எங்கள் தந்தையின் 16 ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

07-08-2012

அய்ந்து  கல் தொலைவுக்கு
அப்பால் கல்வி கற்க
அனுப்ப யோசித்த காலத்தில்
அய்யேழு  கிலோமீட்டர் தள்ளி
அற்ப்புதமான தொரு புனித
ஆரோக்கிய அன்னை பள்ளியில்
அக்கறையாய் எம்மை சேர்த்து
அறிவினைபெற வழிவகுத்த
அய்யனே!...

அரசியலில் பணபலமும்
அதிகார பலமும்
அங்கங்கே பரவிகிடந்த
அந்த காலத்தில்
அத்தனையையும் மீறி
அனைவரும் அறியும்படி
வீரமாய் வீரராசனாய்
அல்லும்பகலும் உழைத்தாய்
முதல்வனாய் நம் ஒன்றியத்தில்
மொழிப்போர் தியாகியான
எங்கள்  தந்தையே!...

செல்லும் திசையெங்கும்
சிறப்பாக செயல்பட்டு - உமது
சிந்தை வியக்கும்
சிறந்த அனுபவங்களை எமக்கு
அன்பாக எடுத்துரைத்து
அழகான ஒரு வாழ்வுக்கு
அடித்தளமிட்ட எங்கள்
ஆசானே!....

எல்லா வகையிலும் நீவிர்
எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமாய்
எங்களோடு வாழ்ந்தீர்கள்
ஆனால் -
எப்படி இறக்க வேண்டும்
என்பதற்கும் எடுத்துக்காட்டாக
எங்களை விட்டு சென்றதேனப்பா?

எதிர்படும் ஒவ்வொரு அனுபவமும்
எதிர்கொள்ளும் சில சாதனைகளும்
என்றென்றும் நீங்கள்
எங்களுடனே வாழ்கின்றீர்கள்
என்ற நம்பிக்கையில்
வாழும் நாள் வரை
வையகத்தில் உம்மை
போற்றிடுவோம் அப்பா!...       

ஏமாற்றம்...

மூவிரண்டு வருடங்களாக - இவனின்
மூச்சு காற்றினில் கலந்தவள்
மூவாரயிரம் கல்களையும் கடலையும்
முழுநிலவாய் தாண்டி வந்து தன்
முகமதனை காட்டிட மாட்டாளா?

வந்து சேரும் நாள் - என்
வாழ்வில் வசந்தம் வீசும் காலமென
வையகத்தில் வாழ்ந்திருந்தேன்
வாசம் வீசும் பாவையவள்
வாஞ்சையுடன் பார்வையால்
வருடிட மாட்டாளா? என

நெஞ் செல்லாம் காற்றால்
நிரப்ப பட்டதை போல
நின் வருகையால் ஒரு
நித்திய பரவசமடைந் திருந்தேன்
ஆனால் - என்னை புறந்தள்ளி
அமைதியாய் சென்றதேனடி?

முரண்பாடு...

உன் தோள்களில்
என் மாலையினை
நீ தாங்காததால்
நான் உனக்கு
தோழனானேன்!..

யுத்தம்

உன்னை நினைக்க நினைக்க
உயிருக்குள் ஒரு புது இன்பம்
உன்னை என்னில் எழுத எழுத
உயிரோடு ஒரு புது யுத்தம்

தமிழே!..

(எனது 175 வது படைப்பு )

தமிழே!.. என் உயிரே!...
மனதில் தோன்றி
எண்ணங்களில் உருமாறி
வார்த்தைகளில் நீ வெளிப்படும்
அழகு!.. அமுது!...

உன்னை சிந்திக்கும் நொடிதனில்
வார்த்தையாக வெளிப்பட்டு
எதிரில் இருப்பவரின்
மனம் கவரும் நீ
கம்பீரம்!.. கலை!...


நதியின் நளினம்  போல
உன் சொல்லின்
வளைவும் நெளிவும்
பேசுபவரையும் மயக்கும்
புவிஈர்ப்பு  விசையாய்  நீ
இனிமை!.. இளமை!...

சாகும் நாள் வரை
உன்னை நேசித்து
சுவாசித்திட வரம் தா
என் தாயே!.. 
என் தமிழே!... 

பெரும்பாக்கியம்....

உன்னின் ஒவ்வொரு செயலையும்
உள்ளத்தின் பெருஉவகையுடன்...
உடனிருந்த பார்த்து
உன்னை ரசித்த
அந்த தருணங்களும்...
உன் செல்ல சண்டைகளின்
உளமான அன்பையும்...
மீண்டுமொரு முறை
அனுபவித்திடும் பாக்கியம்
கிடைத்திடுமா - என் அன்பே? 

அன்பே.....

அருகினில் இருந்த
அற்புத தருணங்களில்
அவை நாகரிகம் கருதி
அமைதியாக நாம் பிரிந்தாலும்
அல்லல்படும் மனம்
அனுதினமும் நினைத்திடுதே!..
அன்பே உன்னையே
அணுவணுவாய் ரசித்திடுதே!...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் வாழ்வுக்காக
உன் வாழ்வையே அர்பணித்து
உலகின் ஒவ்வொன்றையும் கற்றுத்தந்து
அன்பையும் அறனையும்
அடிமனதில் பதியவைத்து
அமுதென்னும் தமிழையும்
அழகாய் நேசிக்க வைத்து
சுற்றத்தும் நட்பையும்
சுவாசமாக சுவாசிக்க வைத்தவளே!
உலகின் இணையற்ற என்
உயிரினும் மேலான
என் அம்மாவே!...
நன்றி என்ற
ஒற்றை வார்த்தையில்
உனக்கு நான்பட்ட கடனை
அடைக்க முடியாது
ஏழேழு தலைமுறையிலும்
உன் மகனாகவே
பிறந்திட வேண்டும் அம்மா!..
ஈன்ற தாயோடு - என்னை
போற்றி வளர்த்த அன்னைகளுக்கும்
அனைத்து அம்மாக்களுக்கும் - இந்த
அன்னையர் தினத்தில்
வாழ்த்துகளோடு நன்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!..

சிவாஜி கணேசன்

உலகின் ஒப்பற்ற நடிகனே
உன்னை முழுமையாய்
ஒருவரும் பயன்படுத்த வில்லை
என்பதில் சிறு வருத்தம் இருந்தாலும்
உன்னை பெற்றதால் தமிழோடு
இந்த இனத்தோடு
இவனும் பெருமைபடுகிறான்
 
 
 

ஹைக்கூ

திருவிழாவில் இருக்கும்
ஆயிரம்  பேருக்கு
மத்தியிலும் - நீ
தனித்து தெரிவாய் - உன்
மந்திரப் புன்னகையால்!...

=================================


ஹைக்கூ எனும்
இரு வரி புலம்பல் போல
இரவெல்லாம் உன்னை
பற்றிய புலம்பலாக
இதமான கனவு

===================================

ஒரு முறை

என் எண்ணங்களின் 
எழுச்சியாய்!...
என் சிந்தனைகளின் 
சிற்பமாய்!...
என் நம்பிக்கையின் 
விழுதாய்!..
என் கற்பனைகளின் 
காவியமாய்...
என் வாழ்வின் 
வெளிச்சமாய்...
என் கண்ணெதிரில் 
இருந்த உன்னை 
கவனிக்க தவறியவனின்   
கடைசி நிமிடங்களில் - அந்த 
வெட்கத்தின் நளினத்தோடு 
உன் ஒத்தை புன்னைகையோடு 
ஒரு முறை என்னை பார்த்துவிடு
முழு நிறைவோடு 
மூர்சையடைவேன்!...

இசைத்தாயே!...

மார்கழி திங்களில் வரும் 
       சங்கீத சாரலாய் என்
மனதினுள் ஒய்யாரமாக  
      சம்மணமிட்ட இசைத் தாயே!...

சங்கீத அறிவு சற்றே  
     இல்லாவனின் பாசம் 
சாகும்வரை வேண்டாமென்று 
      இரக்கமில்லாமல் போனதேன்?




தரிசிக்க வேண்டுமடி!...

வாழும் நாளெல்லாம்
வலி தருபவளே!... 
நான் 
வையகத்தை விட்டு
செல்லும் முன்... 
வாடாமலரே!.. என்
வாழ்வே!... ஒரு முறை 
எந்தன் உயிர் 
உந்தன் முகம்தனை  
தரிசிக்க வேண்டுமடி!...

வாழ்வே!...

வாழ்கையை கற்றுத்தந்தாய்! - என்
வாழ்வாக நீயே இருந்தாய்!
வாழ்வின் வேகம்  தந்தாய்! - என் 
வாழ்வின் தாரமாய் உன்னை நினைத்தால்
வரலாற்று பிழை செய்தது போல - என்னை
வழியிலேயே விட்டு சென்றதேனடி?  

வெற்றிடம்!...

நடந்து கொண்டிருக்கும் 
நிகழ் காலத்தில் 
கடந்து செல்லும் 
உன்சாயல் ஒத்த பெண்களை 
பார்க்கும் போதெல்லாம் 
என் வாழ்வில் நீ தந்த 
வெற்(றி)றிடம் - மனசுக்குள் 
வந்து செல்கிறதடி!...

வலி!...

காதலின் வலி 
காலத்தின் கட்டாயம் 
எனில் 
மொத்த ஆயுளின் நிமிடங்கள் 
அந்த வலியின் மிச்சங்கள் 


வாழ்வு

ஒவ்வொருவரும் ஏதோ
ஒரு தருணத்தில்
ஒவ்வொருவரையும் ஏமாற்றி
ஒவ்வாத ஒரு வாழ்வு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம்!...

காதலிலும் - ஒவ்வொரு
கணத்தையும்  - இதயத்தின்
காயத்தையும் -  வலியையும்
கண்ணுக்குள் வைத்து
காலத்தை கழிக்கிறோம்!...

என் காதலே!

காதலே என்றதும்  - என்
கைகளில் புகுந்து - எழுத்தாய்
வெளிப்படுவாய் - முன்னொரு காலத்தில்!...
இன்றோ - பரிதவிக்கிறேன்; காதலே!
உன்னை மட்டும் நேசித்து
என்னை நேசித்தவளை புறம்தள்ளியபோது
அவள் பட்ட வேதனை - இன்று
நான் படவேண்டுமென
என்னை விட்டு காத தூரம்
ஓடுகிறாயோ?
காதலின் வலி அதன் தோல்வியில் அல்ல
அதன் புறக்கணிப்பில் என உணர்த்துகிறாயோ
காதலே உன்னை மட்டுமே நேசித்தவன்
உன்னை மட்டுமே நேசிப்பவன்
உன்னிடம் வேண்டுகிறேன் -
வெறுத்துவிடாதே  என்னை
நீயின்றி யார் எனக்கு மருந்தாவார்?  

அம்மா...

கருவாய் சுமந்து
கண்ணாய் காத்து
சிறுவயதில் சிங்காரித்து
இளவயதில் பொறுத்து
உன் வாழ்வை தொலைத்து
என் வாழ்வையே
உன் வாழ்வாய் வாழ்ந்தவளே! ...

என் மகளை சுமக்கும் - இந்த
என் தாய்மையில் தான்
உணர்கிறேன் அம்மா...
என் மீதான...
உன் அக்கறையை...
உன் மகிழ்வுகளை...
உன் பதற்றத்தை...
உன் பாசத்தை...

 

தமிழாய் நிமிர்ந்திடு!..

முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட்   என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்
நம்மை சுற்றி நடக்கும் எந்த பிரச்சனையிலும்
கவலையின்றி - தன்னைப்பற்றி மட்டுமே
முன்னிறுத்தி தனிமனித வாழ்வுக்கு
பழக்கப்பட்டு போன -
இந்திய தேசத்தின் இதயங்களே!..
தேசபக்தியின் மொத்த உருவங்களே!..
என் தமிழர்களே!
உங்கள் தமிழகத்தின் நலன்
ஒவ்வொன்றாய் நசுக்கப்பட
ஒவ்வொரு உரிமையாய் பறிக்கப்பட
ஒரு நாள் உன் தனிமனித வாழ்வு
கேள்வியாக்கப்படும் போது... - நீ
தோள்  சாய கூட ஆளில்லாமல்
ஒத்தைமரமாய் நிற்க்கப்படும் சூழல் வரும்
எனவே - இன்றே
தமிழாய் நிமிர்ந்திடு!..
தமிழனாய் வாழ்ந்திடு !..