பிரிவு..


அழும் குழந்தை கூட
அழகாய் சிரிக்கும்;
உன் உதட்டோர
உயிர் புன்னைகையால்...
கருணை நிரந்த
காந்த கன்னழகியே...
புதிதாய் பூத்த பூப்போல
புத்துணர்ச்சியுடன் எப்போதும்
வலம் வர தெரிந்தவளே!...
வாழும் நாள் வரை 
வலிதரும் பிரிவு தந்ததேனடி?  

வேறுபாடு..

உன்னை சிந்திக்கும் தருணங்களில்
உச்சம் தொடுகிறேன் - சாதனைகளால்!...
உன்னை சந்திக்கும் நேரங்களில்
அச்சம் அடைகிறேன் - சோதனைகளால்!...  

வலி..

நெருங்கி வரும்
ஒவ்வொரு வேளையிலும்
நெருஞ்சி முள்ளால்
நெஞ்சினில் குத்தும்
வலி தந்து
விலகுவதேனடி கண்ணே!...

எம் தலைவா!...

உலகில் அதர்மம்
தலையெடுக்கும் போது
கடவுள் அவதரிப்பார்
என்கிறது இதிகாசங்கள்
இது உண்மையா என
தெரியாது - ஆனால்
தமிழர்கள் தாக்கப்பட்டாலும்
தன்மானம் கேள்வியாக்கப்பட்டலும்
நீ அவதரிப்பாய்
என்பது உண்மை
எம் தலைவா!...



வருவாய் - என் தலைவா!..

எப்போது வருமென தெரியாது
தென்றலும் மழையும் - ஆனால்
அதில் மனம் நனையாதவர்
இருக்க முடியாது...
அதுபோல
எப்போது நீ வருவாய் என
எவருக்கும் தெரியாது
ஆனால் வருவாய்  -
எம் இ(ம)னம் து(கு)ளிர - நீ
வருவாய் - என் தலைவா!..

தலைவனின் பிறந்தநாள்

ஆளப்பிறந்த இனத்தின்
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின்  தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...

தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும்  அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...

தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...

உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்

உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,..  வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...

சகோதரி

சுகம்தானா என
ப்ரியமுடன் முகபுத்தகத்தில்
ரிதமாய் வினாவி
யாம் நலமென
ராஜ்ஜியத்தில் உள்ள
ஜனங்களுக்கு தெரியப்படுத்தி
என் கவிதைகளை இன்றும்
நினைவு கூர்ந்து
என் ரசிகையாய்  என்றும்...
என் தோழமைகளையும்
நேசம் பாராட்டியதில்
என் தோழியாய் இன்றும்...
என் நேசத்தையும் சுவாசத்தையும்
நீயும் சுவாசிப்பதில்
என் சகோதரியாய் என்றென்றும்...

மாவீரர் நாள்

தறிகெட்ட எம் வாழ்வு
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள்   மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய  தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...

நாம்...

வெற்று பக்கங்களாய்
இருந்த - இவனின்
வாழ்க்கை புத்தகத்தை
வண்ணத்துபூச்சியாக வந்து
வசந்தத்தை வரசெய்து 
விதவிதமான பூக்களால்
வண்ணமயமான பக்கங்களாய்
மாற்றியவளே!..
உனக்கான வாழ்வில்
உயிராக நான்
உறவாடாதது ஏனோ?

நான்...

ஏதும் எழுதப்படாத
ஏடுகளாக இருக்கும்
என் டைரியை போல
எந்த சலனமும் இல்லாமல்
என்னவளின் வருகைக்காக நான்!...

என்னவள்

நீயில்லா வாழ்வு
நீரில்லா தாமரையாக.... 

11-11-11 அரிதொரு நாளும்.. அரிதொரு தலைவனும்...

நூறாண்டுக்கு ஒரு முறை
வரும் நாளாய் இன்று...
நூறு தலைமுறைக்கும்  ஒரு
தலைவனாய் நீ என்றும்...

மீண்டும் இந்த நாள்
வருமா தெரியாது - ஆனால்
மீண்டு வருவாய் நீ - முள்ளி
வாய்க்காலில் புலி கொடி  ஏத்திட...

தலைவனாய் நீ கிடைத்தது
தமிழினத்துக்கு பெருமை
தாயகத்தை மீட்டு தருவதே
தமிழுக்கு நீ தரும் காணிக்கை...


  

வாழ்வு..

வாழ்வின் வழிகாட்டியாக வந்து
வசந்தத்தை வரசெய்த பெற்றோருக்கு...
சாதிக்க ஊக்கம்தந்து வாழ்வில்
உயர வைத்த சகோதரர்களுக்கு....
தனிமையை ரசிக்க பழகிய என்னை 
தன்னை ரசிக்க வைத்த மனைவிக்கு....
துவண்டு வீழ்ந்த  பொழுதெல்லாம் 
தோள் தந்த   நண்பர்களுக்கு...
நேசம் தந்து என்னை 
நேசித்த சுற்றமும் உறவுகளும்...
என என் எண்ணங்களும் செயல்களும் 
என்றென்றும் உங்களையே சுற்றி வந்தாலும்
விதி வசத்தால் - என் தாய்மண் தந்த 
மதியை அந்நியனுக்கு அடகு வைக்கும் 
அடிமை வாழ்வுக்கு பழகி - உங்களிலிருந்து 
அந்நியப்பட்டு போகிறேன் ... 

நிராகரிப்பு..

ஒரு முறை உன்னுடன்
      உரையாடிட மாட்டேனா என
ஒவ்வொரு நாளும் தவித்து
      உறக்கம் மறந்திருந்தேன் - உயிரே!...

ஒரு முறை உந்தன்
      திருமுகம் கண்டிட மாட்டேனா என
ஒவ்வொரு கணமும் நான்
      தீயாக உருகியிருந்தேன் - அன்பே!...

நேசங்களை சுவாசித்தவளே  - உன்னையே
       சுவாசமாக சுவாசித்தவனை - உன்
நேச கரங்கொண்டு அரவணைக்காமல் 
       சுடும் மண்ணில் நிற்ப்பது போல
நெஞ்சம் வலிக்க என்னை
       நிராகரித்தது ஏனடி - கண்ணே!...  

அடிமை வாழ்வு

கடந்து கொண்டிருக்கும்
காலத்தில் துன்பப்பட்ட
எங்களின் குடும்பத்தையும்
உறவுகளையும் - ஒரு
கௌரவமான சூழலுக்கு
ஆட்படுத்த எங்களையே
நாங்கள் உணர்சிகளற்றவர்களாக
மாற்றி கொண்டாலும்...

படபடக்கும் டாலர் நோட்டுகளை
பார்க்கும் மாத இறுதிநாளில் - அதை
பார்க்கும் எங்களின் கண்களில் தென்படும்
பரவசத்தையும் தாண்டிய வெறுமையை
உங்களால் உணரமுடிகிறதா?

இந்த டாலர் தேசத்தில் நாங்கள்
இழந்து கொண்டிருப்பது என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?

ஐந்து வயதில்
அஆ  என  ஆசான் கற்றுதந்த
அறிவினை!...

ஐயிரண்டு வயதினில்
ஆசையோடு கற்க ஆரம்பித்த
அறுபத்துநான்கு கலைகளை!...

மூவாறு வயதில்
முகம் அறிந்த
மொத்த சுற்றமும் உறவுகளும்!...

மூவேழு வயதில் - எங்களின்
முகவரி காட்டி
துவண்டு போன நேரங்களில்
தோள் தூக்கிவிட்ட நட்பினை!...


நெருங்கி வந்து தடவி பார்த்து
பாசம் காட்டும் தாத்தா பாட்டி!...
பார்த்த நொடியில்
பரவசம் கொள்ளும் அன்னை!...
பார்வையிலே பெருமிதப்படும் தந்தை!...

அள்ளி அணைத்து
அன்பு காட்டும் அண்ணன்...
கால்களை கட்டி கொள்ளும்
அண்ணனின் கடைக்குட்டி...

எல்லாருக்கும் முன்னாள்
யாருக்கும் தெரியாமல்
ஒரு அன்பு பார்வையில் எங்களின்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
பாசத்துக்குரிய மனைவியின் நேசம்

பசியாற்ற தன் குழந்தைக்கு
பலகதை சொல்லி -
நிலா சோறு ஊட்டும்
பக்கத்து வீட்டு அக்கா...

தயிர் சாதம், மிளகாய் வத்தல்,
தாமரை  பூத்திருக்கும் குளக்கரை...
அந்தி அரட்டைக்கு ஆத்தங்கரை...
அரசியல் பேசும் பெரியவர்கள்...
அவர்களை சீண்டும் இளைஞர்கள்...
சித்திரையில் வரும் திருவிழாவா  - அல்லது  
சிட்டாக வரும் தாவணிகளின் விழாவா என
சிந்தை மயக்கும் ஒரு மாதகால விழா...

    
மழையின் மண்வாசனை;  மனதை
மயக்கும் நெல்லின் வாசனை..
பச்சை வயல்வெளிகள்... 
பறவைகளின் கூடுகள்...  


இப்படி நாங்கள்
சின்னதாகவும், பெரிதாகவும்
கிடைக்கவேண்டிய எவ்வளவோ
சந்தோசங்களை
எங்களின் வாழ்க்கையை
எங்களை வளர்த்த கலாச்சாரத்தை
நாங்கள் இழந்துகொண்டிருப்பது
வெறும் உயில்லாத ஒரு டாலர்
நோட்டுக்காக மட்டுமே!...



போராட்டம்....

நின்னோடு வாழ்தலே வரமென்று
வேண்டுதலோடு என் முருகனிடம்
தாரமாய் உன்னை கேட்டு
நித்தமும் தவமிருந்தேன் - என்
வேதமும் நீயென களிப்புற்றிருந்தேன்
தாமரையே!..
வழக்கம்போல விதி சதிசெய்ய உன்னை
முழுமையாக புரிந்த நான்
இறுதிவரை போராடியும் பயனற்று போனதேனம்மா?

அந்நிய தேச வாழ்வு...

அந்நிய தேசத்தில் ஒரு
அரைநாள் உன்னோடு வாழ்தலே
ஆயுளுக்கும் இன்பமென
நினைத்திருந்தேன் !...
ஆறு திங்கள் உன்னருகினில் வாழ
ஆண்டவன் தந்த வாய்ப்பினில்
அரை நாழிகை கூட
நீ - என்னை
அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல்
ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...

கானல் நீர்!...

வார்த்தைகளில் விளையாடி- என்
எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த
தெரிந்த எனக்கு - உன்னிடம்
நேரில் பேச வார்த்தைகளின்றி
தவிக்கும் போது - நான்
வெயில் காலத்தில் தோன்றும்
கானல் நீரை போலவே
உன் வாழ்விலும் தோற்றமளித்தேனோ!....


முடிவுகள்...

இப்போதெல்லாம் அவன் தன்
இயல்பை மீறி முடிவெடுக்கிறான்....
திடிரென எடுக்கப்படும் முடிவுகள்
தீங்கிழைக்கும் என தெரியாமலேயே
எடுக்க படுகின்றன - இங்கு
எல்லோராலும் - அவன் மட்டும்
விதிவிலக்கல்லவே !...

நாழிரண்டு வருடமாய்
நகமும் சதையுமாய் இருந்தவன்
நாகரிகம் கருதி எடுத்த முடிவென
நாலுபேரிடம் சொல்லி பிரிந்தபோது
எத்தனை வலி தந்தது
என்பதை அறிவானா?

ஆறெட்டு மாதமாய் - அவனின்
ஆண்மையை அசைத்து பார்த்தவள்
அங்குலமங்குலமாய் அவனை ரசித்தவள்
அவளோடு வாழ்தலே சொர்க்கமென
அவனுக்கு உணர்த்தியவள்...
அவசரகதியில் எடுத்த முடிவு
ஆயுளுக்கும் வலிதந்ததை அறிவாளா?

எண்ணற்றவர்கள் இப்படி தான்
ஏதோ ஒரு காரணத்துக்காக
எதேச்சையாக எடுக்கும் முடிவுகள்
ஏதோ ஒரு எதிர்வினையை
ஏற்ப்படுத்தி சென்று விடுகின்றன
ஆனால்,
அது தரும் வலியும் வேதனையும் - நம்
ஆயுளின் உச்சமாய் இருப்பதை
அனுபவிக்க துவங்கும் நேரத்தில்
ஆளில்லா ஒரு தேசத்தில்
அன்னியப்பட்டு போனதை போல - உன்னையே
ஆச்சர்யமாய் நீ பார்க்க நேரிடும்
அப்போது நீ தோள் சாயகூட
ஆளில்லாமல் போக கூடும்!....

பருவம்...

கைகெட்டா நிலவை காட்டி
உணவருந்த வைத்தது
குழந்தை பருவம்
கைக்கெட்டும் உன்னை காட்டி
சாதிக்க வைத்தது - என்
இளமை பருவம் !..

என் கவிதைகள்....

துணை இல்லா சிட்டு குருவி போல
விடை தெரியா ஏக்கத்துடன்
என் கவிதைகள்!...

என் மனது

எதை தேடி
இந்த அலைகள்
ஒவ்வொரு முறையும்
கரைக்கு வருகிறதோ
அதே போல
விடை அறியாமல்
உன்னை தேடியே
வருகிறது - என் மனது

வாழும் வரம்

ஊருக்கு வெளியில்
ஒருவரும் இல்லா தேசத்தில்
உன் மடியில் தலை வைத்து
இந்த உலகை ரசிக்காமல் போவேனா
இல்லை - செல்லமே ...
உன்னோடு வாழும் வரம்
வாழ்வெல்லாம் கிடைக்குமா?

காதல்..

நீ என்னருகில் இல்லா நேரங்களில்
நினைவுகளில் நீந்தி மெல்ல கொள்கிறாய்
நேரில் பார்க்கும் போது - ஏனோ
நெஞ்சில் இருப்பதை சொல்ல மறுக்கிறாய்
கனவுகளில் தினம் கண்ணாமூச்சி
காட்டுகிறாய் - என் காதலை சொன்னால்
காதுகளை மூடி கொள்கிறாய் -
என் காதலியே!...
நம் காதலை கரை சேர்ப்பாயா?

பூஜை...

இறைவனின் பூஜைக்கு வந்த
அர்ச்சனை பூவே
காலையில் - நீ
கலையாய் - கவியாய்;
மாலையில் - நீ
தீயாய் - தீபமாய்;
சங்கீதம் ஒலிக்க
மத்தளம் இசைக்க
மோகனமாய் நாட்டியம்
அரங்கேற...
வேதமாய் - நிவேதமாய்
புதினமாய் - புவனமாய்
மங்கைகள் குலவையிட
ஆண்டாள் அருள்வேண்டி
லாவகமாக ஊர்கூடி இழுக்க
சத்தியமாய் சொல்கிறேன்
ரம்பையும் ஊர்வசியும் போல
அசைந்தாடி வருகிறது
ஐயாறு அடி
அய்யனாரு தேரு....

காதலே உன்னை ஆராதிக்கிறேன்....

அன்பே!.. அழகோவியமே!..
ஆராதிக்க வேண்டியவள் அல்லவா நீ!...
அழகு பதுமையே
ஆர்பரிக்கும் அழகுடையவளே
ஆண்டவன் உன்னை எனக்கு
ஆண்டு சில கடந்த பின்
அறிமுகப்படுத்தியதின் நோக்கம் என்னடி?
வளைந்த வில்போன்ற புருவமும்
கருணை நிறைந்த கண்களும்
செதுக்கிய அளவான மூக்கும்
ரவிவர்மனின் தூரிகையில்
வரையப்பட்ட தோற்றத்தை உடைய
உன் செவ்விதழ்களும்...
காதணிக்கு அழகு சேர்க்கும் காது மடல்களும்
பிஞ்சு வெண்டைக்காய் விரல்களும்
சங்கு கழுத்தும்..........
என எல்லா
எண்ணமுமாக இருந்தும் - நீ
என்னவளாக மாறாமல்
போனதேனடி?.....

என்னவளின் பிறந்த நாள்

24-Jan அன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அன்பு மனைவி மோகனாவிற்கு..... ..

ஏமாற்றமே வாழ்வு என்றிந்தவனை
என்னவளாக நீ வந்து
எல்லாரையும் அன்பால் அனுசரித்து
ஏற்றமிகு வாழ்வு வாழவைத்தாய்
ஆனாலும்
ஏமாற்றம் இன்னும் நம்மை
ஏமாற்றவே செய்கிறது செல்லமே
என் பிறந்த நாள்
உன் பிறந்த நாள்
நம் திருமண நாள்
புத்தாண்டின் முதல் நாள்
என நமக்கான
முதல் ஆண்டின்
முக்கிய நாட்களில் - உன்
முகம் காண இயலாமல்
முன்னாளில் வாழ்ந்தது போல
இந்நாளிலும் வாழவேண்டிய நிர்பந்தம்
வலிகளை தாங்கி
வாழ பழகியவளே - உன்
வாழ்வின் துணைவனின்றி
வர இருக்கும்
இந்த பிறந்த நாளில்
நமது முருகனின் அருளோடு
வசந்தத்துடன் வாழ்ந்திட
பாசத்துடன் வாழ்த்துகிறேனடி


என் பிறந்த நாள்

மனதுக்கு பிடித்தவர்களுடன்
மனதுக்கு பிடித்தமாதிரி
மற்றவர்களின் வாழ்த்துகளோடு
மகிழ்ச்சியாய் சென்றன - என்
கடந்து போன பிறந்த நாள்கள்

மனதுக்கு பிடித்த
மனைவியுடன் - என்
முதல் பிறந்த நாள்
மூச்சின் அடிநாதம் வரை
அந்த நாளுக்காக தவமிருக்க
ஆரம்பித்தேன்!...

ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆவலை அதிகரிக்க - நவீன
அடிமை வாழ்க்கை வாழும்
அடியேனை அந்நிய தேசம்
அனுப்பியது விதி

உலகை அறிமுகபடுத்திய பெற்றோர் இல்லை
உடன் பிறந்தோரும் சுற்றமும் இல்லை
நல்லதொரு வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் மனைவி இல்லை
நல்வழி படுத்திய நண்பர்கள் இல்லை


யாருமற்ற ஒரு தனி
யாத்ரிகனாய் முழு நாளும்
அலுவலகத்தில் தனிமையில்

அமைதியாய் கழிந்தது
என் பிறந்த நாள்

நான் வணங்கும் என் முருகனே
நாலு பேரு இல்லாமல்
நான் மட்டும் கொண்டாடும்
பிறந்த நாள் இனி வேண்டவே வேண்டாம்

மறக்கத்தான் நினைக்கிறேன்...

மாற்றத்தான் நினைக்கிறேன்
லட்டு போன்ற எண்ணங்கொண்ட
தினவெடுத்த தோள்களை உடையவளை!.....
மறக்கத்தான் நினைக்கிறேன்
லகானை நோக்கி செல்லும் குதிரையை போல
தினம் உன்னை நோக்கியே வரும் என் எண்ணங்களை!...
மாறத்தான் நினைக்கிறேன்
லத்தி சுழலும் இடத்தை
திரும்ப பார்க்கும் போதெல்லாம்!.....
மாறத்தான் நினைக்கிறேன்
லாவகமான வார்த்தைகளால்
திரும்பிய பக்கமெல்லாம்...
நேசத்தை நேசித்தவளை - தன்
சுவாசத்தை நேசிக்க மறந்தவளை
நான் யோசிக்காமலிருக்க!.. ஆயினும்
திரும்பிய திசையெங்கும் உன்னை ஞாபகபடுத்தும் செயல்களும்
லட்சோப லட்சம் மக்களை பாக்கும் போது துளிர்விடும் ஆசையையும்
மறக்க இயலவில்லையடி!..

காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?

மானமுள்ள தமிழா! உன்னை ஆளுவது ஒரு தமிழனா? நம் இனத்தை வேரறுத்தவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பா?
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
மத்திய அரசாங்கமா இல்லை எம் மானம் வித்து பிழைக்க விரும்பும் பிணந்தின்னி கூட்டமா?
உலக நாடுகளே, ஒரு இனத்தை அழித்த கொடுமைக்கு எந்த தண்டனையும் இல்லையா?
நாளை உங்கள் நாட்டுக்கு இது போல நடந்தாலும் இப்படிதான் அமைதியாக இருக்க போகின்றீர்களா
நமக்கு கொஞ்சமும் மானம் இல்லையா?
பதவிக்கும் பணத்துக்கும் இன்று நம் இன மானத்தை அடகு வைத்து நம்மை கவனிக்காதவர்கள் நாளை நம்மையும் கொன்று அல்லது விற்று விட எவ்வளவு நேரம் ஆகும்?
போராடினால் சிறைகளில் அடைப்பதால் எம் முன்னோர் தந்த வீரம் மழுங்காது,
மானங்கெட்ட எங்களை ஆளும் நபர்களுக்கு பின்னர் மனித நேயமுள்ள ஒருவன் வருவான் மானத்தோடும் அதே வீரத்தோடும் அன்று நீதி வெல்லும் எம் இனம் மீண்டும் தலை நிமிரும்.

தேவை மீண்டும் சுதந்திரம்

(நான் பணி புரியும் நிறுவனத்தில் வரும் சுதந்திர தினத்துக்காக நடக்க இருக்கும் "தேசப்பற்று" எனும் தலைப்பிலான கவிதை போட்டிக்கு அனுப்ப பட்ட என் கவிதை)
பகத்சிங்கும் பாரதியும்
நேதாஜியும் நேரும்
படேலும் திலகரும்
காந்தியும் கட்டபொம்மனும் - என
எங்கள் சுதந்திர காற்றுக்கு வித்திட்ட
எண்ணற்ற தலைவர்களே!..
எம் வாழ்வுக்ககாக
உம் வாழ்வை
அர்ப்பணித்து - ஆர்ப்பரித்து
அன்னியரை நம் மண்ணிலிருந்து
அகற்றிட நீங்கள் பட்ட
அல்லல்களை ஆழ்மனதில் சுமந்து - நீவிர்
கனவு கண்ட அமைதி - துணை
கண்டமாய் இந்தியாவை
காக்கின்றோம் - எம் கண்ணிமைபோல!..
ராணுவ வலிமை
அறிவியல் வலிமை
விஞ்ஞான வலிமை
உலக வெப்பமயமாதல் தடுப்பு - என
எங்களின் கனவு 2020 இல் இருந்தாலும்
இந்த அறுபத்து நான்காவது
சுதந்திர நாளில் - சிறு
ஏக்கத்தோடு உம்மை நினைக்கின்றோம்!...
ஆம்!..
புதிய பொருளாதாரக்கொள்கையால்
நம் நாட்டு சிறு வணிகம் பாதிக்கப்படுவதும்
தன் தாயக தண்ணீரில் அண்டை நாட்டினரால்
சுட்டு கொள்ளப்படும் இந்தியனையும்
தன் மண்ணுக்குள்ளேயே நக்சல்கள் என கூறி
சுடுகாடாக்கப்படும் இந்திய மண்ணையும் காத்திட
உம்மை போன்ற தலைவர்கள் இல்லையே
என்ற கவலையோடு!...
அந்நியனிடம் அடிமைப்பட்ட
காலம் கடந்து - நம்
நாட்டு புல்லுருவிகளிடமிருந்தும்
அந்நிய சக்திகளிடமிருந்தும் - நம்
பாரத தேசத்தை காத்திட
மீண்டும் பிறந்திட மாட்டீரா?

நினைவுகள்...

புத்தகத்தில் மயிலறகு வைத்தால்
குட்டி போடும் என - என்
சிறு வயதில் கேள்விபட்டேன்
அது உண்மையா என தெரியவில்லை
ஆனால் - உன்
நினைவுகளை என்
மனதினில் வைத்தேன் அது
பல்கி பல குட்டி போட்டு
இன்று என் மனமெல்லாம்
உன் நினைவுகள்
மட்டுமே நிரம்பியுள்ளது

தேவதைக்கான கனவு...

முகம் கொண்டு பாராமல் என்
மூச்சு காற்றின் கடிவாளத்தை
மூன்றாண்டுகள் கையில் வைத்திருந்தவளின்
முகம் காணும் ஒரு ஏக்கம்

என் உலகத்தை தலைகீழாய்
புரட்டி போட்டு
புது வடிவத்தில்
அதே உலகத்தை
கானசெய்தவளை
காணவேண்டுமென்ற துடிப்பு

என்னின் எண்ணங்களை
என்னையறியாமலே
எடுத்து சென்றவளின்
எண்ணங்களுடன்
என்னை இணைத்துகொள்ளும்
ஒரு முயற்சி

இவையனைத்தும் நனவானது
இவனின் தேவதைக்கான
நேற்றைய கனவில்...


உன் புன்னகை


உன்னின் புன்னகையை பார்க்கும்
ஒவ்வொரு நொடியிலும் -
நமக்கான தோட்டத்தில்
புதிதாய் பூத்துக்குலுங்கும்
ரோஜா பூக்களை பார்க்கும்
பரவசம் கிடைக்குதடி!...

என் காதலியே!..

என் காதலியே!...
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
மூச்சு காற்றாய் என்
இதயத்தின் அடிவருடுகிறாய்
உன்னை சந்திக்கும் நாழிகைகளில்
வெப்பகாற்றை மட்டும் என் மீது
உமிழ்கிறாயே!.. ஏனடி என் கண்ணே?....

என் தோழியே!...

என் தோழியே!...
என் நட்புக்கு அடித்தளமிட்டவளே...
என்னையும் சாதிக்க தூண்டியவளே!...
என் எழுத்துக்களின் விருச்சமாய் அமைந்தவளே!...
என்னையே எனக்கு புதிதாய் தந்தவளே! ...
என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
தந்த அலுவலகத்தில் - நீ
என்னை கடந்து சென்ற சந்தர்ப்பத்தில்
என்னையே எனக்கு மீட்டு தந்த - உன்
ஒத்தை சிரிப்பு கூட கிடைக்காத தருணத்தில்
என் ஒத்தை இதயத்தை
ஓராயிரம் பேர் சம்மட்டியால்
ஓங்கி அடித்தது போல
ஒரு வலி தந்ததேனடி?.........

உயிரானவளே...

கதிரவன் முகம் காட்டும்
காலை பொழுதில்... கண்ணே!...
காற்றினில் அலைபாயும் - உன்
கார்மேக கூந்தலுடன்...
ஒத்தை உதட்டு சுழியில் - என்
ஆண்மையை அசைத்து விடும்
ஆழப்பார்வையால் என்
உயிர் வாங்கியதேனடி?...

அறியா காரணம்

மாலை வெயிலின்
மங்கிய வெளிச்சத்தில்
மஞ்சள் நிறத்தவளே! - உன்
கொஞ்சும் புன்னகையில்!.. - என்னை
கொள்ளை கொண்டவளே!...
அர்ச்சுனனின் வில்லை ஞாபகப்படுத்தும்
உதட்டினை உடையவளே!...
உன் மனதை போன்ற
வெள்ளை முத்தரிசி பற்கள்!..
அடர்ந்த புருவங்கள்
அந்த காந்த கண்கள்
பீன்ஸ் விரல்கள்
அறைநிலவாய் நகங்கள்
அமைதியான அர்த்தமான
ஆர்ப்பட்டமில்லா அன்பு வார்த்தைகளை
வெளிப்படுத்தும் குணம்
இன்னும் இன்னும்
உன்னிடம் நான்
கட்டுண்டதற்க்கான
காரணம்.. ஏராளம்
ஆனால்
காரணம் ஒன்று சொல்லடி
என் கண்ணே
என் காதலை உதறியதற்க்கு!

உன்னோடு...

ஒரு நாள் ஒரு பொழுது
உன் பாசத்தை நீ கொடுத்தால்
உன் அருகாமையை எனக்கு உணர்த்தினால்
உன் அன்பினை அள்ளி தந்தால்
உன் கையால் உணவருந்தினால்
உன் கண்களில் உலகினை கண்டால்
உன்னுடன் வீதிகளில் உலா வந்தால்
உன்னுடன் நம் உறவுகளை சந்தித்தால்
உனக்காக நான் துடிக்க அனுமதித்தால்
உனக்காக என்னையே அர்ப்பணிக்கவிட்டால்
அந்த நாள் அந்த பொழுது
இந்த உலகில் நான் உச்சம் அடைவேனடி!....


நாள் எதுவோ?

எல்லாருக்கும் பிடித்தமானவளே!...
எனக்கு மட்டும் பிரியமானவளே!...
மையிட்ட உன் காந்த கண்களா - என்
மாலையினை தாங்கபோகும் உன் தோள்களா
மையல் கொள்ளும் உன் அன்னநடையா
மனதை மயக்கும் உன் மந்திர பேச்சா
கொடியிடை குயிலே!.. என்னை
கொள்ளை கொண்ட மயிலே!...
உலகத்து அழகினை எல்லாம் - நான்
உன்னிடமிருந்து ரசிக்கப்போகும் நாள் எதுவோ?


என் காதலியே!..

என் காதலியே!.. - உனக்காக
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும்
காவியம் படைத்திடுவேன் - உன்
கண் அசைவு கிடைத்து விட்டால்
காலத்தையும் மாற்றி அமைப்பேன்

பிரியமானவளே!...

பிரியமானவளே!...
பிரியாவிடை தரும் முன்
பிரியமுடன் நீ பார்த்த
பார்வையின் பொருள் என்னவோ?

அம்மா...

எனது 100 வது படைப்பு இது...


அய்யிரண்டு மாதம் என்னை
ஆசையோடு வயிற்றில் சுமந்தாய்...
அய்யாறு வருடம் என்னை
அன்போடு நெஞ்சில் சுமக்கிறாய்...
நவீன வசதிகள் இல்லாத கிராமத்தில்
நாகரிகமாய் எம்மை வளர்த்தாய்....
படுக்கை வசதிக்காக - உன் துணிகளையே
படுக்கையாய் எமக்கு மாற்றி தந்தாய்....
படிப்பறிவில்லாத நீ உன் பிள்ளைகளை
பட்டபடிப்புக்கு அனுப்பி தீருவேன் - என
சபதமேற்றாய்.... சத்தியம் செய்தாய்....
சற்றும் ஓய்வின்றி உன்
ஆயுளை எமக்காய் அர்ப்பணித்தாய் - உன்
ஆசைகளை எங்களுக்காய் புறந்தள்ளினாய் ....
என்ன தவம் யாம் செய்தோம்
எம் அன்னையாய் உன்னை பெற!..
என்ன செய்து எம் கடன் அடைப்போம்
உன் ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர!....


திருமண அழைப்பிதல்..

வாழ்க்கை எனும் பூஞ்சோலையில்...
எங்களையும் மணமுள்ள மலராக்கும்
எங்கள் இதயத்திலிருக்கும் தோழமையே...
எதிர்வரும் 12-02-2010 வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி துளிகள் வரை ...
குதுகலமூட்டும் இந்த நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள்!

ஆம்! இந்த காலை பொழுதில் ஆரம்பமாகிறது
உங்கள் நட்புகள் -

நாங்கள் இருகரம் பற்றும் இல்லறத் தொடக்கவிழா !
இந்த நாளில் உங்களின் வருகைக்காகவும் வாழ்த்துதலுக்காகவும்
ஒரத்தநாடு LGVK திருமண மண்டபத்தில் - மணவறையில்
வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்

எங்களை வாழ்த்தும் முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீங்களும் ஒருவர் என எண்ணி அகமகிழ்கிறோம்!
நீங்கள் வரும் பாதையிலே
எங்கள் ஆவலும், நட்பும் மலர் தூவி அணிவகுத்து நிற்கும்
உங்கள் வருகை எங்களுக்கு வசந்தம் ஆகட்டும்
உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் எதிர்வரும் சாதனைகளுக்கு விருட்சமாகட்டும்
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள் ....
அந்த அன்பு மழையில் எங்கள் வசந்தமும் வரலாறாகட்டும்

அவசரமில்லாமல் வாருங்கள் - ஆனால்
அவசியம் வாருங்கள் ....

நட்பின் வரவை வாசல் வந்து வரவேற்று
தோழமையின் வாழ்த்தை சேகரிப்பது
இளவழுதி & மோகனா


பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழர்களின் திருநாளில்
உழவர்களின் மகிழ்ச்சி நாளில்
உழவர்களின் உயிரான
கால்நடைகளை (மாடு) வழிபடும்
காவிய நாளில் - உங்களின்
வாழ்வில் மகிழ்வும்
உங்களின் குடும்பத்தில் நிறைவும் பெருக
உங்கள் நண்பனின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
இளவழுதி வீரராசன்

காற்றாய் நீ!...

காற்றை போலனவளா நீ - என்னால்
காற்றையும் பிடிக்க இயல வில்லை
உன்னையும் பிடிக்க இயல வில்லையே!..

கனவுகளில் நீ!...

உன்னோடு வாழும் வாழ்க்கை
கனவுகளில் மட்டும் தான் என்றால்
பகலே எனக்கு வேண்டாமடி...

இதயம் தொட்டவள்...

அதிராமல் வெளிப்படும் உன்
அன்பு வார்த்தைகளும்
கனிவான உன்
கருணை பார்வையும்
ஆப்பிள் கன்னமும்
அழகாய் அமைந்த
குடைமிளகாய் மூக்கும்
குண்டு கண்களும்
சின்ன உதடுகளில்
மெல்ல வழிந்தோடும்
உன் சிரிப்பும் - என்
சிந்தனைகளை சிதறடிக்கவில்லை!..
மாறாக
ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...
அடியேன் உன்னிடம் - என்
ஆயுளை ஒப்படைத்தேனடி

கூந்தல்...

கருமேக கூட்டம் போன்ற
கடல் அலையை ஞாபகபடுத்தும் - உன்
கருநிற கூந்தலை காணும்போதெல்லாம்
களிப்புற்று இருந்தேன்!... ஏனோ
காளையிவனின் உள்ளமறியாமல்
காலத்தின் மேல் பழிசுமத்தி - என்
காதலை உதறி தள்ளியது போல - உன்
காற்றாட்டு கூந்தலை
கால் அளவுக்கு நறுக்கியதேனடி!..

காலத்தால் மாற்றமுடியாதது

உன்னோடு வாழ்தல்
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும்
காலத்தால் மாற்றமுடியாததடி!...

புரியாத புதிராய்...

மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?

பறித்தல் தகுமோ?

மின்னலை பார்த்தால்
கண் பார்வை பறிபோகும் என்றார்கள்
நான் - உன்
புன்னகையை மட்டும் தானே
கண்டேன் - பிறகு ஏன்
என்னையே பரிதவிக்க பறித்துசென்றாய்?

பிரியமானவளே!...

சாதி எனும் சம்பிரதாய சடங்குகளில் - என்
பிரியமானவளின் பிரிய காதலை
சமாதியாக்கிய என் அவல சமுதாயமே!...
பிரியமானவளின் கரங்களுக்குள்
பிரியமுடன் ஒருநொடி வாழ்ந்ததுண்டா?
பிரியமானவளின் மூச்சு காற்றை
பிரியத்துடன் சுவாசித்ததுண்டா?
பிரியமானவளின் நெருக்கத்தின் சூடு
பிரியத்துடன் அனுபவித்ததுண்டா?
பிரியமானவளின் நினைப்பே மகிழ்ச்சியடைய வைக்குமே
பிரியத்துடன் மனதில் அதை உணர்ந்ததுண்டா?
பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும் - இதோ என்
பிரியமானவளிடம் நான் பிரியமுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!..
வரும் தலைமுறையாவது தழைத்திட
சாதி மதமற்ற சமத்துவ காதலை
பிரியமுடன் வாழ வைப்போம்

மறத்தல் தகுமோ

உன்னை நீ மறக்க சொன்னாய் என்பதற்காக
உன்னை மறக்க நினைத்து; யதார்த்த
வாழ்வில் கால் பதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் - நீ
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பாக
பள்ளிமாணவியின் பயமில்லா செயலில்
கல்லூரிமாணவியின் செல்ல சில்மிசங்களில்
இளமங்கைகளின் வெட்க நாணத்தில்
தாயின் பாசத்தில் பரிதவிப்பில்
தந்தையின் அன்பில் அக்கரையில்
ஆசானின் கண்டிப்பிலும் வழிகாட்டுதலிலும்
இப்படி என் எதிர்படும் எல்லோரின்
ஏதோ ஒரு செயலில் உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறாயேடி - பிறகு
எப்படியடி உன்னை நான் மறக்க இயலும்?

கரைசேர்ப்பாயா

என் எண்ணங்களில் நீந்தி
என்னுயிரை எடுத்து சென்றவளே!
என் நரம்புகளில் நடனமாடி
என்னின் ஒவ்வொரு நாழிகையிலும்
என்னையே தின்றவளே!
என்னின் இரத்தநாளங்களின் ஊற்றாக
என்றும் இருந்தவளே! - இதோ
இன்று நீயில்லாமல்
என்னுடல் ஜீவனில்லாமல் வாழ்கிறதடி!
எல்லோருக்கும் பிரியமானவளே
என்னை கரைசேர்ப்பாயா - இல்லை
கல்லறையில் தான் காண்பாயா?

பிரிவு

தித்திக்கும் உன் பேச்சால் திரும்பிய
திசையெங்கும் நட்பினை நீ பெற்றாய்!
எந்த சூழலிலும் உன் சிரிப்பால்
எல்லாரையும் கலகலப்பாக்குவாய்! - ஆம்
மலர்ந்த உன் முகத்துக்கு
மகுடமாய் உன் சிரிப்பு!
உன் சுற்றத்தை எப்போதும்
மகிழ்வுடன் இருக்க செய்தவளே!..
அனைவரின் முகத்திலும் எந்நேரமும்
புன்னகையை பொன்னகையாக்கியவளே!
என் புன்னகையை மட்டும்
உன்னுடனே எடுத்து சென்று
என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியதேனடி?
எனக்கானவளாய் நீ இருந்தும்
என்னவளாக நீ மாறாமல் போனதேனடி?