனின் மகனே!.. அழியாத
புகழ் கொண்ட இளங்கோவடிகள் போல
பெயர் பெற்ற எங்கள் இளங்கோவன் நீ!..
உன்னை போல பலர் உருவாகினாலும்
உன்னிடத்தை நிரப்பிட முடியாது என
உன்னை  அறிந்தவர்களால்
ஆராதிக்கபடுபவன் நீ!..

நீ எம்மை விட்டு சென்று
ஒரு குறிஞ்சி மலர் பூத்துவிட்டது!..
எப்போதும் தோற்காத
என் அண்ணனே!.. உனது
வார்ப்பு தோற்காமல் இருக்க  என்
வாரிசாக மீண்டும் பிறந்து விடு!.. 

எங்கள் தந்தையின் 16 ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

07-08-2012

அய்ந்து  கல் தொலைவுக்கு
அப்பால் கல்வி கற்க
அனுப்ப யோசித்த காலத்தில்
அய்யேழு  கிலோமீட்டர் தள்ளி
அற்ப்புதமான தொரு புனித
ஆரோக்கிய அன்னை பள்ளியில்
அக்கறையாய் எம்மை சேர்த்து
அறிவினைபெற வழிவகுத்த
அய்யனே!...

அரசியலில் பணபலமும்
அதிகார பலமும்
அங்கங்கே பரவிகிடந்த
அந்த காலத்தில்
அத்தனையையும் மீறி
அனைவரும் அறியும்படி
வீரமாய் வீரராசனாய்
அல்லும்பகலும் உழைத்தாய்
முதல்வனாய் நம் ஒன்றியத்தில்
மொழிப்போர் தியாகியான
எங்கள்  தந்தையே!...

செல்லும் திசையெங்கும்
சிறப்பாக செயல்பட்டு - உமது
சிந்தை வியக்கும்
சிறந்த அனுபவங்களை எமக்கு
அன்பாக எடுத்துரைத்து
அழகான ஒரு வாழ்வுக்கு
அடித்தளமிட்ட எங்கள்
ஆசானே!....

எல்லா வகையிலும் நீவிர்
எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமாய்
எங்களோடு வாழ்ந்தீர்கள்
ஆனால் -
எப்படி இறக்க வேண்டும்
என்பதற்கும் எடுத்துக்காட்டாக
எங்களை விட்டு சென்றதேனப்பா?

எதிர்படும் ஒவ்வொரு அனுபவமும்
எதிர்கொள்ளும் சில சாதனைகளும்
என்றென்றும் நீங்கள்
எங்களுடனே வாழ்கின்றீர்கள்
என்ற நம்பிக்கையில்
வாழும் நாள் வரை
வையகத்தில் உம்மை
போற்றிடுவோம் அப்பா!...       

ஏமாற்றம்...

மூவிரண்டு வருடங்களாக - இவனின்
மூச்சு காற்றினில் கலந்தவள்
மூவாரயிரம் கல்களையும் கடலையும்
முழுநிலவாய் தாண்டி வந்து தன்
முகமதனை காட்டிட மாட்டாளா?

வந்து சேரும் நாள் - என்
வாழ்வில் வசந்தம் வீசும் காலமென
வையகத்தில் வாழ்ந்திருந்தேன்
வாசம் வீசும் பாவையவள்
வாஞ்சையுடன் பார்வையால்
வருடிட மாட்டாளா? என

நெஞ் செல்லாம் காற்றால்
நிரப்ப பட்டதை போல
நின் வருகையால் ஒரு
நித்திய பரவசமடைந் திருந்தேன்
ஆனால் - என்னை புறந்தள்ளி
அமைதியாய் சென்றதேனடி?

முரண்பாடு...

உன் தோள்களில்
என் மாலையினை
நீ தாங்காததால்
நான் உனக்கு
தோழனானேன்!..

யுத்தம்

உன்னை நினைக்க நினைக்க
உயிருக்குள் ஒரு புது இன்பம்
உன்னை என்னில் எழுத எழுத
உயிரோடு ஒரு புது யுத்தம்

தமிழே!..

(எனது 175 வது படைப்பு )

தமிழே!.. என் உயிரே!...
மனதில் தோன்றி
எண்ணங்களில் உருமாறி
வார்த்தைகளில் நீ வெளிப்படும்
அழகு!.. அமுது!...

உன்னை சிந்திக்கும் நொடிதனில்
வார்த்தையாக வெளிப்பட்டு
எதிரில் இருப்பவரின்
மனம் கவரும் நீ
கம்பீரம்!.. கலை!...


நதியின் நளினம்  போல
உன் சொல்லின்
வளைவும் நெளிவும்
பேசுபவரையும் மயக்கும்
புவிஈர்ப்பு  விசையாய்  நீ
இனிமை!.. இளமை!...

சாகும் நாள் வரை
உன்னை நேசித்து
சுவாசித்திட வரம் தா
என் தாயே!.. 
என் தமிழே!... 

பெரும்பாக்கியம்....

உன்னின் ஒவ்வொரு செயலையும்
உள்ளத்தின் பெருஉவகையுடன்...
உடனிருந்த பார்த்து
உன்னை ரசித்த
அந்த தருணங்களும்...
உன் செல்ல சண்டைகளின்
உளமான அன்பையும்...
மீண்டுமொரு முறை
அனுபவித்திடும் பாக்கியம்
கிடைத்திடுமா - என் அன்பே? 

அன்பே.....

அருகினில் இருந்த
அற்புத தருணங்களில்
அவை நாகரிகம் கருதி
அமைதியாக நாம் பிரிந்தாலும்
அல்லல்படும் மனம்
அனுதினமும் நினைத்திடுதே!..
அன்பே உன்னையே
அணுவணுவாய் ரசித்திடுதே!...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் வாழ்வுக்காக
உன் வாழ்வையே அர்பணித்து
உலகின் ஒவ்வொன்றையும் கற்றுத்தந்து
அன்பையும் அறனையும்
அடிமனதில் பதியவைத்து
அமுதென்னும் தமிழையும்
அழகாய் நேசிக்க வைத்து
சுற்றத்தும் நட்பையும்
சுவாசமாக சுவாசிக்க வைத்தவளே!
உலகின் இணையற்ற என்
உயிரினும் மேலான
என் அம்மாவே!...
நன்றி என்ற
ஒற்றை வார்த்தையில்
உனக்கு நான்பட்ட கடனை
அடைக்க முடியாது
ஏழேழு தலைமுறையிலும்
உன் மகனாகவே
பிறந்திட வேண்டும் அம்மா!..
ஈன்ற தாயோடு - என்னை
போற்றி வளர்த்த அன்னைகளுக்கும்
அனைத்து அம்மாக்களுக்கும் - இந்த
அன்னையர் தினத்தில்
வாழ்த்துகளோடு நன்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!..

சிவாஜி கணேசன்

உலகின் ஒப்பற்ற நடிகனே
உன்னை முழுமையாய்
ஒருவரும் பயன்படுத்த வில்லை
என்பதில் சிறு வருத்தம் இருந்தாலும்
உன்னை பெற்றதால் தமிழோடு
இந்த இனத்தோடு
இவனும் பெருமைபடுகிறான்
 
 
 

ஹைக்கூ

திருவிழாவில் இருக்கும்
ஆயிரம்  பேருக்கு
மத்தியிலும் - நீ
தனித்து தெரிவாய் - உன்
மந்திரப் புன்னகையால்!...

=================================


ஹைக்கூ எனும்
இரு வரி புலம்பல் போல
இரவெல்லாம் உன்னை
பற்றிய புலம்பலாக
இதமான கனவு

===================================